ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிமுக இயக்குநர் மூலம் தனது 28வது படத்தை தயாரிக்க உள்ளதாக இன்று (ஆகஸ்ட் 20) அறிவித்துள்ளது.
முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களையும் அறிமுகப்படுத்தி திரையுலகில் அடுத்தடுத்து சாதனை படைத்து வருகிறது கல்பாத்தி குடும்பத்தின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம்.
விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ’கோட்’ திரைப்படமும், இந்தாண்டு ப்ரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான ’டிராகன்’ திரைப்படமும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு பிளாக் பஸ்டர் படங்களாக அமைந்தன.
இந்த நிலையில் தனது நிறுவனத்தின் 28வது திரைப்படத்தில் புதுமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் என்பவரை அறிமுகம் செய்கிறது ஏஜிஎஸ். இவர் பிரபல நடிகரும், இயக்குநருமான பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் ஆவார்.

‘ஏஜிஎஸ் 28’ என்று அழைக்கப்படும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது.
இப்படத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். அவர்களுடன் ஜான் கொக்கேன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம், விவேக் பிரசன்னா, பாலா ஹசன் ஆகியோர் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
‘கே ஜி எஃப்’ படத்தில் தனது அதிரடி இசை மூலம் கவனத்தை ஈர்த்த ரவி பஸ்ரூர் இந்த படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படத்தொகுப்பை கையாளுகிறார். வீரமணி கணேசன் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்க, பீனிக்ஸ் பிரபு சண்டைக் காட்சிகளை இயக்க, தினேஷ் மனோகரன் ஆடைகளை வடிவமைக்கிறார்.
இன்று நடைபெற்ற பட பூஜை விழாவில் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களுடன் படத்தின் தயாரிப்பாளர்களான கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரும்,
படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசரான அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசரான ஐஸ்வர்யா கல்பாத்தி, நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம். வெங்கட் மாணிக்கம் ஆகியோரும் பங்கேற்றனர்.
மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில் இது இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.