ஆளும் கட்சியான திமுகவின் தடைகளை தாண்டி என் மண் என் மக்கள் யாத்திரை நடைபெற்று வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (பிப்ரவரி 11) தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் என் மண் என் மக்கள் யாத்திரையின் 200-வது நாளை ஒட்டி சென்னை தங்கசாலையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசும்போது,
“நம் ஆட்சியின் செயல்திட்டங்களை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே பிரதமரின் கட்டளை.
என் மண் என் மக்கள் யாத்திரையின் மூலமாக மோடியின் நல்லாட்சியை பட்டி தொட்டியெல்லாம் எடுத்துச் சென்றுள்ளோம்.
இத்தனை ஆண்டுகாலம் தமிழகத்தில் வியர்வை சிந்தி பாஜகவை வளர்த்தெடுத்துள்ளார்கள். கொடிய, மோசமான சித்தாந்தைக் கொண்ட திமுக தமிழக மக்களின் மனதை விஷமாக்க முயற்சி செய்தாலும்,
நம் தலைவர்கள் உண்மை, நேர்மை, நம்பிக்கை, ஆன்மீகம், தேசியத்தை இந்த மண்ணில் விதைத்துக் கொண்டிருந்தார்கள்.
எங்கே திரும்பினாலும் சனாதன தர்மத்தின் சாட்சிகளாக இருக்ககூடிய கோவில்களின் பூமி தமிழகம். திமுகவை எதிர்த்து துணிந்து இத்தனை ஆண்டுகாலம் பாஜக களத்தில் நின்றுகொண்டிருக்கிறது.
இது சாதாரண யாத்திரை இல்லை, பல தடைகளை தாண்டி யாத்திரை நடைபெற்று வருகிறது. ஆளும் கட்சியான திமுகவின் தடைகளை தாண்டி யாத்திரை நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் யாத்திரையில் பங்கேற்று தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.
தமிழகத்திலிருந்து தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் வரை நமக்கு ஓய்வு கிடையாது,
பெங்களூரு, மும்பை போன்ற இந்தியாவின் பெரு நகரங்களில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் சென்னையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு குடும்பத்தினுடைய மைந்தர்களாக இருந்து நாம் பார்த்ததில்லை.
சென்னை பெருவெள்ளத்தில் தத்தளித்தபோது இவர்களெல்லாம் மக்களுக்கு ஒரு பிரெட் பாக்கெட் கூட வாங்கி கொடுக்கவில்லை.
இந்த நாடாளுமன்ற தேர்தலில் சென்னையின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பாஜகவின் பக்கம் கொண்டு வரவேண்டியது நமது கடமை” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுக ஆட்சியால் தமிழகத்திற்கு சீரழிவு: ஜேபி நட்டா குற்றச்சாட்டு!