அதிமுகவில் தங்களை சேர்க்கவே முடியாது என திட்டவட்டமாக கூறி அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டதால் “எடப்பாடியை ஒழிப்போம்” ( OPS Vs EPS) என சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சபதம் எடுத்துள்ளது ஓபிஎஸ் அணி.
சென்னையில் தமது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் நேற்று ஜூலை 31-ந் தேதி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அனைவருமே பாஜகவின் துரோகம் பற்றி குமுறி குமுறி பேசினர்.

மனோஜ் பாண்டியன் பேசுகையில், “பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை கொஞ்சம் தள்ளிபோடுவோம்.. நம்மை பாஜக மதிக்கவில்லைதான்.. .. நம்ம ஒரே நோக்கம் எடப்பாடியை ஒழிக்கனும் என்பதுதான்.. அதனால கொஞ்சம் பொறுமையாக இருப்போம் என்றார்.
வைத்திலிங்கம் பேசுகையில், சட்டமன்ற தேர்தல் வரை பொறுத்திருப்போம்.. அதற்கு பிறகு ஏதாவது ஒரு முடிவெடுப்போம் என்றார்.
ஆனால் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசும் போது, அதிமுகவை ஒன்றாக சேர்ப்பதில் பாஜக அக்கறை காட்டவில்லை. திமுகவை நம்பி போக முடியாது. எடப்பாடி பழனிசாமி நம்மை ரொம்பவே உதாசீனப்படுத்திவிட்டார்.. இப்போதைக்கு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதுதான் சரியான முடிவு. அப்பதான் நமக்கும் பல வழிகள் பிறக்கும் என்றார்.
ஓபிஎஸ் பேசுகையில், வேறவழியில்லை.. நாம முடிவெடுத்துதான் ஆகனும். என்கிட்ட தங்கமணி, சிவி சண்முகம் எல்லாம் வந்து பேசும் போது, கொஞ்சம் பொறுமையாக இருங்க அண்ணே.. உங்களுக்கு என்ன செய்யனுமோ அதை செய்வாங்க.. நாம எல்லாம் ஒன்றாக இருந்தா தென்மாவட்டங்களில் வலிமையாக இருக்க முடியும் என்றனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. பாஜகவினரே நம்மைப் பார்த்து, உங்களுக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என கேட்கின்றனர்.. நம்ம செல்வாக்கு என்ன என்பதை கூட்டம் போட்டு காண்பிப்போம்.. மாநாடு நடத்தி காட்டுவோம்.. எடப்பாடியை வீழ்த்துவதுதான் நமது ஒரே நோக்கம் என ஆவேசமாக பேசியிருக்கிறார்.
இதன் பின்னர் ஓபிஎஸ் அவரது சகாக்களுடன் சாப்பிட்டுக் கொண்டே பேசும் போது, 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், எடப்பாடி பழனிசாமி அவமானப்படுத்தியதை பாஜக தலைவர்கள் மறக்க தயாராக இல்லை; எடப்பாடியை எப்படியும் ஒழிக்காமல் விடமாட்டாங்க.. நம்மைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தனும் என்று சொல்லியபடியே, முதல்வர் ஸ்டாலினை சந்திக்க இருப்பது பற்றியும் பேசியிருக்கிறார்.
மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் சிஎம் ஸ்டாலினை சந்திக்க ஓபிஎஸ் உடன் வரவில்லை என தெரிவித்துவிட்டனர். இதன் பின்னரே ஓபிஎஸ் மகனுடன் போய் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தாராம்.
ஓபிஎஸ் அணியைப் பொறுத்தவரையில் “எடப்பாடியை ஒழிப்போம்” என்பதுதான் முதன்மை முழக்கம். இதற்காகவே திமுக, விஜய் என இருதரப்புடனும் கை கோர்க்க தயாராகிக் கொண்டிருக்கிறதாம்.