முடக்கப்படும் அமராவதி சர்க்கரை ஆலை: கொந்தளிக்கும் கரும்பு விவசாயிகள்!

Published On:

| By Selvam

Amaravathi Sugar Mill to be Shut Down

கரும்பு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் சமீபகாலமாகக் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார்கள். இந்த நிலையில், தமிழ்நாட்டில் முதன்முதலில் தொடங்கப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையான, அமராவதி சர்க்கரை ஆலைப் பணிகள் முடக்கப்படுவதாக கரும்பு விவசாயிகள் கொந்தளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், கிருஷ்ணாபுரத்தில் 1961-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையைச் சார்ந்து திருப்பூர், திண்டுக்கல், கோயம்புத்தூர் மாவட்டங்களில் சுமார் 10,000 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் அப்பகுதி விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வருகிறார்கள்.

இந்த ஆண்டு, ஏப்ரல் முதல் வாரத்தில் கரும்பு அரவை தொடங்க வேண்டும். 60,000 டன் கரும்பு அரவை செய்ய, 1,650 விவசாயிகள் பதிவு செய்துள்ளார்கள். ஆனால், இயந்திரப் பழுது காரணமாக, ஆலையின் செயல்பாடு நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து விரிவாகப் பேசியுள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர்கள் சங்கத்தின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சி.சண்முகவேலு, “இயந்திரங்களை நவீனப்படுத்தாமல், பழைய இயந்திரங்களையே நீண்டகாலமாக மீண்டும் மீண்டும் பழுது பார்த்து இயக்குறதுனாலதான், இப்ப ஆலையோட செயல்பாடு முடங்கிக்கிடக்குது. இது ஒருபக்கம்னா, கடந்த வருஷம் மார்ச் மாசம் தொடங்க வேண்டிய இயந்திரங்கள் பராமரிப்புப் பணியை மே மாசம்தான் தொடங்கினாங்க. அதுவும் ஒழுங்கா நடக்கல.

30 முறைக்கும் மேல் இயந்திரம் பழுதாகி அரவைப் பணி நிறுத்தப்பட்டது. விவசாயிகளோட கரும்பு வயல்கள்ல இருந்து, அரவைக்காக வெட்டி கொண்டு வரப்பட்ட சுமார் 25,000 டன் கரும்புகளையும், தனியார் ஆலைகளுக்கு அதிகாரிங்க அனுப்பி வச்சாங்க. ஒரு நாளைக்கு 1,250 டன் கரும்பு அரைக்க வேண்டிய நிலையில், 750 டன்னுக்குக் குறைவான கரும்புகளையே அரைச்சாங்க. இயந்திரங்களின் தொடர் பழுதால் கரும்பு அரைக்கிறது ரொம்ப தாமதமாகுது. அதனால, 9 சதவிகிதமாக இருந்த கரும்பு பிழிதிறன் 7 சதவிகிதமாகக் குறைஞ்சிருது.

2015-ம் வருஷம், நான் இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்தப்ப, இந்தச் சர்க்கரை ஆலையைப் புனரமைக்க நிதி ஒதுக்கணும்னு சட்டமன்றத்துல கோரிக்கை வச்சேன். அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, அந்தக் கோரிக்கையை ஏற்று, விதி 110-ன் கீழ் 25.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிச்சாங்க. ஆனால், அதிகாரிகளும் அரசும், இந்த விஷயத்துல தொடர் கவனம் செலுத்தாததால, அந்த அறிவிப்பு நடை முறைக்கு வராமலே போயிடுச்சு.

அந்த அறிவிப்பு தொடர்பாக, தொடர்ச்சியா தமிழக அரசை வலியுறுத்திக்கிட்டு வர்றோம். ஆனால், எந்தப் பலனும் இல்லை.

இந்த ஆலை, நல்ல முறையில இயங்கினால்தான்… இந்தப் பகுதிகள்ல உள்ள கரும்பு விவசாயிகளுக்கு ஓரளவுக்காவது நியாயமான விலை கிடைக்கும். ஆலை முடங்கிடுச்சுனா, விவசாயிகள் தங்களோட கரும்பை தனியார் ஆலைகளுக்கு விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுடுவாங்க. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், கரும்புக்குத் தனியார் ஆலைகள் தங்களோட விருப்பப்படி கொடுக்குறதுதான், விலையாக இருக்கும்.

குறிப்பாக, அமராவதி ஆலையில் சர்க்கரை கழிவிலிருந்து மது உற்பத்திக்கான எரிசாராயம் மற்றும் எத்தனால் தயாரிக்கிறாங்க. நல்ல லாபத்தில் இயங்கும் இந்த எரிசாராய வடிப்பாலைக்கு மூலப் பொருளான கரும்பு வரத்துக் குறையும்போது, எரிசாராய உற்பத்தியும் குறையும். இதன் மூலம் மது உற்பத்தி ஆலைகள், தனியார் எரிசாராய வடிப்பாலைகளை நோக்கிச் செல்ல வாய்ப்பாக அமையும்.

தனியார் சர்க்கரை ஆலைகளுக்குக் குறுக்கு வழியில் வருமானம் ஈட்டித் தர்றதுக்காகத்தான், அமராவதி சர்க்கரை ஆலையின் செயல்பாடு முடக்கப்படுதோங்கற சந்தேகம் அச்சமும் விவசாயிகள் மத்தியில எழுந்திருக்கு. இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பு, தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக் கிட்டயும் ஆலை தொடர்பா வலியுறுத்திப் பேசினோம். இந்த ஆண்டு வேளாண் பட்ஜெட்டில், அமராவதி சர்க்கரை ஆலை புனரமைப்புக்குக் கண்டிப்பாக நிதி ஒதுக்கப்படும்னு, இந்தப் பகுதிகள்ல உள்ள கரும்பு விவசாயிகள் ரொம்பவே எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆனா, ஏமாற்றமே மிச்சம்.

அமராவதி சர்க்கரை ஆலைக்காகக் கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளோட நிலைமை இப்ப கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருக்கு. இந்த வருஷம் பயிரிடப்பட்ட கரும்புகளை என்ன செய்றதுனு தெரியாம விவசாயிகள் திணறிப் போய், மிகுந்த மன உளைச்சல்ல இருக்காங்க. விவசாயிகளோட நலன் கருதி, போர்க்கால அடிப்படையில நிதி ஒதுக்கி, இந்த ஆலையை நவீனப்படுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கணும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் செயல் ஆட்சியர் நளினா, “இந்த ஆலையை நவீனமயப்படுத்த 62 கோடி ரூபாய் நிதி கேட்டு தமிழக அரசுக்கு ஏற்கெனவே கடிதம் அனுப்பி இருந்தோம். ஆனால், அதைவிட கூடுதல் நிதி தேவைப்படுவதால், தற்போது 80 கோடி ரூபாய் நிதி கேட்டுப் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளோம். அது அரசின் பரிசீலனையில் உள்ளது.

அரசு நிதி ஒதுக்கும்பட்சத்தில் இயந்திரம் நவீனமயமாக்கல், புனரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்வோம். தற்போது இயந்திரக் கோளாறு காரணமாக அமராவதி சர்க்கரை ஆலை இயக்கப்படவில்லை. அதனால், மோகனூரில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு இங்குள்ள கரும்புகளை அனுப்பி வருகிறோம். கொள்முதல் செய்யப்படும் கரும்புக்குரிய தொகை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது” என்கிறார்.

இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் தனியார் வசம் ஒப்படைக்கும் திட்டம் ஏதும் இல்லை. ஆலையை நவீனப்படுத்தவும், பராமரிப்புக்கும் தேவையான நிதி கேட்டு அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். அதைப் பரிசீலித்து அதற்கான நிதி ஒதுக்கப்படும். அமராவதி ஆலையை நம்பியுள்ள கரும்பு விவசாயிகள் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: தூத்துக்குடி தக்காளி ஜாம்

கேரளா வெற்றி கழகமா? : அப்டேட் குமாரு

ஜாஃபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share