ஐசிசி மகளிர் உலகக்கோப்பையில் நேற்று (அக்டோபர் 5) நடைபெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தானை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.
ஐசிசி 13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் பரம வைரியான இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 247 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹர்லின் தியோல் 46 ரன்களும், ரிச்சா கோஷ் 35 ரன்களும் குவித்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக டியான பெய்க் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
தொடர்ந்து 248 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் சிட்ரா அமின் (81) மற்றும் நட்டாலியா (33) தவிர மற்ற வீரர்கள் சொதப்பினர். இதனால் பாகிஸ்தான் அணி வெறும் 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் மகளிர் உலகக்கோப்பை லீக் போட்டியில் தான் விளையாடிய 2 லீக் போட்டிகளிலும் வென்று இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
அதே வேளையில் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி 7வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
