டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தாம் சந்தித்ததாகவும் இந்த சந்திப்பின் போது அமித்ஷாவிடம் என்ன வலியுறுத்தப்பட்டது என்பதையும் எடப்பாடி பழனிசாமி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 17) தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மாண்புமிகு இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர்களை தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேற்று சந்தித்து, தேச விடுதலைக்காக பாடுபட்ட
தெய்வத் திருமகனார் பசும்பொன் ஐயா உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு இந்தியத் திருநாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கிட வேண்டும் என அதிமுக சார்பில் கடிதம் வழங்கி வலியுறுத்தினேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
டெல்லியில் அமித்ஷாவை நேற்று இரவு 8.10 மணிக்கு எடப்பாடி பழனிசாமியும் அதிமுக மூத்த தலைவர்களும் சந்தித்தனர். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்களுக்கும் மேல் நீடித்தது.
இந்த சந்திப்புக்குப் பின்னர் டெல்லியில் செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை. அதேநேரத்தில், பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க கடிதம் கொடுத்தேன் என்று மட்டும் இன்று தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு படங்களையும் பகிர்ந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
டெல்லியில் இருந்து புறப்பட்டார் இபிஎஸ்
தமது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி.