தமிழகத்தில் பல்வேறு தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், மகளிர் இலவச பேருந்து பயணம் என என அடுக்கடுக்கான பல மக்கள் நலத்திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது.
இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வரும் நிலையில், தாய் தந்தையை இழந்து வாடும் பிள்ளைகளுக்கு மாதம் நிதி வழங்க தமிழக அரசு தரப்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நமது மின்னம்பலம்.காம் தளத்தில் கடந்த 13ஆம் தேதி ’ஸ்டாலின் வெளியிடப் போகும் முக்கிய அறிவிப்பு!’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பெற்றோரை இழந்த மற்றும் ஒற்றை பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து பாதுகாத்திடும் வகையில் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (செப்டம்பர் 15) தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் பேசுகையில் “இனிமேல், நீங்கள் கவலைப்பட வேண்டாம்! உங்களை இன்னும் கவனித்துக் கொள்ளத்தான் இந்த அன்புக் கரங்கள் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம். நான் இருக்கிறேன்.. உங்களை பத்திரமாக பார்த்துக் கொள்வேன்.
இன்றைக்கு மிகவும் முக்கியமான நாள். பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள். நம்முடைய தாய் நிலத்துக்கு “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன் அவருடைய பிறந்த நாள். “ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்” என்று திராவிட மாடல் ஆட்சிக்கு இலக்கணம் எழுதிய மாபெரும் தலைவரின் பிறந்தநாள்.
இன்று, இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து, இங்கு பேசிய குழந்தைகளின் சிரிப்பு தான் அண்ணாவுக்கு நாங்கள் செலுத்துகின்ற மரியாதை. மிகுந்த மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அடைந்து கொண்டிருக்கிறேன்.
திராவிட மாடல் என்றால் ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்று எளிமையாக விளக்கம் சொல்லிவிடலாம். ஆனால், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க உழைப்பதும், பாடுபடுவதும் எளிதானது அல்ல.
இந்திய சமூகச் சூழலில், இவர்களுக்கெல்லாம் எதுவுமே தெரியாது – தெரியக் கூடாது என்று ஒடுக்கப்பட்ட சாமானிய மக்களின் எழுச்சிதான், திராவிட இயக்கம்! அதனால்தான், மக்களோடு மக்களாக, மக்களுடைய குரலாக திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இங்கே சொகுசுக்கு இடமில்லை!
மக்களுடைய தேவைகளை, இந்த சமூகத்துக்கு தேவையான மாற்றங்களை, ஆட்சிப் பொறுப்பைப் பயன்படுத்தி இன்றைக்கு நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்! அரசியல் என்பது மக்கள் பணி! அது கடுமையான பணி! எங்களைப் பொறுத்தவரைக்கும், இங்கே சொகுசுக்கு இடமில்லை.
நீங்களே பார்த்துக் கொண்டிருப்பீர்கள். காலையில் ஒரு இடத்தில் மக்கள்கூட பேசிக் கொண்டிருப்பேன். ஈவினிங் பல நூறு கிலோமீட்டர் கடந்து இன்னொரு ஊரில்… இன்னொரு பகுதியில் மக்கள்கூட இருப்பேன். இந்த உழைப்பைத்தான், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர், எங்களுக்கு கற்றுத் கொடுத்திருக்கிறார்கள். இப்படி எப்போதும் மக்களோடு மக்களாக இருக்கின்ற காரணத்தால்தான், கடைக்கோடி மனிதருக்கும் என்ன தேவை என்று பார்த்துப் பார்த்து எங்களால் செய்ய முடிகிறது.
அரசியல் என்றால் ஏதோ, ஆட்சிப் பொறுப்புக்கு வந்தோம்; பொறுப்பை மறந்து பதவி மோகத்தில் இருந்தோம்; சில கவர்ச்சித் திட்டங்களை செய்தோம்; மறுபடியும் பதவி மோகத்தோடு தேர்தலுக்கு தயாராவோம் என்று பலர் நினைக்கிறார்கள் . ஆனால், எங்களுடைய அடிப்படையே, “பதவி அல்ல; பொறுப்பு” தான். அதிகாரம் என்பது சாமானியனுக்காக போராடுவது.
வாக்கு அரசியலுக்காக செய்வதா?
இன்றைக்கு, தாயுமானவர் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த அன்புக்கரங்கள் திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறோம். இதனால், 6,082 குழந்தைகளுக்கு, மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப் போகிறோம். இது என்ன, வாக்கரசியலுக்காக செய்வதா?
காலையில் பள்ளிக்கு பசியுடன் வர குழந்தையின் வேதனையைப் பார்த்தேன். காலை உணவுத் திட்டத்தை உருவாக்கினேன். இன்றைக்கு, 21 இலட்சம் குழந்தைகளுக்கு நாள்தோறும் சூடாக, சுவையாக சத்தான உணவை பரிமாறுகிறோம். இது என்ன, வாக்கு அரசியலுக்காக செய்வதா?
சமூகத்தின் விளிம்பு நிலையில், எண்ணிக்கையில் சில நூறு – சில ஆயிரம் மட்டுமே இருக்கின்ற மாற்றுத்திறனாளிகள் – திருநர்கள் ஆகியோருக்கும் பார்த்துப் பார்த்துத் திட்டங்களை செயல்படுத்துகிறோம். இது என்ன, வாக்கு அரசியலுக்காக செய்வதா?
இன்னும் சொல்கிறேன்.. நம்முடைய திராவிட மாடல் அரசு, என்ன மாதிரியான நெருக்கடியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது என்று உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.
கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த காலக்கட்டம் அது. ஏராளமான உயிர்கள் பறிபோனது. பலருடைய தொழில்கள் எல்லாம் முடங்கிப் போனது. பல குடும்பங்கள் தங்களுடைய முதுகெலும்பை இழந்து, பலவீனப்பட்டது. உடனே, இந்தியாவுக்கே முன்மாதிரி அரசாக, கொரோனாவால் பெற்றோரை இழந்த 15 ஆயிரத்து 775 குழந்தைகளுக்கு, 511 கோடியே 27 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினோம். இது என்ன, வாக்கரசியலுக்காக செய்வதா? இல்லை.
கொரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் மூவாயிரம் ரூபாய் என்று 2021-ல் ஆயிரத்து 148 குழந்தைகள் – 2022-ல் ஆயிரத்து 112 குழந்தைகள் – 2023-ல் ஆயிரத்து 12 குழந்தைகள் என்று, மூன்று ஆண்டுகளுக்கு நிதி உதவி வழங்கினோம். இது என்ன, வாக்கரசியலுக்காக செய்வதா? இல்லை அரசு சேவை இல்லங்கள் மற்றும் அரசு குழந்தைகள் இல்லங்களில் தங்கியிருக்கின்ற ஆயிரத்து நானூறு பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு மற்றும் விளையாட்டுப் பயிற்சிகள் வழங்குகிறோம். இதென்ன, வாக்கரசியலுக்காக செய்வதா? இல்லை.
சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்களில் இருக்கின்ற ஊட்டசத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்க, அனைத்து சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்களையும், தாய்ப்பால் வங்கியுடன் இணைத்திருக்கிறோம். இது என்ன, வாக்கரசியலுக்காக செய்வதா? இல்லை.” என்றார்.
உங்களுக்கு ஆதரவாக, நண்பனாக, பெற்றோராக…
மேலும் “பெற்றோரே இல்லாத குழந்தைகளை, சிங்கிள் பேரண்ட் இருக்கின்ற குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டுமே என்ற எண்ணம் வந்தது. அந்த அடிப்படையில் உருவானதுதான், இந்த அன்புக்கரங்கள் திட்டம்.
இதில் கட்டமாக கண்டறியப்பட்ட 6,082 குழந்தைகளுக்கும், பள்ளி படிப்பை முடிக்கின்ற வரைக்கும் இனிமேல் மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாய் உங்கள் வங்கி கணக்கில் வரவு வைத்திடுவோம். உங்களுக்கு 18 வயது ஆகின்ற வரைக்கும், நீங்கள் கல்வியை தொடர இந்த உதவித்தொகை வழங்கப்படும்! நீங்கள் பள்ளி படிப்பை முடித்த பிறகு, கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நாளைக்கு நீங்கள் படித்து, டாக்டராக, என்ஜினியராக, சயிண்டிஸ்டாக – ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரியாக, அரசியல்வாதியாக உயர்ந்து, இந்தச் சமூகத்துக்கு, இந்த மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.
உங்களுடைய வெற்றி, தமிழ்நாட்டின் வரலாற்றை சொல்லவேண்டும்! அதற்கு உங்களுக்கு ஆதரவாக, உங்கள் நண்பனாக, உங்கள் பெற்றோராக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன். இருப்பேன்” என தெரிவித்துள்ளார்.
