பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் பாதிக்கப்படும் விவசாயிகளை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து வந்து உங்களை நேரில் சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்காதீங்க சிஎம் சார் என்று தவெக தலைவர் நடிகர் விஜய் தெரிவித்தார். Parandur Issue: Vijay Questions Chief Minister Stalin
சென்னையை அடுத்த பனையூரில் நடைபெற்ற தவெக செயற்குழுக் கூட்டத்தில் விஜய் பேசியதாவது: பரந்தூர் விமான நிலைய பிரச்சனையில் முதல்வர் ஸ்டாலினுக்கு நாம் கடிதம் அனுப்பி இருந்தோம். மக்கள் பாதிக்காத வகையில் விமான நிலையம் அமைப்போம் என உங்கள் அரசு சார்பாக விளக்க அறிக்கை கொடுத்திருந்தீர்கள்.
அந்த அறிக்கையில், 1005 குடும்பங்கள் மட்டுமே பரந்தூரில் வசிப்பதால் விமான நிலையம் வந்தால் பெரிய பாதிப்பு இல்லை என சொல்லி இருந்தாங்க. மக்கள் பாதிக்காத வகையில்.. அப்படின்னா என்னங்க சார்? ஒன்னு அந்த இடத்தில் ஏர்போர்ட் வருதுன்னு சொல்லனும்.. இல்லை அந்த இடத்தில் ஏர்போர்ட் வராதுன்னு சொல்லனும். இரண்டுமே அந்த அறிக்கையில் இல்லை.
வெறும் 1,005 குடும்பங்கள் என்றால் அவ்வளவு சாதாரணமா போச்சா சிஎம் சார்? 15,000 மக்கள்.. அந்த மக்களும் நம்ம மக்கள்தானே.. ஏன் அந்த அக்கறை.. அந்த மனிதாபிமானம் மக்கள்கிட்ட இல்லை? எதிர்க்கட்சியாக இருந்தால்தான் மக்கள்கிட்ட அக்கறை இருக்குமா?
நீங்க உங்களை மக்களின் முதல்வர்னு நா கூசாமல் சொல்கிறீர்கள்..உங்களுக்கும் பரந்தூர் பிரச்சனைக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி காட்டிக்கிறீங்க.. ஆனால் விமான நிலையத்துக்காக பரந்தூரை பரிந்துரை செஞ்சதே உங்க அரசுதான் என மத்திய அமைச்சர் சொல்லி இருக்கிறார்.
போராட்டம் நடத்துகிற பரந்தூர் விவசாயிகளை ஏன் முதல்வர் சந்தித்து பேசவில்லை? என கேட்டால் பதில் இல்லை. பரந்தூர் போராட்ட குழுவினரை அண்மையில் நான் சந்தித்து பேசினேன். இப்பவும் ஒன்றும் குறைந்துவிடவில்லை சிஎம் சார்.. ஜாதி மதம் கடந்து தங்களுடைய குடியிருப்பை, நீர்நிலைகளை, விளைநிலத்தைக் காப்பாற்ற ஒன்றாக நின்று போராடுகிற பரந்தூர் விவசாயப் பெருங்குடி மக்களை தயவு செய்து நீங்க நேரில் சந்தித்து பேசுங்க.. நீங்களே நேரில் சந்தித்து பேசுங்க.. அந்த இடத்தில் விமான நிலையம் வராது என்கிற உத்தரவாதத்தை நீங்கள் கொடுக்கனும்.
இதை எல்லாம் நீங்கள் செய்யவில்லை எனில் பரநதூர் பகுதி மக்களையும் விவசாயிகளையும் நானே தலைமைச் செயலகத்துக்கு அழைத்து வந்து உங்களை நேரில் சந்தித்து முறையிடும் நிலைமை உண்டாகும். அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்கமாட்டீங்கன்னு நம்புகிறேன். அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். இவ்வாறு விஜய் பேசினார்.