திமுக ஆட்சியால் தமிழகம் மிக மோசமாக சீரழிந்து கொண்டிருக்கிறது என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று (பிப்ரவரி 11) குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை தங்கசாலையில் பாஜகவின் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பேசியபோது, “பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழகம் மிகவும் இதயத்திற்கு நெருக்கமான ஒரு மாநிலமாகும்.
அவர் உலகின் எந்த பகுதிக்கு சென்றாலும், தமிழர்கள் குறித்தும் குறிப்பாக தமிழ் மொழி குறித்தும் பேசாமல் இருந்ததில்லை. நாடாளுமன்றத்தில் நீதிக்கு அடையாளமான தமிழகத்தின் செங்கோலை நிறுவியுள்ளோம்.
தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அளித்துள்ளோம். தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு தனிச்சிறப்பு வாய்ந்தது. தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்பதில் நாம் பெருமைப்படுகிறோம்.
ஆனால், திமுக ஆட்சியால் தமிழகம் மிக மோசமாக சீரழிந்து கொண்டிருக்கிறது. நான் வருகிற வழிகளில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
ஏன் அதிகளவில் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளார்கள் என்று எனக்கு தெரியவில்லை. எமெர்ஜென்சி காலம் மீண்டும் வந்துவிட்டது போன்ற தோற்றத்தை இங்கு நடைபெறும் நிகழ்வுகள் எனக்கு நினைவுபடுத்துகிறது.
ஸ்டாலின் அவர்களே உங்கள் ஆட்சியின் காலம் அருகில் வந்துவிட்டது. இது ஜனநாயகமா? இதுதான் தமிழக மக்களின் கலாச்சாரமா? ஊழல்வாதிகளை மக்கள் தூக்கி எறியக்கூடிய காலம் மிக அருகில் வந்துவிட்டது.
2014-ஆம் ஆண்டுக்கு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு உலக பொருளாதாரத்தில் நாம் ஐந்தாம் இடத்திற்கு வந்துள்ளோம். இந்த ஒரு முறை பாஜகவுக்கு மீண்டும் வாய்ப்பளித்தால் மூன்றாம் இடத்திற்கு வரும் என்பதை நான் உறுதியாக சொல்கிறேன்.
வாகன உற்பத்தியில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி நாம் 3-ஆம் இடத்திற்கு வந்துள்ளோம். 97 சதவிகிதம் செல்போன்கள் இந்தியாவில் உற்பத்தியாகிறது. 500 ஆண்டுகால தீராத ராமஜென்பூமி பிர்ச்சனை தீர்க்கப்பட்டு ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம் 370-ஐ ரத்து செய்துள்ளோம். அதன்மூலமாக காஷ்மீரை இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு மாநிலமாக மாற்றியுள்ளோம். 2024-ஆம் ஆண்டு 400 எம்.பி-க்களுக்கு மேல் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சியமைக்க நீங்கள் ஆதரவு தர வேண்டும்.
திமுக என்பதன் அர்த்தம் குடும்ப ஆட்சி, பணத்தை கொள்ளையடித்தல், கட்டப்பஞ்சாயத்து செய்வது தான் . 200 நாட்களுக்கும் மேலாக திமுகவைச் சேர்ந்த ஒரு அமைச்சர் சிறையில் உள்ளார். தாங்கள் கொள்ளையடித்த பணத்தை பாதுகாப்பதற்காகவும், குடும்பத்தை காப்பாற்றுவதற்காகவே இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்” என்று ஜேபி நட்டா தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயசூரியன் நாடு: ஆசை நூறு வகை.. ஜப்பான் பயணப் பதிவுகள் – 15
தடையை மீறி ரதயாத்திரை: பாஜகவினர் மீது வழக்கா?