இன்றைய தேதியில் ஒரு திரைப்படம் எந்த தேதியில் வெளியாக வேண்டும் என்பதைத் தயாரிப்பாளரோ, நாயகனோ, இயக்குனரோ, விநியோகஸ்தர்களோ முடிவு செய்வதைக் காட்டிலும் சம்பந்தப்பட்ட ஓடிடி நிறுவனங்களே தீர்மானிக்கிற நிலை திரையுலகில் நிலவுவதாகச் சொல்லப்படுகிறது.
பிரதீப் ரங்கநாதனின் ‘எல் ஐ கே’ மற்றும் ‘டூட்’, சூர்யாவின் ‘கருப்பு’ உட்படப் பல திரைப்படங்கள் எந்த மாதம், எந்த ஆண்டு வெளியாவது என்பது வரை பலவற்றைச் சில ஓடிடி நிறுவனங்களே முடிவு செய்வதாகப் பேச்சு நிலவுகிறது. ’அது உண்மை தானோ’ என்று நினைக்கிற அளவுக்குச் சில படங்களின் வெளியீட்டுத் தேதிகளும் அமைந்து வருகின்றன.
ஓடிடி உரிமை விற்காத சில படங்கள் வெளியிட முடியாத அளவுக்குச் சிக்கல்களும் நிலவுகின்றன. ஏனென்றால், தியேட்டரில் வெளியான சில படங்களை வாங்க பிரபல ஓடிடி நிறுவனங்கள் தயார் நிலையில் இல்லாததால் தாமதமாக வெளியானதும் கடந்த சில மாதங்களில் நிகழ்ந்திருக்கின்றன.
தமிழில் நிலைமை இப்படி. வேறு மொழித் திரைப்படங்களுக்கும் இதே கதிதானா என்று தெரியவில்லை.
இந்த நிலையில், இந்தியில் ஒரேநேரத்தில் 8 திரைப்படங்களுக்கான ஓடிடி ஒப்பந்தத்தை அமேசான் பிரைம் நிறுவனத்தோடு மேற்கொண்டிருக்கிறது மேடாக் பிலிம்ஸ்.

ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘பேண்டஸி ஹாரர்’ படமான ‘தமா’, ஜானவி கபூர் கேரளப் பெண்ணாகக் கலக்கியிருக்கும் ‘பரம் சுந்தரி’, ஸ்ரீராம் ராகவனின் ‘இக்கிஸ்’ என்று இந்த படங்களின் பட்டியல் அமைந்துள்ளது. ஏற்கனவே வந்த ‘பத்லாபூர்’ படத்தின் இரண்டாம் பாகம் டைட்டிலும் இதில் அமைந்திருப்பது, அப்படத்தின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டு வரை இப்படங்கள் வெளியாகும் என்று அறிவித்துள்ளது அமேசான் பிரைம்.
இப்படியொரு அந்தஸ்தை அடையத் தமிழில் எத்தனை நிறுவனங்கள் முண்டியடிக்கப் போகின்றன எனத் தெரியவில்லை.