பெங்களூரு என்றாலே ஐடி நிறுவனங்களும், இரவு நேரக் கொண்டாட்டங்களும் தான் நினைவுக்கு வரும். ஆனால், அங்கே நடந்த ஒரு ‘பார்ட்டி’ கொண்டாட்டம், தற்போது ரத்த வெள்ளத்தில் முடிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸைக் கண்டு பயந்து, பைப்பில் இறங்கித் தப்பிக்க முயன்ற இளம்பெண், 4-வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிருக்குப் போராடி வருகிறார்.
நள்ளிரவு பார்ட்டி: பெங்களூரு ப்ரூக்ஃபீல்ட் (Brooke field) பகுதியில் உள்ள ‘சீ எஸ்டா லாட்ஜ்’ (Sea Esta Lodge) என்ற தங்கும் விடுதியில், 21 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனது 7 நண்பர்களுடன் சேர்ந்து மூன்று அறைகளை முன்பதிவு செய்திருந்தார். சனிக்கிழமை இரவு தொடங்கிய இவர்களது பார்ட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நீடித்துள்ளது.
நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பாட்டுச் சத்தம், கூச்சல் என அமர்க்களப்படுத்தியுள்ளனர். இதனால் தூக்கம் கெட்டுப்போன அக்கம் பக்கத்தினர், பொறுக்க முடியாமல் அவசர உதவி எண்ணான 112-க்கு அழைத்து போலீஸில் புகார் அளித்தனர்.
போலீஸ் வருகையும், பதற்றமும்: புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், அந்த இளைஞர்களை எச்சரித்துள்ளனர். “சத்தம் போட்டுப் பிறருக்குத் தொந்தரவு கொடுக்கிறீர்களே” என்று கண்டித்துள்ளனர். (இதற்கிடையில், போலீஸார் அந்த இளைஞர்களிடம் பணம் கேட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது, ஆனால் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை).
போலீஸ் வந்ததைக் கண்டு அந்த 21 வயது இளம்பெண் கடும் அதிர்ச்சியும், பதற்றமும் அடைந்துள்ளார். போலீஸிடம் சிக்கி விடுவோமோ என்ற பயத்தில், அறையிலிருந்து தப்பிக்க விபரீத முடிவெடுத்துள்ளார்.
தவறி விழுந்த சோகம்: நான்காவது மாடியில் இருந்த பால்கனிக்குச் சென்ற அவர், அங்கிருந்த கழிவுநீர் குழாயைப் (Drain Pipe) பிடித்துக்கொண்டு கீழே இறங்க முயற்சித்துள்ளார். ஆனால், பிடிமானம் நழுவியதால், 4-வது மாடியிலிருந்து நேராகக் கீழே விழுந்தார்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில், அந்தப் பெண்ணுக்குத் தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வழக்குப்பதிவு: இதுகுறித்து அந்தப் பெண்ணின் தந்தை ஆண்டனி போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில், “விடுதியில் பால்கனியில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை” என்று கூறி விடுதி உரிமையாளர் மீது கவனக்குறைவு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த இடத்தில் இருந்த நண்பர்கள், விடுதி ஊழியர்கள் மற்றும் போலீஸாரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஒரு கணம் ஏற்பட்ட பதற்றம், ஒரு கொண்டாட்டத்தையே சோகத்தில் முடித்துவிட்டது.
