உச்சநீதிமன்றத்துக்கு தமிழக மூத்த பெண் வழக்கறிஞர் வி.மோகனா உட்பட 5 புதிய நீதிபதிகள்: மத்திய அரசு ஒப்புதல்- பின்னணி என்ன?

By Mathi

|

Published on 1 Jun 2026, 9:52 AM

Supreme Court Five Judges

உச்சநீதிமன்றத்துக்கு (Supreme Court) தமிழகத்தின் மூத்த பெண் வழக்கறிஞர் வி.மோகனா உட்பட 5 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து மத்திய அரசு இன்று ஜூன் 1-ந் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு ஒப்புதல் அளித்த 5 நீதிபதிகளில், 4 பேர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள்.

யார் அந்த 5 புதிய நீதிபதிகள்?

மூத்த வழக்கறிஞர் வி. மோகனா

தமிழ்நாட்டின் கோவையைச் சேர்ந்த சேர்ந்தவர். உச்சநீதிமன்றத்தின் வரலாற்றிலேயே வழக்கறிஞராக இருந்து நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்படும் 2-வது பெண்மணி என்ற பெருமையைப் பெறுகிறார். இதன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.வி. நாகரத்னாவுடன் சேர்த்து தற்போது 2 பெண் நீதிபதிகள். 2031-ம் ஆண்டு ஜூன் வரை 5 ஆண்டுகள் பதவியில் இருப்பார்.

ADVERTISEMENT

நீதிபதி ஷீல் நாகு

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வந்த இவர், தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்டுள்ளார். 2029-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நீதிபதி ஷீல் நாகு ஓய்வு பெறுவார்.

நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர்

மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வந்தவர். உச்சநீதிமன்றத்தில் தற்போது ஜார்கண்ட் மாநிலத்திற்குப் பிரதிநிதித்துவம் இல்லை என்பதால் இவரது நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது. 2030ம் ஆண்டு மே மாதம் வரை இவர் பதவியில் இருப்பார்.

ADVERTISEMENT

நீதிபதி சஞ்சீவ் சச்தேவா

மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர். உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக மூன்றரை ஆண்டுகள் பதவியில் இருப்பார்.

நீதிபதி அருண் பல்லி

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர். 3 ஆண்டுகளுக்கு மேல் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றுவார்.

ADVERTISEMENT

நியமனங்களின் பின்னணி

1956-ல் உச்சநீதிமன்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்போது தலைமை நீதிபதி தவிர்த்து நீதிபதிகள் எண்ணிக்கை 10 ஆக இருந்தது. 1960-ல் இந்த எண்ணிக்கை 13 ஆகவும் பின்னர் 17-ஆகவும் உயர்த்தப்பட்டன.

1986-ம் ஆண்டு சட்ட திருத்தத்தின் மூலமாக 25 ஆகவும் 2009-ல் 30; 2019-ல் 34 ஆகவும் நீதிபதிகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டன.

அதாவது தற்போது உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியுடன் சேர்த்து நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 34 ஆக இருந்தது. தலைமை நீதிபதியை சேர்க்காமல் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கையை 37 ஆக உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை குழு மே 5-ந் தேதி முடிவு செய்தது.

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மத்திய அரசின் இம்முடிவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்திருந்தார்.

இதனையடுத்து 5 புதிய நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. இதற்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளதாக சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இன்று அறிவித்தார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel