விலங்கின் குணங்களைக் கொண்ட ’ஆல்ஃபா’ ஆண்!
ஒரு படத்தின் டைட்டிலே அதன் முழுக்கதை என்னவென்பதைத் துல்லியமாகச் சொல்ல வேண்டும். அந்த வகையில், ‘அர்ஜுன் ரெட்டி’ தந்த இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா தனது படத்துக்கு ‘அனிமல்’ என்று பெயர் சூட்டியபோதே பெரிதாக எதிர்பார்ப்பும் கூடவே அதே அளவில் எதிர்ப்பும் எழுந்தன. தனது முதல் படம் போலவே, இதிலும் வன்முறையும் பாலுறவுக் காட்சிகளும் நிறைத்திருப்பாரோ என்று எண்ண வைத்தது. தற்போது, இப்படம் தியேட்டரில் வெளியாகியிருக்கிறது.
சரி, படம் எப்படியிருக்கிறது?
தந்தைக்கு அரணாகும் மகன்!
ஸ்வஸ்திக் எனும் ஸ்டீல் நிறுவனத்தை நிர்வகித்து, இந்தியாவில் முக்கியமானதொரு தொழிலதிபராகத் திகழ்கிறார் பல்பீர் சிங் (அனில் கபூர்). எந்நேரமும் வணிகத்தில் கவனம் செலுத்தும் அவர் தனது மனைவி, குழந்தைகளைக் கவனிக்க நேரம் செலவிடுவதில்லை.
பள்ளியில் படித்துவரும் மகன் ரான்விஜய் சிங்குக்கு அது வருத்தத்தைத் தருகிறது. ஆனாலும், தந்தை மீதான அவரது பாசம் அதீதமாக உள்ளது.
காலங்கள் உருண்டோடுகின்றன. வெளிநாட்டில் படித்துவிட்டு வீடு திரும்புகிறார் ரான்விஜய் (ரன்பீர் கபூர்). தந்தையின் பிறந்தநாளன்று அவரது அக்கா, தங்கையெல்லாம் அவருக்குச் சில பொருட்களைப் பரிசளிக்கின்றனர். ஆனால், ரான்விஜய்யோ நீளமான தலைமுடியை ‘ட்ரிம்’ செய்த தோற்றத்துடன் தான் வந்திருப்பதே தந்தைக்கான பிறந்தநாள் பரிசு தான் என்கிறார். அந்த ஒரு நிகழ்வே, அக்குடும்பத்தில் இருந்து அவர் மிகவும் வேறுபட்டவர் என்பதைக் காட்டிவிடுகிறது.

குடும்பத்தோடு சேர்ந்திருந்த ரான்விஜய் ஏன் வெளிநாடு சென்றார் என்பதற்கும் ஒரு கிளைக்கதை விரிகிறது.
ஒருநாள் கல்லூரியில் தன்னை சிலர் ‘ராகிங்’ செய்ததாகச் சொல்லி அழுகிறார் அவரது சகோதரி. பள்ளி மாணவனாக இருந்த ரான்விஜய் பாதுகாவலர் சகிதம் அந்தக் கல்லூரிக்குச் செல்கிறார். ‘யார் எனது சகோதரியைக் கிண்டல் செய்தது’ என்று கேட்கிறார். எல்லோரும் சிரிக்கின்றனர்.
அடுத்த நிமிடமே, பாதுகாவலர் கைவசம் இருந்த எந்திரத் துப்பாக்கியை எடுத்துவந்து ‘டப்.. டுப்..’ என்று சுடுகிறார். அந்த வகுப்பறையே நடுங்கிப் போகிறது. கிண்டலடித்தவர்கள் ஊர் சுற்றப் போயிருக்கின்றனர் என்று தெரிந்ததும், நாளை வருகிறேன் என்று சொல்லிச் செல்கிறார். அதற்குள்ளாகவே, அவர் செல்லும் காரை மறிக்க முயல்கிறது அந்த ராகிங் கும்பல். அவ்வளவுதான், அவர்களைத் தனது கார் கொண்டு இடித்து தள்ளுகிறார்.
‘இது எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா’ என்று தந்தை வெளுத்தெடுக்க, ‘என் குடும்பத்தைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்வேன்’ என்கிறார் ரான்விஜய். இந்தக் காட்சிதான், மொத்தப்படமும் எப்படிப்பட்டது என்பதற்கான ஒரு சோறு பதம்.
அதே ரான்விஜய், தனது தந்தையின் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்ததும் அவருக்கு அரணாக மாறுகிறார். தந்தை வழி உறவினர்களை அழைத்துவந்து பாதுகாவலர்களாக நியமிக்கிறார். யாரால் தந்தையின் உயிருக்கு ஆபத்து காத்திருக்கிறதோ, அவர்களால் வன்முறையில் குளித்து, கோமாவுக்குச் சென்று, இதய பாதிப்புக்கு உள்ளாகி, இறுதியில் மீள்கிறார்.
இறுதியில், தனது தந்தையைக் கொல்லத் துடிப்பவர்கள் யார் என்றும் அறிகிறார். அவர்களை ரான்விஜய் வீழ்த்தினாரா இல்லையா என்பதோடு படம் முடிவடைகிறது. இதிலிருந்து இக்கதையில் எந்தளவுக்கு வன்முறை நிறைந்திருக்கும் என்பதை அறிய முடியும். அதே அளவுக்கு, காதலும் காமமும் இதில் உள்ளது.
ரான்விஜய் தனது பள்ளிப்பருவத்து காதலி கீதாஞ்சலியை எவ்வாறு திருமணம் செய்தார் என்பது தொடக்கக் காட்சிகளில் சொல்லப்படுகிறது. அறிமுகமே அமர்க்களம் என்பது போல, கீதாஞ்சலியின் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்குச் சென்ற ரான்விஜய், அவரிடம் தனது காதலைச் சொல்கிறார். ’என்னைப் போலொரு ஆல்ஃபா ஆணை உன்னால் பார்க்க முடியாது என்கிறார். அடுத்த சில மணி நேரங்களில், கல்யாணத்தை நிறுத்திவிட்டு ரான்விஜய் வீட்டுக்கே வந்துவிடுகிறார் கீதாஞ்சலி.
சரி, அதென்ன ஆல்ஃபா ஆண்? வீரமே துணை என்று தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் காக்கும் திறன் கொண்ட ஒரு ஆண். சுருக்கமாகச் சொன்னால், ஆணுக்கான உதாரணமாகத் திகழுமளவுக்கு ஆதி காலத்தில் இருந்து மனித சமூகம் வகுத்து வைத்துள்ள இலக்கணங்களுக்கு உட்பட்டவன்.
அந்த வகையில், தொடக்கத்தில் ‘அனிமல்’ ஆகத் தெரியும் நாயகன், படத்தின் இறுதியில் ஒரு ‘உதாரணபுருஷராக’ தெரிவார்.

படத்தின் நீளம் அதிகம்!
ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், ட்ரிப்தி டிம்ரி, சக்தி கபூர், பிரேம் சோப்ரா, சௌரஃப் சச்தேவா என்று பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்களோடு தமிழ் ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த மேத்யூ வர்கீஸ் மற்றும் பப்லு பிருத்விராஜும் உண்டு என்பது ஆறுதலளிக்கும் விஷயம்.
குறைந்தபட்சம் நூறு பேராவது திரையில் தலைகாட்டியிருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். அனைவரது நடிப்பும் மிகச்சிறப்பாக அமைந்திருப்பதுவே ஒவ்வொரு காட்சியையும் உற்றுநோக்க வைக்கிறது.
அதுவும், இடைவேளைக்கு முன்னதாக ஒரு சண்டைக்காட்சி உள்ளது; அதற்கும் முன்னதாக ஆயுத வியாபாரியாக வரும் உபேந்திரா லிம்யே வரும் காட்சிக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது.
வெவ்வேறு களங்கள், விதவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகள் என்று ஒவ்வொன்றையும் நுணுக்கமாக நோக்கும் வகையில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் அமித் ராய்.
இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்காவே படத்தொகுப்பையும் கையாண்டிருப்பதால், திரைக்கதையில் வேண்டாத காட்சிகள் என்று எதையும் நிராகரிக்கவில்லை. படத்தின் நீளம் நான்கு மணி நேரமாக இருந்து, அதில் 20 நிமிடங்களை ‘கட்’ செய்ததாகச் செய்திகள் வெளியாகின. அப்படியிருந்தும், 3 மணி நேரம் 21 நிமிடங்கள் ஓடுகிறது இப்படம்.
பெரும் பணக்காரக் குடும்பம் என்பதை மறுப்பின்றி ஏற்கும் வகையில் ‘செட்’களை வடிவமைக்கத் தூண்டுகோலாக இருந்திருக்கிறார் தயாரிப்பு வடிவமைப்பாளர் சுரேஷ் செல்வராஜன். காஸ்ட்யூம் டிசைன், மேக்கப் போன்ற நுட்பங்களும் கூட அதற்குத் துணை நிற்கின்றன.
பாடல்கள் ஆங்காங்கே வருகின்றன. அவற்றில் முதல் பாடல் மட்டுமே சட்டென்று மனதோடு ஒட்டிக் கொள்கிறது. அதேநேரத்தில், பின்னணி இசை தந்த ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் ரசிகர்களின் ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்ஸ்’ அறிந்து வைத்திருக்கிறார். அதற்கேற்ற இசையைத் தந்து உணர்வெழுச்சிக்கு ஆளாக்குகிறார்.
சுரேஷ் பண்டாரு, பிரனய் ரெட்டி வாங்கா உடன் இணைந்து இயக்குனர் சந்தீப் திரைக்கதை அமைத்துள்ளார். சௌரஃப் குப்தா எழுதிய இந்தி வசனங்களைத் தமிழில் மோகன்குமார் மொழிபெயர்த்துள்ளார். அது செயற்கையாக இல்லாததே, தமிழ் பதிப்பை ரசிக்க ஏதுவாக உள்ளது.
இந்த படத்தின் நீளம் அதிகம் என்றபோதும், ரசிகர்கள் எவரும் இருக்கையை விட்டு எழவில்லை. கிளைமேக்ஸ் சண்டைக்காட்சிக்குப் பிறகும் ஒரு செண்டிமெண்ட் காட்சி உண்டு.
டைட்டில் ஓடும்போதும் சில காட்சிகள் உள்ளன. இறுதியாக வரும் ஷாட்கள் இரண்டாம் பாகம் உறுதி என்பதாக முடிவடைகின்றன. ஆனால், அவை இக்கதையின் சாராம்சத்துடன் இணைந்திருப்பதுதான் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்காவைக் கொண்டாடத் தூண்டுகிறது.

ஆணுக்கான இலக்கணம்!
இந்த படத்தில் ‘அனிமல்’ என்று யாரைச் சொல்கிறார் இயக்குனர்? படத்தின் ஆதாரமே அந்தக் கேள்வியில் தான் அடங்கியுள்ளது. அதற்கு விடை காணும் வகையில்தான், நாயகன் தனது குணாதிசயங்களை வடிவமைத்துக் கொள்வதாகக் காட்டுகிறார் சந்தீப்.
ஆனால், அது ரசிகர்களுக்கு முழுமையாகப் புரிகிறதா இல்லையா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி! இந்தப் படத்தில் ரத்தம் தெறிக்கும் சண்டைக்காட்சிகள் ஒருபக்கம் என்றால், ஆண் பெண் நெருக்கத்தைச் சொல்லும் வசனங்களும் முத்தக்காட்சிகளும் கூட அதிகம். ஆகையால், பள்ளிப்பருவத்தில் இருக்கும் சிறார்கள், சிறுமிகள் கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்க்க கூடாது.
படத்தில் நாயகனின் தந்தை, தாத்தா, உறவினர்கள், வில்லன் கும்பல் என்று அனைவரையும் வீரம் நிறைந்தவர்களாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர். அவர்கள் அனைவரையும் ‘ஆல்ஃபா’ ஆண்களாக உருவகிக்கிறார்.
அதேநேரத்தில், அந்த வீரத்தை வெளிப்படுத்தும் விதமும் குடும்பத்தினரை நோக்கும் விதமும் எப்படிப்பட்டது என்பதைச் சொன்ன வகையில் அவர்களை வேறுபடுத்துகிறார். அவர்களிடம் இருந்து நாயகன் நிரம்பவே வேறுபட்டவர் என்பதை உணர்த்துவதன் மூலம் அவரை ‘ஆணுக்கான இலக்கணப் புருஷனாக’ காட்டுகிறார்.
ஆல்ஃபா ஆண் என்பவன் பெண்களைக் காட்டுமிராண்டித்தனமாக நடத்த மாட்டான் என்று சொன்ன வகையில் வித்தியாசப்படுகிறது ’அனிமல்’. ஆனால், இக்கதையில் ‘ஆல்ஃபா ஆண்’ ஆகத் திகழும் சிலர் குடும்பத்திலுள்ள பெண்களுக்கு உரிய மரியாதை தருவதில்லை. அதற்கு மாறாக, நாயகனோ சகோதரிகளைக் காப்பதே தனது கடமை என்று எண்ணுவார். தான் செய்த தவறுகளை மனைவியிடம் சொல்லி மன்னிப்பு கேட்பார். அவர் ‘பளார்’ என்று கன்னத்தில் அறைவதை ஏற்றுக்கொள்வார். குழந்தைகளிடத்தில் பாசம் காட்டுவார்.
தன்னிடம் நிறைந்திருக்கும் ‘அட்ரினலின் பெருக்கத்தை’ வேறு வழிகளில் பயன்படுத்துவார். தனி விமானத்தில் நாயகியை அழைத்துச் செல்வார். பனிமலையின் நடுவில் இருக்கும் கோயிலில் அவரைத் திருமணம் செய்வார். அவ்வளவு ஏன், அவர்களது முதலிரவு கூட ஓடும் விமானத்திலேயே நிகழ்வதாகக் காட்டியிருப்பார் இயக்குனர்.
இவையனைத்தும் ‘ஆல்ஃபா ஆண்’ குறித்த விளக்கங்களுக்கு எதிர்த்திசையில் இருக்கும். அதே நேரத்தில், இந்தக் கதையில் யார் யாரெல்லாம் மனித உருவில் திரியும் விலங்குகள் என்றும் சொல்லிவிடும். அதனைப் புரிந்துகொண்டால், ‘அனிமல்’ ஆக இருக்கக்கூடாது என்ற ’மெசெஜ்’ ரசிகர்களுக்குப் பிடிபடும். இல்லையென்றால், முகத்தில் வழியும் ரத்தத்தைத் துடைத்துக்கொண்டு கைத்தட்டலை வாரியிறைத்து விசிலடித்தவாறே தியேட்டரை விட்டு வெளியே வர வேண்டியதுதான்..!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
