வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சுவாரசியமான பதில் அளித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநர் மற்றும் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் என்ற பதவிகளை வகித்து வருகிறார் தமிழிசை சௌந்தரராஜன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் மகளான இவர், தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர், துணைத்தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
2006, 2011 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களிலும், 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
பின்னர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக வேட்பாளராக தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார்.
ஆனால் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழியிடம் 3,47,209 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
“தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்காதது வருத்தம்தான். ஆனால், பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என்று தமிழக மக்கள் வருந்துவார்கள். மக்கள் தவறு செய்துவிட்டார்கள் என்பதுதான் எனது கருத்து. எனினும் இதுவும் ஒரு வெற்றிகரமான தோல்வி தான்” என்று தனது தோல்வி குறித்து தமிழிசை பேசியிருந்தார்.
எனினும் தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியல் களம் தொடர்பாக பாஜக நிலைப்பாட்டுடன் கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில், தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளுக்குமான நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள் சமீபத்தில் பாஜக நியமிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், புதுச்சேரி ராஜ் நிவாஸில் நாகாலாந்து மாநில உதய நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழிசை, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம், “நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட போகிறீர்களா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ’பின்னால் தெரிவிக்கப்படும்’ என்று கூறிய தமிழிசை ”அது சஸ்பென்ஸ்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கோபத்தில் தெறிக்கும் ரத்தம்… விஷால் 34 பட டைட்டில் டீசர் ரிலீஸ்!
அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: துணை ராணுவம் குவிப்பு!