திமுகவின் ‘கொள்கைத் திருவிழா’ ஆண்டுதோறும் முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. தந்தை பெரியார் பிறந்த நாள், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து கொண்டாடப்படுகிறது முப்பெரும் விழா.
இந்த ஆண்டு திமுக முப்பெரும் விழா இன்று (செப்டம்பர் 17) கரூரில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பிரம்மாண்டமாக செய்துள்ளார் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி.

முப்பெரும் விழா நிகழ்வுகள்
முப்பெரும் விழாவில் ஆண்டுதோறும் தலைவர்கள் பெயரால் விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டு விருது பெறுவோர் விவரம்:
பெரியார் விருது- தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவருமான கனிமொழி
அண்ணா விருது-சுப.சீத்தாராமன்
கலைஞர் விருது- நூற்றாண்டு கண்ட சோ.மா.இராமச்சந்திரன்
பாவேந்தர் பாரதிதாசன் விருது- குளித்தலை சிவராமன்
பேராசிரியர் விருது- மருதூர் இராமலிங்கம்
மு.க.ஸ்டாலின் விருது-பொங்கலூர் நா. பழனிசாமி

ஏ.எஸ்.பன்னீர்செல்வனுக்கு முரசொலி செல்வம் விருது
‘முரசொலி’ அறக்கட்டளை சார்பாக ‘முரசொலி செல்வம்’ பெயரிலான முதல் விருது மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வனுக்கு வழங்கப்படுகிறது.
பணமுடிப்பு
தமிழ்நாட்டின் நான்கு மண்டலங்களில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகியவற்றில் கட்சிப்பணியைச் சிறப்பாகச் செய்து வருபவர்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் நற்சான்றிதழும் பணமுடிப்பும் வழங்கப்படும்.
விழா நிகழ்ச்சி
இந்த விழாவுக்கு, தி.மு.க பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்குகிறார். தி.மு.க பொருளாளரும், மக்களவை திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் இ.பெரியசாமி, கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா, அந்தியூர் ப.செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். கரூர் மாவட்டச்செயலாளர் செந்தில் பாலாஜி வரவேற்புரையாற்றுகிறார்.

1,00,000 பேர் சீருடையில்..
இந்த முப்பெரும் விழா – திருவிழாவில் 1,00,000 பேரை சீருடையில் அமர ஏற்பாடு செய்துள்ளார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. 25,000 பெண்களுக்கு ஒரே நிறத்திலான சுடிதார், 25,000 பெண்களுக்கு ஒரே நிறத்திலான சேலை, 25,000 ஆண்களுக்கு வேட்டி- சட்டை, 25,000 இளைஞர்களுக்கு இளைஞரணி சீருடை என மொத்தம் 1,00,000 பேரை சீருடையில் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முப்பெரும் விழாவுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து திமுகவினர் வந்து குவியும் போது மாநாட்டு பந்தலில் 1,00,000 பேரும் சீருடையும் அமர்ந்திருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து சுமார் 1,00,000 திமுகவினர் இந்த மாநாட்டில் பங்கேற்பர் என்பது எதிர்பார்ப்பு.
மழைக்கான வாய்ப்பு
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கரூரை சுற்றிய மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. கரூரில் வானமேகமூட்டமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

முதல்வர் வருகை எப்போது?
சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், திருச்சியில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சமூக நீதி நாள் உறுதியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார். இதனைத் தொடர்ந்து பிற்பகல் கரூர் வந்தடைகிறார். கரூரில் முதல்வர் ஸ்டாலினுக்கு பிரம்மாண்ட வரவேற்பளிக்கப்படுகிறது. பின்னர் மாலை 5 மணிக்கு தொடங்கும் முப்பெரும் விழாவில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
மழைக் காலம் என்பதால் முப்பெரும் விழாவை 2 மணிநேரம் அல்லது 2.30 மணி நேரத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
