கிராம உதவியாளர் நியமனத்தில் அதிக பட்ச வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுதும் காலியாக உள்ள, 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வருவாய் துறை முடிவு செய்தது.
இதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. மாவட்ட கலெக்டர்கள் மேற்பார்வையில், வருவாய் துறை உயரதிகாரிகள், தேர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கிராம உதவியாளர் நியமனம் தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. இந்த சுற்றறிக்கையில், கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பை உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா , வருவாய் நிர்வாக ஆணையருக்கு இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையின் படி கிராம உதவியாளர் பணிக்கு கல்வி தகுதியாக எஸ்.எஸ்.எல்.சி. நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
பொதுப்பிரிவினருக்கு 30 வயதிலிருந்து 32 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் பி.சி, எம்.பி.சி மற்றும் டி.என்.சி பிரிவினருக்கு 35 வயதிலிருந்து 39 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஆதரவற்ற கைம்பெண்களுக்கு வயது வரம்பு 35 வயதிலிருந்து 42 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக நேரடி நியமனம் செய்பவர்களுக்கு இந்த வயது வரம்பு உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளது என சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
