ஆம்ஸ்ட்ராங் படுகொலை… உண்மையான குற்றவாளிகள் எங்கே? : தமிழக அரசுக்கு மாயாவதி கேள்வி!

Published On:

| By christopher

Armstrong Massacre... Where Are the Real Criminals? : Mayawati's question to the Tamil Nadu government!

படுகொலை செய்யப்பட்ட தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இன்று (ஜூலை 7) அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங்கை (52) கடந்த 5ஆம் தேதி பெரம்பூரில் பைக்கில் வந்த 6 பேர் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.

ரத்த வெள்ளத்தில் பலத்த காயங்களுடன் சரிந்து விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுவரை  ஏற்கெனவே கொல்லப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலா உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பிஎஸ்பி தொண்டர்களின் பெரும் போராட்டத்திற்கு இடையே ஆம்ஸ்ட்ராங்கின் உடல் நேற்று இரவு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து பெரம்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

அவருடைய உடலானது சிறிது நேரம் வீட்டில் வைக்கப்பட்டு பின்னர் பொது மக்களின் அஞ்சலிக்காக பெரம்பூரில் பந்தர் கார்டன் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது.

மாயாவதி நேரில் அஞ்சலி – ஆறுதல்!

இந்த நிலையில் இன்று காலை சென்னை வந்த உ.பி. முன்னாள் முதலமைச்சரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவருமான மாயாவதி, ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு சோகத்துடன் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அங்கு இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Image

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சரியில்லை!

தொடர்ந்து அவர் அங்கிருந்த தொண்டர்களுக்கு மத்தியில் பேசுகையில், “ஆம்ஸ்ட்ராங் மறைவு செய்தி கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். புத்தர் காட்டிய மனிதாபிமான பாதையில் மிகவும் அர்ப்பணிப்புடன் பயணித்தவர் ஆம்ஸ்ட்ராங்.

கட்சி அரசியலில் ஈடுபட முடிவு செய்ததும், அவர் முதலில் தேர்வு செய்த கட்சி பகுஜன் சமாஜ் கட்சியே. தலித் மக்களுக்கு அவர் நிறைய பொருளாதார உதவிகளை செய்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலையை, தமிழக அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தலித்துகளின் வாழ்க்கை ஆபத்தான நிலையில் உள்ளதை இந்த சம்பவம் காட்டுகிறது. தலித் மக்களின் வாழ்க்கை மேம்பட, பாதுகாப்பாக இருக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ வசம் மாநில அரசு ஒப்படைக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அரசு தீவிரமாக செயல்பட்டிருந்தால் உண்மையான குற்றவாளிகளை பிடித்திருக்கலாம்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தால் எங்கள் கட்சி மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைகிறது. இந்த படுகொலை தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்பதை காட்டுகிறது.

சட்டத்தை கையில் எடுத்து தொண்டர்கள் செயல்பட கூடாது, அமைதியான முறையில் கருத்துக்களை கூறுங்கள்.

ஆம்ஸ்ட்ராங் கொலையால் பாதிக்கப்பட்டுள்ள அவரது குடும்பத்திற்கு பகுஜன் சமாஜ் துணை நிற்கிறது. ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு தேவையான பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க, தமிழக அரசுக்கு பகுஜன் சமாஜ் அழுத்தம் கொடுக்கும்” என்று மாயாவதி பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

HBD Dhoni: சீரியஸாக கேக் வெட்டிய ‘தல’ தோனி… சட்டென சிரிப்பூட்டிய சாக்‌ஷி

குளு குளு குற்றாலத்தில் தொடங்கியது படகு சவாரி! – மக்களே ரெடியா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share