’மௌனகுரு’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘டைரி’, ’டிமாண்டி காலனி 1 &2’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என்று வித்தியாசமான கதைகளில் பரிமளித்து வருபவர் அருள்நிதி. ‘இவர் ஆக்ஷன் ஹீரோதான்’ என்பதை ரசிகர்கள் ஏற்கும் வகையிலேயே ‘வம்சம்’ தொடங்கி ’திருவின் குரல்’, ‘கழுவேத்தி மூர்க்கன்’ வரை கதைகள் அமைந்து வருவது பல இளம் நாயகர்களுக்குக் கிடைக்காத சிறப்பம்சம்.
ஆதலால், ‘கொம்பன்’ தந்த இயக்குனர் முத்தையா உடன் அருள்நிதி இணைகிறார் என்ற தகவல் பலரை ஆச்சர்யப்பட வைத்தது. இவர்கள் காம்பினேஷனில் அமைந்த ‘ராம்போ’ பட ட்ரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது.
இப்படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது என்பதைச் சமீபத்திய பேட்டிகள் சிலவற்றில் சொல்லி வந்தார் முத்தையா. அதன்படியே, இப்படம் வரும் 10ஆம் தேதியன்று சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகிறது.
இந்த படத்தில் கிக் பாக்ஸராக வருகிறார் அருள்நிதி. சண்டைக்காட்சிகள் நிறைந்த படமாக இருந்தபோதிலும், இப்படத்தை தியேட்டரில் வெளியிடாமல் நேரடியாக ஓடிடிக்கு கொண்டு வருவது ஏன் என்பதற்கான காரணம் படக்குழுவுக்கு மட்டுமே தெரியும்.
ஓடிடியில் வெளியான சில நாட்களில் இப்படம் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகலாம். ஏற்கனவே சில படங்கள் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகிப் பின்னர் ஓடிடி தளங்களை வந்தடைந்துள்ளன.
அந்த வரிசையில் சேராமல் புதிய தொடக்கமொன்றை ஏற்படுத்தியுள்ளது ‘ராம்போ’.
ஒருகாலத்தில் டெலிபிலிம், டைரக்ட் டூ டிவிடி என்று வெளிநாடுகளில் சில படைப்புகள் வெளியாகி வெற்றி பெற்றது போன்ற அலையை இப்படத்தின் வீச்சு மீண்டும் உருவாக்கக்கூடும்.