ADVERTISEMENT

பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: பாஜக- ஜேடியூ கூட்டணி பிரம்மாண்ட வெற்றி! ஆர்ஜேடி- காங்கிரஸ் படுதோல்வி!

Published On:

| By Mathi

Bihar Election Counting

பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் (Bihar Election Vote Counting Today) இன்று நவம்பர் 14 காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் பாஜக- ஜேடியூ பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளன. ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியைத் தழுவி உள்ளது.

பீகாரில் மொத்தம் 243 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன; ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 122.

ADVERTISEMENT

களத்தில் கட்சிகள்

பீகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) பாஜக, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (JDU), சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), ஜிதன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகியவை இடம் பெற்றிருந்தன. இந்த அணியில் பாஜக மற்றும் JD(U) தலா 101 தொகுதிகளில் போட்டியிட்டன.

ADVERTISEMENT

காங்கிரஸ்- ஆர்ஜேடியின் மகாபந்தன் INDIA கூட்டணியில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD), இந்திய தேசிய காங்கிரஸ் (INC), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை (CPIML-Liberation), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPIM) ஆகியவை இடம் பெற்றிருந்தன.

பிரஷாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சி (JSP), ஆம் ஆத்மி கட்சி, தேஜஸ்வி யாதவின் அண்ணன் தேஜ் பிரதாப் யாதவின் ஜனசக்தி ஜனதா தளம் (JJD) உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் இருந்தன.

ADVERTISEMENT

முக்கிய வேட்பாளர்கள்

  • பீகாரில் களம் கண்ட வேட்பாளர்கள் எண்ணிக்கை 2,616
  • முதல்வர் நிதிஷ்குமார், இந்த சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிடவில்லை. சட்ட மேலவை உறுப்பினராக உள்ளார்.
  • தேஜஸ்வி யாதவ், ராகோபூர் தொகுதியில் போட்டியிட்டார். இங்கு யாதவ் சமூகத்தினர் அதிகம்.
  • துணை முதல்வரான பாஜகவின் சாம்ராட் சவுத்ரி, தாராபூர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். மற்றொரு துணை முதல்வரான பாஜகவின் விஜய்குமார் சின்ஹா லக்கிசாரை தொகுதியில் மீண்டும் போட்டியிடுட்டுள்ளார்.
  • தேஜஸ்வி யாதவின் அண்ணன்,
  • தேஜ் பிரதாப் யாதவ் (JJD), வைஷாலி மாவட்டத்தில் உள்ள மகுவா தொகுதியில் போட்டியிட்டார்.
  • பாஜகவின் முன்னாள் துணை முதல்வர் ரேணு தேவி பெட்டியா தொகுதியிலும் பாஜகவின் மைதிலி தாக்கூர் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலினகர் தொகுதியிலும் போட்டியிட்டுள்ளனர்.
  • 7 முறை சட்டமன்ற தேர்தலில் வென்ற பாஜகவின் பிரேம்குமார், கயா டவுன் தொகுதியில் போட்டியிடுகிறார்.

வரலாறு காணாத வாக்குப் பதிவு

  • பீகாரில் மொத்த வாக்காளர்கள் 7.45 கோடி.
  • முதல் கட்டமாக நவம்பர் 6-ந் தேதி 121 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில் 65.08% வாக்குகள் பதிவாகின.
  • 2-வது கட்டமாக நவம்பர் 11-ந் தேதி 122 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடந்தது. இதில் 68.76% வாக்குகள் பதிவாகின.
  • பீகாரில் இரு கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தல்களில் பதிவான மொத்த வாக்குப் பதிவு 66.9%. பீகார் தேர்தல் வரலாற்றிலேயே மிக அதிகமான வாக்குப் பதிவு இது.

பீகார் எக்ஸிட் போல் முடிவுகள்

பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக பல்வேறு எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை தற்போது ஆளும் பாஜக- ஜேடியூ ஆட்சியே மீண்டும் அமையும் என கணித்துள்ளன.

சில எக்ஸிட் போல் முடிவுகள:

  • Matrize Exit Poll: பாஜக கூட்டணிக்கு 147-167 காங்கிரஸ் கூட்டணிக்கு 70-90 இடங்கள்
  • Dainik Bhaskar: பாஜக கூட்டணிக்கு 145-160; காங்கிரஸ் அணிக்கு 73-91 இடங்கள்
  • People’s Pulse: பாஜக கூட்டணிக்கு 133-159; காங்கிரஸ் கூட்டணிக்கு 75-101 இடங்கள்
  • Axis My India: பாஜக கூட்டணிக்கு 43% வாக்குகள்; காங்கிரஸ் கூட்டணிக்கு 41% வாக்குகள் கிடைக்கும்.

ஆதிக்கம் செலுத்தும் ஜாதி, மத வாக்குகள்

  • பிராமணர், பூமிஹார், ராஜ்புத், காயஸ்த் என ஆதிக்க ஜாதியினர் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை ஆதரிக்கின்றனர்.
  • யாதவர்கள் (மக்கள் தொகையில் 14.3%) ஆர்ஜேடியின் வாக்கு வங்கி.
  • நிதிஷ்குமாரின் ஜேடியூவுக்கு குர்மி ஜாதியினர் வாக்கு வங்கி.
  • பீகாரில் தலித்துகள், லோக் ஜனசக்தி கட்சி (LJP) மற்றும் JD(U) கட்சிகளின் வாக்கு வங்கிகளாக உள்ளன.
  • இந்துக்களின் வாக்குகளை ஒருங்கிணைப்பதில் பாஜக எப்போதும் போல முனைப்புடனே இருக்கின்றன.
  • பீகாரில் 17.7% உள்ள முஸ்லிம்கள் ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணியின் வாக்கு வங்கியாக உள்ளனர்.
  • சீமாஞ்சல் பகுதியில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சிக்கு கணிசமான ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகிறது.
  • இம்மாநிலத்தில், மேற்கு பீகார் பகுதியில் பாஜக வலுவாக உள்ளது; மத்திய பீகார் சமவெளிப் பகுதிகளில் ஆர்ஜேடி செல்வாக்கு செலுத்துகிறது; வடகிழக்கு மற்றும் போஜ்புரி பகுதிகளில் சிறிய கட்சிகளும் உள்ளூர் பிரச்சனைகளின் அடிப்படையிலான ஆதரவும் முதன்மை பெறுகின்றன.

வாக்கு எண்ணிக்கை

  • பீகார் வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14) காலை 8 மணிக்கு தொடங்கியது.
  • 38 மாவட்டங்களில் மொத்தம் 46 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்
  • 46 வாக்கு எண்ணும் மையங்களில் மொத்தம் 4,372 மேஜைகள் போடப்பட்டுள்ளன.
  • வாக்கு மையங்களில் அனுமதிக்கப்பட்ட கட்சிகளின் முகவர்களின் எண்ணிக்கை 18,000
  • காலை 8.30 மணிக்கு தபால் வாக்குகளின் முடிவுகள் வெளியாகும்
  • வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கூடுதலாக 106 கம்பெனி பாதுகாப்பு படையினரும் இணைந்துள்ளனர்.

2020-ம் ஆண்டு தேர்தல் முடிவு

2020-ம் ஆண்டு பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக- ஜேடியூ கூட்டணி 125 இடங்களைக் கைப்பற்றியது; காங்கிரஸ் கூட்டணிக்கு 110 இடங்கள் கிடைத்தன.

தபால் வாக்குகளில் முன்னிலை

இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்குகளைத் தொடர்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகவும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது; காங்கிரஸ்- ஆர்ஜேடி கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

பிற்பகல் 2.30 மணி நிலவரம்

  • பாஜக 92
  • ஜேடியூ 82
  • ஆர்ஜேடி 26
  • சிராக் பாஸ்வானின் எல்ஜேபி 20
  • மஜ்லிஸ் கட்சி 6
  • அவாமி மோர்ச்சா 5
  • ஆர்எஸ்ஹெச்டிஐகேஎம் 4
  • காங்கிரஸ் 4
  • சிபிஐ(எம்-எல்) 2
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share