முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த பின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பாஜக கூட்டணியில் இருந்து இன்று (ஜூலை 31) காலை விலகினார். மாலை முதலவ்ர் ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்துக்கு நேரில் சென்று சந்தித்தார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முதல்வர் சிறிது நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வந்திருக்கிறார். அவருடைய உடல்நலம் பற்றி விசாரிப்பதற்காக மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அதோடு கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து மறைவு தொடர்பாக விசாரித்தேன். அரசியல் நிமித்தமாக எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை” என்றார்.
எதிர்காலத்தில் திமுகவுடன் கூட்டணி வைக்கப்படுமா?
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நண்பனும் இல்லை. இதுதான் பழைய கால வரலாறு. எதிர்காலத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். எல்லோரும் எல்லோருடனும் கூட்டணி வைத்திருக்கிறார்கள்.
கூட்டணிக்கான சந்திப்பாக எடுத்துக்கொள்ளலாமா?
அது உங்களுடைய யூகம்.
பாஜக தலைவர்கள் உங்களுடன் பேச முற்பட்டார்களா?
இதுவரை இல்லை.
உங்களை அவமானப்படுத்தியதாக பார்க்கிறீர்களா?
அப்படியெல்லாம் இல்லை. அரசியலில் எனக்கு சுய மரியாதை இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி பார்வையில் நான் பணியாற்றி இருக்கிறேன்.
எனக்கு ஒரு வருத்தம் இருக்கிறது. தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் கல்வி நிதியை நிறுத்தியதாக மக்களவையில் பதிலளிக்கிறார்கள். ஜனநாயக நாட்டில் இது ஏற்புடையது அல்ல என்பது என்னுடைய கருத்து. மக்களை பாதிக்கக்கூடிய எதுவாக இருந்தாலும், மத்திய மாநில அரசுகளை கண்டித்து நான் அறிக்கை வெளியிடுவேன்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது வாழ்த்துகள்.
இவ்வாறு பதிலளித்தார் ஓ.பன்னீர் செல்வம்.