திமுகவுடன் கூட்டணி தொடர்பாக அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசியதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பதிலளித்துள்ளார்.
பரமக்குடியில் நடந்த திமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், “கூட்டணிக்குள் ராமதாஸ் வந்து கொண்டிருக்கிறார்… ராமதாஸ் பேசிக் கொண்டிருக்கிறார்.. அப்புறம் ஜான் பாண்டியன் பேசிகிட்டு இருக்கிறார்.. ஆகையால் கட்சி வேட்பாளர்களையும் கூட்டணி வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக இன்று (ஜனவரி 12) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், “தேர்தல் நேரங்களில் பல விதமான யூகங்கள் பேச்சுகள் வரத்தான் செய்யும். இதில் உண்மையும் இருக்கும், பொய்யும் இருக்கும். அதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது ஊடகங்கள் கையில் இருக்கிறது” என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லை என்று முடிவெடுத்துவிட்டீர்களா?
இன்னும் முடிவெடுக்கவில்லை. நாட்கள் வேகமாக போய் கொண்டிருக்கிறது. முடிவெடுப்போம்.
புதிய கூட்டணிக்கு போவதற்கான சூழல் உருவாகிவிட்டது என்று எடுத்துக்கொள்ளலாமா?
எதுவும் தேர்தல் நேரத்தில் நடக்கலாம். நடக்காமலும் போகலாம்.
முன்னாள் முதல்வர் கலைஞருடன் உங்களுக்கு நீண்ட நாள் நட்பு இருக்கிறது. இப்போது திமுக அரசை பாராட்டியிருக்கிறீர்கள். இப்படிபட்ட சூழலில் திமுக அமைச்சரே வெளிப்படையாக பேசியிருக்கிறாரே?
தேர்தல் நேரத்தில், இப்போது எதையும் உறுதிப்பட சொல்ல முடியாது.
முன்னதாக, பாமக தலைவர் அன்புமணி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் நேரில் சந்தித்து பேசி அதிமுக – பாமக கூட்டணியை உறுதி செய்தார். ஆனால் இது செல்லாது என்று ராமதாஸ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
