“அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) டெல்லி சென்று திரும்பிய பின் பல நல்ல விஷயங்கள் நடக்கும்” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கி உள்ளார். இதனை அதிமுக எடப்பாடி பழனிசாமி நிராகரித்ததுடன், செங்கோட்டையனின் கட்சி பதவிகளையும் பறித்தார்.
ஆனால் செங்கோட்டையன், திடீரென டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். பாஜக கூட்டணி கட்சியான அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை தொடர்பாக அமித்ஷாவிடம் செங்கோட்டையன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த பின்னணியில், எடப்பாடி பழனிசாமியும் நாளை டெல்லி செல்கிறார். டெல்லியில் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளார்.
இதனிடையே நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், ஓ.பன்னீர்செல்வத்திடம் நான் பேசி இருக்கிறேன். அதுபற்றி விவரங்களை விரிவாக சொல்ல முடியாது.பாஜக யாரையுமே எதிரியாகப் பார்க்கவில்லை என்றார்.
மேலும், பாஜக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நல்லபடியாக நடக்கின்றன. நேற்று கூட இபிஎஸ்ஸிடம் பேசினேன். அவர் டெல்லிக்கு போய் சந்தித்துவிட்டு வந்த பின்னர் நல்ல விஷயங்கள் நிறைய நடக்கும். அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை. பாஜக கூட்டணி கட்சி தலைவர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று சந்திக்கிறார். தமிழ்நாட்டில் 4 முனை, 5 முனை போட்டி இருந்தாலும் வெல்லப் போவது பாஜக கூட்டணிதான் என்றார் நயினார் நாகேந்திரன்.