ADVERTISEMENT

மேகதாது அணை: உச்சநீதிமன்ற உத்தரவால் தமிழக உரிமை பறிபோகிறதா? எதிர்க்கட்சிகள் சொல்வது என்ன?

Published On:

| By Mathi

Cauvery Tamil Nadu

மேகதாது (Mekedatu Dam) அணை தொடர்பாக உச்சநீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவால் தமிழகத்தின் உரிமை பறிபோவதாக அதிமுக, பாஜக கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை கர்நாடகா அரசு தயாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது; அதே நேரத்தில் இந்த அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்தால் அப்போது உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடி சட்டப்படியான நடவடிக்கை எடுக்கலாம் என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு.

ADVERTISEMENT

இந்த உத்தரவால் தமிழகத்தின் உரிமை பறிபோய்விட்டதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க இன்றைய தினம் உச்சநீதிமன்ற அனுமதி அளித்துள்ளது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

ADVERTISEMENT

தமிழகத்தை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் கடுமையான வாதங்களை வைக்காமால், இத்தீர்ப்புக்கு வழிவகுத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மேகதாது அணை வழக்கில் தமிழக அரசின் வாதம் “முதிர்ச்சியற்றது” என விமர்சித்து, கர்நாடக அரசை அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

தமிழக விவசாயிகளின் தலையெழுத்தை மாற்றவல்ல முக்கிய வழக்கில், முறையான, வலுவான வாதங்களைத் திமுக அரசு முன்வைக்காததே இன்றைய தீர்ப்புக்கான மூலக்காரணம் என்பது திண்ணம்.

ADVERTISEMENT

இப்படி தங்களது திறனற்ற நிர்வாகத்தினாலும், கர்நாடக காங்கிரஸ் அரசுடனான கள்ளக்கூட்டணியின் காரணமாகவும், தமிழக விவசாயிகளின் அடிவயிற்றில் கனலை மூட்டும் இத்தீர்ப்புக்கு வழிவகுத்த திமுக அரசைத் தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது என கூறியுள்ளார்.

அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

ஆனால் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “காவிரி ஆற்றின் குறுக்கே 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட ஓர் அணையை மேகதாதுவில் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை கர்நாடக அரசு தன்னிச்சையாகத் தயாரித்து, மத்திய நீர்வளக் குழுமத்திற்கு 2018ஆம் ஆண்டில் சமர்ப்பித்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு மாண்பமை உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.

இத்திட்டத்தை மேற்கொள்வதற்காகத் தேவைப்படும் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கைக்கான ஆய்வு வரம்புகளுக்கு (Terms of Reference) ஒப்புதல் பெறுவதற்காக, ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தை கர்நாடக அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு அணுகிய போது, மற்றொரு மனுவை மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து தமிழ்நாடு அரசு அதைத் தடுத்து நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து, கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையில் மேகதாது திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியபோது, தமிழ்நாடு அரசு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்ததோடு, அதற்கான எந்தவிதமான அனுமதியையும் அளிக்கக்கூடாது என்று ஒன்றிய அரசையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தையும் வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 21-3-2022 அன்று ஒருமனதாக தீர்மானத்தையும் இந்த அரசு நிறைவேற்றியது.

மேலும், முதலமைச்சர் அவர்கள் இந்திய பிரதமர் அவர்களை 31-3-2022 மற்றும் 26-5-2022 அன்று நேரில் சந்தித்த போது மேகதாது திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என ஒன்றிய ஜல்சக்தி அமைச்சருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் வலியுறுத்தினார். இந்த காலக்கட்டத்தில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு, கர்நாடக அரசின் கருத்துருவை பரிசீலிக்க அதிகாரம் உள்ளது என ஒன்றிய அரசு கருத்து தெரிவித்ததையடுத்து, இந்த விரிவான அறிக்கை பற்றிய பொருண்மைகள் இந்த ஆணையத்தின் விவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்ட போதும், இதனை பரிசீலிப்பதற்கான அதிகாரம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு இல்லை என்பதை வலியுறுத்தி மேலும் ஒரு மனு 7-6-2022 அன்று தமிழ்நாடு அரசால் மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வாறு தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளின் அடிப்படையில், அன்றிலிருந்து இன்றுவரை காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கை விவாதிக்கப்படவில்லை. மேலும், தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு தொடர் முயற்சிகளின் பயனாக, மேகதாது அணை பற்றிய கருத்துருவை காவிரி நீர் மேலாண்மை ஆணையம், மத்திய நீர்வளக் குழுமத்திற்கு 9-2-2024 அன்று திருப்பியனுப்பியது. இது தமிழ்நாடு அரசின் முயற்சிக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும்.

இந்த சூழ்நிலையில், மேகதாது அணை குறித்துப் பேசிய மாண்புமிகு கர்நாடக மாநில முதலமைச்சர் அவர்கள், இந்த பாசன ஆண்டு 2025-2026இல் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவேண்டிய நீரின் அளவை விட கூடுதலாக நீர் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ள கூற்று எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. அதிக மழைப்பொழிவு இருக்கக்கூடிய ஆண்டுகளில் வேறுவழியின்றி தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு நீரைத் திறந்து விடுகிறதேயன்றி, வறட்சி ஆண்டுகளில் நமக்கு விகிதாச்சாரப்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவிற்கான நீர் வழங்கப்படுவது இல்லை என்பதையும், மேகதாது அணை கட்டப்பட்டால் வறட்சி ஆண்டுகளில், நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நீர் கிடைக்காத சூழல் உருவாகும் என்பதையும் அனைவரும் அறிவார்கள்.

எனவே, மேகதாதுவில் அணை கட்டப்படுவது என்பது, தமிழ்நாட்டு விவசாயிகளை மிகவும் பாதிப்புக்குள்ளாக்குவதோடு, காவிரி நதிநீர்ப் பிரச்சினை தொடர்பான நடுவர் மன்றம் மற்றும் மாண்பமை உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு முரணாகவும் அமையும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

இந்நிலையில், இந்த அணை தொடர்பான வழக்குகளை விசாரித்த மாண்பமை உச்சநீதிமன்றம், இன்று (13-11-2025) மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தமிழ்நாடு அரசின் கருத்துக்கள் அனைத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய நீர்வளக் குழுமத்திடம் தெரிவிக்கலாம் என்றும், தமிழ்நாடு அரசின் கருத்துக்களைக் கேட்காமல் எந்தவொரு முடிவும் எடுக்கக்கூடாது என்றும் ஆணையிட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில், வெற்றிகரமாக மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தியதைப் போன்றே, இனியும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமும், மத்திய நீர்வளக் குழுமத்தின் முன்பும் தமிழ்நாடு அரசு தனது வலுவான வாதங்களை முன்வைக்க உள்ளது.

இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மாண்பமை உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டதாக சில தவறான தகவல்கள் வெளிவருவது கண்டிக்கத்தது என்பதையும், இத்தகவலில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். முதலமைச்சர் அவர்களின் தலைமையில் செயல்படும் திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரை, காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. காவிரி நடுவர் மன்றம் மற்றும் அதனைத் தொடர்ந்து மாண்பமை உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் எந்தவொரு முயற்சியையும், தமிழ்நாடு அரசு முளையிலேயே கிள்ளி எறியும் என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share