நீதிபதிகளைக் காட்டிலும் வழக்கறிஞர்களுக்கு அதிக ஊதியம் கிடைப்பதால் நீதிபதிகள் பதவிக்கு செல்ல பெரும்பாலான வழக்கறிஞர்கள் விரும்புவதில்லை என்று குறிப்பிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், நீதிபதிகளை தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நேற்று (ஜுன் 29) கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சிதம்பரம், “உச்ச நீதிமன்றத்தில் 8 நீதிபதிகள் பணியிடங்களும், உயர் நீதிமன்றங்களில் 409 நீதிபதிகள் பணியிடங்களும் மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் 5,746 நீதிபதிகளின் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதனால் பல்வேறு முக்கியமான வழக்குகளுக்குத் தீர்ப்புகள் வழங்கப்படாமல் வழக்குத் தொடர்ந்தவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
நீதிபதிகளுக்குக் கிடைக்கும் ஊதியத்தைக் காட்டிலும், வழக்கறிஞர்களுக்கு அதிக ஊதியம் கிடைப்பதால் அவர்கள் நீதிபதி பணிக்கு செல்ல விரும்புவதில்லை. வழக்கறிஞர்கள் அரசியல் சார்ந்து இருக்கலாம், ஆனால் வழக்கறிஞர்கள் சங்கம் அரசியல் சார்ந்து இருக்கக் கூடாது.
போட்டித் தேர்வுகள் மூலம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் தேர்வு செய்யப்படுவதுபோல், நீதித்துறையிலும் ஐ.ஜெ.எஸ் (இந்திய நீதித்துறை சேவை). முறையில் நீதிபதிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு முதலில் இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளித்து மாவட்ட நீதிபதிகளாகவும், பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாகவும், பணி மூப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகவும் நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சிதம்பரம்.
அதோடு நீதிமன்றங்கள், நீதிபதிகளைப் பாதுகாக்கும் பொறுப்பும், சுதந்திரமாகச் செயல்பட வைக்கும் பொறுப்பும் வழக்கறிஞர்களுக்கு உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
