வைஃபை ஆன் செய்ததும், “நாளை செப்டம்பர் 16-ந் தேதி டெல்லியை நோக்கியே அனைத்து கண்களும் இருக்கும்” என சொல்லியபடி டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
டெல்லியை புயல் வெள்ளம் தாக்கப் போகுதோ?
அதெல்லாம் இல்லைய்யா.. எடப்பாடியின் டெல்லி விசிட்தான்.. “இபிஎஸ் டெல்லி சென்றுவிட்டு வந்த பின்பு நல்ல விஷயங்கள் நடக்கும்” என நெல்லையில் நயினார் நாகேந்திரன் கூட இன்று பேட்டி தந்திருக்கிறாரே..
ஆமா.. நயினார் நாகேந்திரன் இவ்வளவு குஷியாக சொல்றாருன்னா ஏதோ பெரிய விவகாரமா?
ஆமாம்யா.. அதிமுகவின் சீனியர் தலைவர்களிடம் நாம் இதுபற்றி பேசினோம்.. அப்போது, “இபிஎஸ் டெல்லிக்கு போய் அமித்ஷாவை சந்திக்கும் போது 2 விஷயங்களைத்தான் பேச முடிவு செஞ்சுருக்கார்..
முதல் விஷயம் அண்ணாமலையைப் பற்றிதானாம்..
அண்ணாமலைக்கும் அதிமுகவுக்கும் என்னய்யா தொடர்பு?
அதிமுகவில் நடக்கிற அத்தனை குழப்பத்துக்குமே அண்ணாமலைதான் காரணம் என்பதில் உறுதியாக இருக்கிறார் இபிஎஸ். கட்சி தலைமைக்கு எதிராக செங்கோட்டையன் பேசுவது, அதிமுக ஒன்றிணையனும்னு டிடிவி தினகரன், ஓபிஎஸ் பேசுவது எல்லாமே அண்ணாமலை தூண்டிவிட்டுதான் நடக்குது என நினைக்கிறார் இபிஎஸ்.
இதனால அமித்ஷாவிடம் பேசும் போது, “அண்ணாமலையால்தான் பாஜக கூட்டணியில் இருந்தே அதிமுக விலகுச்சு.. நீங்களும் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அவரை மாற்றினீங்க.. திரும்பவும் நாங்களும் கூட்டணியில் இணைஞ்சோம். இப்ப அண்ணாமலைக்கு பதவியே இல்லாத நிலையிலும் அதிமுகவுக்கு எதிராக ரொம்பவே பிரச்சனைகளை தூண்டிவிடுகிறார்.. திமுகவுடன் சேர்ந்துகிட்டுதான் அண்ணாமலை இதை எல்லாம் செய்கிறார்” என சொல்ல இருக்கிறார் எடப்பாடி.
அமித்ஷாவிடம் வெறுமனே சொல்லாமல், அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் பெரிய புகார் பட்டியலையே தரனும்னு ரெடி செஞ்சிருக்காரு இபிஎஸ்” என்கின்றனர் அதிமுக சீனியர்கள்.
ஓ.. அப்படி என்ன ‘அண்ணாமலை’ விவகாரங்களை டெல்லியில் போட்டுடைக்கப் போகிறாராம் இபிஸ்?
திமுக அமைச்சர்களுடன் அண்ணாமலை எப்படி எல்லாம் நெருக்கமாக இருக்கிறார்.. அண்ணாமலை ஜஸ்ட் வாட்ஸ் அப்-ல் ஒரு மெசேஜ் அனுப்பினாலே அவரு சொல்ற வேலையை தட்டாமல் எந்தெந்த அமைச்சர்கள் செஞ்சு கொடுக்கிறாங்கன்னு ‘வலுவான ஆதாரங்களை’ தரப் போகிறாராம்.
முக்கியமாக கோவை நில விவகாரத்தை பற்றி விலாவாரியாக சொல்ல இருக்கிறாராம் இபிஎஸ்.
ஓ.. அந்த ரூ.85 கோடி விவசாய நிலம்.. பால் பண்ணை மேட்டரா?
ஆமாய்யா.. கோவை தொண்டாமுத்தூர் அருகே இக்கரை போளுவாம்பட்டியில் நொய்யல் ஆற்று கரையில் 12.14 ஏக்கர் விவசாய நிலத்தை அண்ணாமலை வாங்கி இருக்கிறார்.. அண்ணாமலைக்கு இதை விற்றதே அதிமுக மூத்த தலைவர் ஒருவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தானாம். அண்ணாமலை நிலம் வாங்கியதில் சிக்கல் இல்லை..
ஆனால் ரூ.80 கோடி மதிப்பிலான நிலத்தை வெறும் ரூ4.5 கோடி என மதிப்பிட்டு பத்திரப் பதிவு செஞ்சுருக்காரு.. இதுதான் சர்ச்சையாக வெடித்தது.
இதுக்கு விளக்கம் தந்த அண்ணாமலை, பால் பண்ணை வைக்கப் போறேன்.. பிரதமரின் திட்டத்தின் கீழ் கடனுதவி வாங்கப் போறேன் என விளக்கம் தந்திருந்தார்..
அண்ணாமலையின் இந்த லேண்ட் டீலிங்கை அதிக செலவே இல்லாமல், கமுக்கமாகவும் சுமூகமாகவும் முடிச்சு கொடுக்க முழு உதவியாக இருந்ததே திமுகவின் ‘அந்த’ அமைச்சர்தான் என எல்லோரும் பேசுறாங்க.. அந்த அமைச்சருக்கும் அண்ணாமலைக்குமான லிங்க் விவரங்களைத்தான் டெல்லியில் அமித்ஷாவிடம் விலாவாரியாக கொடுக்கப் போறாராம் இபிஎஸ்..
ஓ.. அண்ணாமலையால் திமுக அமைச்சர்களுக்கும் நெருக்கடியா?
சரி.. இன்னொரு விஷயம் என்னப்பா?
செங்கோட்டையன் கிளப்பிவிட்ட மேட்டர்தான்.. அதிமுகவில் இருந்து பிரிந்து போனவங்களை மீண்டும் சேர்க்கனும், முதல்வர் வேட்பாளரை மாற்றினால்தான் பாஜக கூட்டணிக்கு திரும்ப வருவேன்னு செங்ஸ், டிடிவி தினகரன் சொல்றது எல்லாமே அண்ணாமலையால்தான்.. என்பதை சொல்ல இருக்கிறார் இபிஸ்.
அத்துடன், தாம் முதலமைச்சராக இருந்தப்ப ஆட்சியை கவிழ்க்க திமுகவுடன் இணைந்து ஓபிஎஸ், டிடிவி தினகரன் என்ன எல்லாம் செஞ்சாங்க என்கிற அப்போதைய ‘உளவுத்துறையின்’ ஸ்டிராங்கான ரிப்போர்ட்டுகளையும் கையோட டெல்லிக்கு கொண்டு போறாராம் எடப்பாடி.
அதோட மட்டுமல்ல… “ஒருவேளை ஓபிஎஸ், டிடிவி தினகரன்னு பிரிந்து போனவங்களை அதிமுகவில் சேர்த்தாலும், என்னை பலவீனப்படுத்தனும் என்பதற்காகவே அதிமுக- பாஜக கூட்டணி வேட்பாளர்களை தோற்கடிக்க தீவிரமாக அவங்க வேலை செய்வாங்க.. எங்க கட்சியில எந்த ஒரு நிர்வாகியும் சரி.. கட்சி தொண்டனும் சரி.. டிடிவி, சசிகலா, ஓபிஎஸ் இவங்களை பக்கத்துலேயே சேர்க்க கூடாதுன்னு உறுதியாக இருக்காங்க.. அவங்களை மீறி கட்சியில் சேர்த்தா கட்சிக்குள் குழப்பம் வரும்.. அது அதிமுக- பாஜக கூட்டணிக்குதான் கடுமையான பாதிப்பைத் தரும்” என்பதையும் அழுத்தம் திருத்தமாக சொல்ல இருக்கிறாராம் இபிஎஸ்.
ஆக.. ரொம்ப ஸ்டிராங்கா பேசப் போறாரு இபிஎஸ்.. குறிப்பாக அண்ணாமலை விவகாரம் என்பதால்தான் நயினாருக்கு அப்படி ஒரு குஷியோ?
இருக்கலாம்.. அதுலயும், “நான் டெல்லி போய்ட்டு திரும்பும் போது அண்ணாமலைக்கு மத்திய அரசு கொடுக்கிற இசட் பிளஸ் பாதுகாப்பை திரும்பப் பெற வைப்பேன்னு” எடப்பாடி சபதமும் போட்டிருக்கிறாராம்..
இப்ப அண்ணாமலை என்னதான் செய்கிறாராம்?
அண்ணாமலை கடந்த சில நாட்களாக தமக்கு ரொம்பவே நெருக்கமான சில முக்கிய பிரமுகர்களை சந்திச்சிருக்காரு.. இவர்களில் நடிகர் ரஜினிகாந்தும் ஒருவர்.. ரஜினிகாந்திடம், பாஜக மேலிடம் பற்றி ஏகத்துக்குமான வருத்தத்தை கொட்டி புலம்பினாராம் அண்ணாமலை.. பாஜக தலைமை கழற்றிவிட்டுருச்சேன்னு புலம்பிய கையோடு, பிஎம் மோடியின் கவனத்துக்கு கொண்டு போகனும்னு சொல்லி இருக்காரு..
அதோடு நிற்காமல், “இப்படியே போனால் நானும் சில விஷயங்களை செய்ய வேண்டியதிருக்கும் அண்ணா” என தனிக்கட்சி தொடங்கும் யோசனையை மேலோட்டமாக ரஜினியிடம் பேசிப் பார்த்தாராம் அண்ணாமலை. அந்த ‘அண்ணாமலை’ ரஜினியோ, ஆகா வில்லங்கமாச்சேன்னு.. பட்டும் படாம டக்கென பேசி வழியனுப்பி வெச்சுட்டாராம் என டைப் செய்தபடியே ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.
