சென்னையில் விஜய் பிரச்சாரத்துக்கு அனுமதி கேட்டு காவல்துறையில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலில் களமிறங்குகிறார். இதையொட்டி தனது பிரச்சாரத்தை கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் தொடங்கினார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து மரக்கடை வரை சுமார் 8 கிமீ தூரத்தை 4 மணி நேரம் பயணித்து சென்று பிரச்சாரம் செய்த விஜய், அங்கிருந்து 8 மணிக்கு அரியலூர் சென்று உரையாற்றினார்.
பின்னர் அங்கிருந்து குன்னம் வழியே பெரம்பலூர் வந்தார். குன்னத்தில் விஜய் பேசுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நேரமின்மையால் பேச முடியவில்லை.
தொடர்ந்து பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் இருந்து பாலக்கரை வந்த விஜய்யின் பிரச்சார வாகனத்தை தொண்டர்கள் சூழ்ந்துகொண்டனர். இதனால் உரையாற்ற திட்டமிட்டிருந்த வானொலி திடல் பகுதிக்கு விஜயால் வர முடியவில்லை.
விஜய்யின் வருகையையொட்டி நள்ளிரவு 12.30 மணி வரை வானொலி திடலில் காத்திருந்த தவெக தொண்டர்களும், ரசிகர்களும் ஏம்மாற்றத்துடன் வீடு திரும்பினர்.
இந்தநிலையில் கண்டிப்பாக பெரம்பலூர் மக்களை மீண்டும் ஒருநாள் வந்து சந்திப்பேன் என்று விஜய் கூறியுள்ளார்.
இந்தசூழலில் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரத்துக்கு செல்லவுள்ளார்.
அதைத்தொடர்ந்து செப்டம்பர் 27ஆம் தேதி திருவள்ளூர், வட சென்னை ஆகிய பகுதிகளுக்கும், அக்டோபர் 25ஆம் தேதி தென் சென்னையிலும் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.
இதனால் சென்னையில் விஜய்யின் பிரச்சாரத்துக்காக அனுமதி கேட்டு சென்னை மாவட்ட தவெக செயலாளர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
முல்லை நகர், அகரம், ராயபுரம் புளியந்தோப்பு, கொருக்குபேட்டை, ஐஸ் ஹவுஸ், ஆயிரம் விளக்கு, தி.நகர், எம்ஜிஆர் நகர், சைதாபேட்டை, மயிலாப்பூர், கண்ணகி நகர், ஆலந்தூர், வேளச்சேரி, வில்லிவாக்கம், அயனாவரம், அம்பத்தூர், மதுரவாயல் ஆகிய இடங்களில் விஜய் பேசவுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீது விரைவில் காவல்துறை முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
