பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) இருந்து அதன் (செயல்) தலைவர் அன்புமணியை நீக்குவது தொடர்பாக நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். Ramadoss Anbumani
பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையேயான மோதல் அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளது. பாமகவின் கொறடா பதவியில் இருந்து ராமதாஸ் ஆதரவாளரான அருள் எம்.எல்.ஏ.வை நீக்கி உள்ளார் அன்புமணி. அத்துடன் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்களான சிவகுமார், சதாசிவம், வெங்கடஸ்வரன் ஆகியோர் நேற்று ஜூலை 4-ந் தேதி சட்டமன்ற செயலாளரிடம் இது தொடர்பான மனு அளித்தனர். பின்னர் சபாநாயகர் அப்பாவுவையும் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் சந்தித்தனர்.
இதனைத் தொடர்ந்து அருள் எம்.எல்.ஏ., சட்டமன்ற செயலாளரை சந்தித்து தாம் கொறடா பதவியில் இருந்து நீடிப்பதற்கான கடிதத்தை கொடுத்தார்.
இந்த நிலையில் இன்று திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமகவின் நிர்வாகக் குழு கூட்டத்தை டாக்டர் ராமதாஸ் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் மொத்தம் 17 பேர் பங்கேற்றனர்.
இந்த நிர்வாகக் குழு கூட்டத்தில், பாமக பொதுச் செயலாளர் முரளி சங்கர், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், பரந்தாமன், மேற்கு, தென் மண்டல பொறுப்பாளர் & கரூர் மாவட்ட செயலாளர் பாஸ்கர், கவிஞர் ஜெயபாஸ்கரன், மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி, பாட்டாளி தொழிற்சங்க பேரவை பொது செயலாளர் ராம. முத்துக்குமார். நெடுங்கீரன், கௌரவ தலைவர் ஜிகே மணி, சமூக முன்னேற்ற சங்கம் மாநில தலைவர் சிவப்பிரகாசம், மாநில வன்னியர் சங்க செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், மாநில மகளிர் அணி தலைவர் வழக்கறிஞர் சுஜாதா கருணாகரன், முன்னாள் நீதிபதி அருள், Ex.M.P. துரை, இணை பொது செயலாளர் அருள் எம்.எல்.ஏ., முன்னாள் ரயில்வே இணை அமைச்சர் ஏ கே மூர்த்தி, ஆடுதுறை பேரூராட்சி பெருந்தலைவர் ம.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தின் தொடக்கத்திலேயே அன்புமணியை மிகக் கடுமையாக சாடி பேசினார் டாக்டர் ராமதாஸ். அப்போது சில நிர்வாக குழு உறுப்பினர்கள் ராமதாஸை சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனாலும் ராமதாஸ் பெரும் கோபத்துடன் அன்புமணி குறித்து பேசினார். மேலும் பாமகவின் இன்றைய நிர்வாகக் குழு கூட்டத்தில் அன்புமணியின் செயல் தலைவர் பதவியை பறிப்பது, அன்புமணியை பாமகவில் இருந்து நீக்குவது உள்ளிட்டவை தொடர்பாகவும் ராமதாஸ் தீவிர ஆலோசனை நடத்துவதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.