தமிழ் கலாசாரத்தில் மிகவும் கொண்டாடப்படுகிற ஓர் உறவு ‘தாய்’. சங்க இலக்கியங்கள் தொட்டு திரைப்படங்கள் வரை பல கலைப் படைப்புகளில் போற்றப்பட்ட ஒரு உணர்ச்சியும் ‘தாய்மை’ தான்.
இந்த நிலையில், இன்று(மே 12) அன்னையர் தினத்தை முன்னிட்டு நாம் திரைப்படங்களில், தொலைக்காட்சியில், பொதுவாழ்க்கையில் கண்ட சில அன்னையருக்கு நமது மின்னம்பலம் சார்பாக ‘Super Mom awards – 2024′ என்கிற விருதை வழங்க வேண்டும் என்கிற முன்னெடுப்பை எடுத்தோம்.
அதன்படி, ஒரு தாயாக வாழ்க்கையில் பல சோதனைகளை வென்றெடுத்து சாதனை புரிந்த ஒருவருக்கு தர வேண்டும் என நமது குழு தேடியபோது முதலில் நமக்கு தோன்றிய பெயர் ‘சாந்தி வில்லியம்ஸ்’.
அவருக்கு இந்த விருதை கொடுத்து கௌரவிப்பது மட்டுமின்றி ஒரு சிறப்பு நேர்காணல் செய்யவும் அவரிடத்து சென்றிருந்தோம். தொலைக்காட்சி சீரியல்களில் வில்லியாக மிரட்டும் சாந்தி வில்லியம்ஸ் அதற்கு அப்படியே எதிர்மறையான மென்மையான குரலுடனும், கனிவான புன்னகையுடனும் நம்மை வரவேற்றார்.
வெளிய இருந்து பார்க்க ஒரு நடிகைன்னு மட்டும் பலருக்கு தெரிஞ்சாலும், ஒரு அம்மாவா நீங்க வாழ்க்கைல பார்க்காத கஷ்டங்கள் கிடையாது. தனி ஒரு பெண்ணாக பல்வேறு போராட்டங்களுக்கு நடுவுல உங்களோட பிள்ளைகள வளர்த்துருக்கீங்க. அது எல்லாம் பத்தி விரிவா பேசுறதுக்கு முன்னாடி, எப்பவுமே உங்களுக்கு அன்னையர் தினத்தப்போ வாழ்த்து சொல்ற முதல் ஆள் யார்?
என்னோட எல்லா பிள்ளைகளும் மறக்காம அன்னையர் தினத்தப்போ வாழ்த்து தெரிவிச்சிருவாங்க. ஆனா, என் கூட எப்பவுமே இருக்குறது என்னோட பேத்தி தான். அது நிகழ்ச்சிகள்னாலும் சரி, வீட்டு விசேஷங்கள்னாலும் சரி, கூடவே கை பிடிச்சிட்டு இருக்குற ஒரு ஆள் அவ தான். அதுனால, அவ தான் முதல்ல விஷ் பண்ணுவா. இந்த தடவையும் அவ தான் முதல் விஷ்!
நீங்க அன்னையர் தினத்தப்போ யாருக்கெல்லாம் மறக்காம வாழ்த்து தெரிவிப்பீங்க?
நம்ம சினிமா இண்டஸ்ட்ரி பழைய மாதிரி இல்ல. நான் இதை தவறா சொல்லல. பழைய இண்டஸ்ட்ரில எல்லாரும் ரொம்ப ஃப்ரெண்ட்லியா , அம்மா – பொண்ணு மாதிரி பாசத்தோடு பழகுவாங்க. ஆனா, இப்போ இருக்குறவங்க கிட்ட நம்ம அதை எதிர்பார்க்க முடியல. நடிகை சமிதா போன்ற சில பழைய ஆர்டிஸ்ட்கள் கிட்ட இன்னும் அதே உறவோடு இருக்கேன். அடுத்ததா நான் மகளா பார்த்தது மறைந்த சீரியல் நடிகை சித்ரா. சித்ரா எப்பவுமே என்ன மம்மின்னு தான் கூப்பிடுவா. இப்பவும் எனக்கு அவளோட நினைவு தான் வருது.
உங்களோட அம்மா பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன். உங்க வாழ்க்கையில எந்த அளவுக்கு உங்களுக்கு அவங்க முக்கியமா இருந்துருக்காங்க?
என் அம்மா எப்பவுமே கிச்சன்ல தான் இருப்பாங்க. ஒரு நாளைக்கு 70 பேருக்கு சமைக்கனும். அதுவும் எனக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் 100 பேருக்கு சமைக்க வேண்டியது இருக்கும். ஏன்னா இண்டஸ்ட்ரியில இருக்குற முக்காவாசி பேர் எங்க வீட்ல சாப்ட்ருக்காங்க. அப்பா இருந்த வரை வீட்ல இருக்குற எல்லாரும் ஒன்னா தான் சாப்டனும்ங்கிறது ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்.
அம்மாவ 24 மணி நேரமும் கிச்சன்குள்ளயே இருங்கன்னு சொன்னா கூட அவங்க அங்கயே தான் இருப்பாங்க. நான் ஷூட்டிங் முடிச்சிட்டு நைட் வரும் போது அம்மா தூங்கிட்டு இருப்பாங்க. அப்போ அவங்கள தொந்தரவு பண்ணாம, அவங்க மடியில போய் படுத்துப்பேன். மறுபடியும் காலையில எந்திருச்சி பார்க்குறப்போ அம்மா கிச்சன்குள்ள தான் இருப்பாங்க. எங்க அம்மா செய்யுற சாப்பாட்டை சாப்பிட மனோராமா ஆச்சி, வடிவுக்கரசி அம்மா, சரிதா அம்மா போன்றவர்கள் எல்லாம் ரொம்ப ஆசைப்படுவாங்க. இப்போ அம்மாவ நான் ரொம்ப மிஸ் பண்றேன்.
அம்மாகிட்ட நெருங்கிப் பழகுவதற்கான நேரம் கிடைக்கலன்னு தோணுதா இப்போ?
நிச்சயமா தோணுது! அவங்களோட கடைசி காலகட்டத்துல உடம்பு முடியாம இருந்தாங்க. அப்போ அவங்க முகத்தை கூட என்னால பார்க்க முடியல. ஏன்னா பார்த்தா கண்டிப்பா அழுதுடுவேன்னு பயம். நான் அழுதா அவங்களும் ரொம்ப அழுதுருவாங்க. அதுனால கதவுக்கு இடையே இருக்குற சின்ன கேப்ல அம்மாவோட முகத்தை மட்டும் பார்த்தேன். அவங்க இறக்க போறாங்கன்னு மனசுக்கு பட்டுச்சு.
அடுத்த நாள் நான் ஷூட்ல இருந்தப்போ அம்மா இறக்க போறாங்கங்கிற செய்தி வந்துச்சி. கேட்டதும், உடனே ஷூட்ல இருந்து வேகமா ஹாஸ்பிடலுக்கு தலை தெறிக்க ஓடுனேன். போனதும், ‘ பாட்டியோட கடைசி மூச்சு உனக்காக காத்திருக்கு மா’ன்னு என் பெரிய மகள் சொன்னா. நான் போய் பால் ஊத்துனதும், என்ன பார்த்துட்டே இருந்தாங்க. அப்படியே தான் கண் மூடினாங்க. அவங்க இப்போ கூட என் கூட இருக்காங்கன்னு தான் நினைக்கிறேன்( குரல் நடுங்க)
உங்க திருமணத்துல அப்பா இவ்வளவு பிடிவாதமா இருந்ததற்கு காரணம் என்ன?
அது எனக்கு இன்னைக்கு வரைக்கும் புரியல. எப்படி அப்பா இதுக்கு ஒத்துக்குட்டாருன்னே தெரியல. நான் வில்லியம்ஸ கல்யாணம் பண்ண பிடிக்காம ஓடிப் போய் அத்தை வீட்ல ஒளிஞ்சிக்கிட்டேன். அப்புறம் எப்படியோ என்ன தேடிப் பிடிச்சிட்டு வந்து கல்யாணத்தையும் பண்ணி வைச்சிட்டாங்க. இது தான் என் விதின்னு அப்போ முடிவு பண்ணிட்டேன். பிடிக்காத ஒரு லைஃப் தான். இருந்தாலும் அப்பாவோட ஒரு வார்த்தைக்கு கட்டுப்பட்டு 25 வருஷம் அவரோட வாழ்ந்தேன். வில்லியம்ஸ் ஒரு மிஷின் மாதிரி தான். அவர்கிட்ட அன்பை நான் எதிர்பார்த்ததும் இல்ல, அவர் அதை கொடுத்ததும் இல்ல!
– ஷா
முழு பேட்டியைக் காண…
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…