பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக, நிதிஷ்குமாரின் ஜேடியூ 101 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளன. இதில் ஜேடியூவை விட பாஜக அதிகமான இடங்களில் முன்னிலை பெறும் நிலை உள்ளது.
பாஜகவைப் பொறுத்தவரை கூட்டணி கட்சிகள் என்றும் பார்க்காமல் தமது வெற்றிக்கான தேர்தல் வியூகத்தை எப்போதும் செயல்படுத்தும். பீகாரில் 2020 தேர்தலில் கூட்டணி கட்சியான நிதிஷ்குமாரின் ஜேடியூ அதிக இடங்களில் வெற்றி பெறுவதைத் தடுக்க சிராக் பாஸ்வானுக்கு ஆதரவு தந்தது. அதாவது பாஜக கூட்டணியில் இடம் பெற்ற ஜேடியூவுக்கும் ஆதரவு; பாஜக கூட்டணியை விட்டு வெளியேறிய சிராக் பாஸ்வானுக்கும் ஆதரவு என்ற பார்முலாவை 2020 தேர்தலில் கடைபிடித்தது பாஜக.
தற்போதைய 2025 பீகார் தேர்தலில், பாஜகவும் ஜேடியூவும் தலா 101 தொகுதிகளில் போட்டியிட்டன. சிராக் பாஸ்வானின் கட்சிக்கும் 29 தொகுதிகளை ஒதுக்கியது. தற்போதைய வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் ஜேடியூவை விட பாஜகதான் சில நேரங்களில் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெறுகிறது. இதனால் ஜேடியூ தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்திலும் பாஜக கூட்டணியில் அதிமுக இடம் பெற்றுள்ளது; அதிமுகவை ஏற்காத டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா, செங்கோட்டையன் தனியாக இருக்கின்றனர். சட்டமன்ற தேர்தலின் போது பீகார் பாணியில் அதிமுகவுக்கும் ஆதரவு; அதிமுகவை எதிர்க்கிற அணிக்கும் ஆதரவு என்ற நிலைப்பாட்டை பாஜக எடுத்தால் அதிமுகவுக்கு மிகப் பெரிய பின்னடைவைத் தர வாய்ப்புள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
