ADVERTISEMENT

”விஜய் தாமதமாக வந்தார் என்பது அபாண்டமான குற்றச்சாட்டு” – அழகிரியை சுட்டிகாட்டிய ஆதவ் அர்ஜுனா

Published On:

| By Pandeeswari Gurusamy

கரூர் பெருந்துயரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கில், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக இன்று (அக்டோபர் 13) உத்தரவிட்டுள்ளது.

விசாரணை குழுவில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் பெறுவார்கள். எனினும் அவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்களாக இருக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தவெக தேர்தல் மேலாண்மை குழு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா , “காவல்துறை கூறிய இடத்தில்தான் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். கரூர் காவல் துறையினர்தான் எங்களை வரவேற்றனர். வேறு எங்கும் வரவேற்காத நிலையில், கரூரில் மட்டும் காவல்துறை எங்களை வரவேற்றது ஏன்? விஜய் தாமதமாக வந்தார் என்பது அபாண்டமான குற்றச்சாட்டு. தவெகவினரை தீவிரவாதிகள் போல காவல்துறையினர் அடித்து அனுப்பினர். தவெகவை முடக்க திமுக முயற்சித்தது. காவல்துறை அனுமதி அளித்த நேரமான பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணிக்குள் விஜய் வந்தார். ஒட்டுமொத்த கட்சியையும் முடக்கும் செயலை திமுக செய்வதை நாங்கள் உணர்ந்தோம். தவெக மீது எப்படி பொய் குற்றச்சாட்டுகளை சொல்லலாம் என அரசு திட்டமிட்டது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சதி உள்ளது.

கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்றதும் கரூர் மாவட்ட எல்லையில் காத்திருந்தோம். நீங்கள் உள்ளே வந்தால் கலவரம் ஆகிவிடும் என காவல்துறை கூறியதால் வெளியேறினோம். மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோரை கைது செய்து கட்சியை முடக்க திமுக முயற்சிக்கிறது. ஒருநபர் ஆணையம் அமைத்த பிறகு அரசு அதிகாரிகள் ஒவ்வொருவராக வந்து பேட்டி அளித்தனர். விஜய்யின் தலைமைப் பண்பு உள்ளிட்டவை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது அதிர்ச்சியளித்தது.

ADVERTISEMENT

தவெக தலைவர் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் அக்டோபர் 1ம் தேதி டெல்லிக்கு வந்தேன். நெரிசலில் இறந்த 41 பேரின் குடும்பத்தையும் தத்தெடுத்து அவர்களோடு இணைந்து பயணித்து உண்மையை கொண்டு வருவோம். 41 பேரின் குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். தவெக மற்றும் விஜய்யை குற்றவாளி ஆக்கும் வகையில் உயர்நீதிமன்றத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு எந்த அளவுக்கு தவறு என்பதை உச்சநீதிமன்ற உத்தரவு தெளிவாக்கியுள்ளது. எங்கள் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. சரியான உத்தரவு வந்துள்ளது.

ADVERTISEMENT

தவெக மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. 27 சதவிகிதத்திற்கு மேல் தவெகவின் வளர்ச்சி உள்ளது. எந்த அளவுக்கு தவெகவை முடக்க நினைக்கிறார்கள் என எங்களுக்கு தெரியும்.

கரூர் போலீசை நம்ப தயாராக இல்லை

கரூரில் உயிரிழந்தது எங்களது உறவுகள். எங்களுடைய குடும்பம். அப்படியென்றால் எங்கள் தலைவருக்கு எவ்வளவு மனவேதனையாக இருந்திருக்கும். எவ்வளவு வலியோடு நாங்கள் இருந்திருப்போம். இன்றைக்கும் கரூர் போலீசை நம்பி நாங்கள் அந்த இடத்திற்கு போக தயாராக இல்லை. அன்றைக்கு கரூர் எங்களை அழைத்துச் சென்று லத்தி சார்ஜ் செய்து நிறைய பிரச்சனைகளை கொண்டு வந்ததே கரூர் போலீஸ்தான். 90 சதவிகிதம் நல்ல போலீஸ் ஆபீசர்கள் நல்ல எண்ணத்தோடு உள்ளனர். நாங்கள் எல்லோரையும் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் கரூர் போலீஸ் ஒரு எக்ஸ் மினிஸ்டரின் கன்ட்ரோலில் உள்ளது.

ஒரு நேரத்தில் மதுரைக்குள் சென்றால் காலை வெட்டுவோம் என்று சொல்வார்கள். மதுரை அழகிரியின் கோட்டை என்று சொல்வார்கள். ஒரு ரவுடித்தன அரசியல் செய்வார்கள். ஆனால் அதையெல்லாம் மீறி இன்று அழகிரி அண்ணன் அரசியலிலேயே இல்லை. அந்த மாதிரி கரூர் கிளீன் பண்ணப்படும். எங்கள் தலைவர் முதலமைச்சராகும் போது யார் யார் தவறு செய்தார்களோ அவர்களை தேடி கண்டுபிடிப்போம். உண்மை வெளி வரும்” என்றார்.

மேலும் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பதிவில், “கரூரில் உயிரிழந்த எங்கள் உறவுகளின் குடும்பங்களுடன் எங்கள் பயணம் எப்போதும் தொடரும். எத்தனை சோதனைகள் வந்தாலும், எத்தகைய அதிகார வலிமையை எதிர்கொண்டாலும், எத்தனை போராட்டங்களைச் சந்தித்தாலும் நீதியை நிலைநாட்டத் தொடர்ந்து பாடுபடுவோம். வாய்மையே வெல்லும்! வாய்மையே வெல்லும்! வாய்மையே வெல்லும்!” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share