’ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி’ பாடல் இன்றும் பலரது ப்ளேலிஸ்டில் உண்டு. அது எந்தப் படத்தில் இடம்பெற்றது? யார் இசையமைப்பாளர் என்று தெரியாமல் அந்த பாடலைக் கேட்பவர்களும் உண்டு. எப்போது இது வெளிவந்தது என்று கேட்பவர்களும் உண்டு. 13 years of leelai which portrait elegance of love
அவர்களுக்கான பதில். இந்த பாடல் ‘லீலை’ என்ற படத்தில் இடம்பெற்றது.
ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு இசையமைத்தவர் சதீஷ் சக்ரவர்த்தி. இப்படம் 2012இல் வெளியானது.

சில பிரபலங்கள்!
எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர் ஆண்ட்ரூ லூயிஸ். இவர் இயக்கிய முதல் படமிது. 2008ஆம் ஆண்டிலேயே இப்படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கிவிட்டன.
இதில் நாயகனாக நடித்த ஷிவ் பண்டிட், நாயகியாக நடித்த மானசி பரேக் இருவருமே விளம்பரப்பட நட்சத்திரங்கள். அவர்களது வசீகர தோற்றத்தால் ஈர்க்கப்பட்ட இயக்குனர்கள், இருவரையும் தமிழுக்கு அழைத்து வந்தார். தமிழில் அமைந்த வசனங்களை மொழிபெயர்த்து விளக்கி, அவர்களை வசனங்களைப் பேச வைத்தார்.
ஒரு இளைஞனின் வாழ்வில் அடுத்தடுத்து மூன்று இளம்பெண்கள் வந்து போவதே இப்படத்தின் கதை. மூவருமே தோழிகள். முதலிரண்டு தோழிகள் காதலிக்கும்போது, மூன்றாமவர் எதிர்ப்பு தெரிவிப்பார்.
சில காலம் கழித்து, அந்த மூன்றாவது பெண்ணை அந்த இளைஞன் உயிருக்குயிராகக் காதலிப்பார். ஆனால், தனது பெயரைச் சொல்லாமல் வேறு பெயரில் அறிமுகமாகியிருப்பார். ஏனென்றால், தோழியர் இருவரைக் காதலித்தவர் என்பதால் அந்த பெயரையே அப்பெண் வெறுப்பதுதான்.
இதில் நாயகியின் பெயர் கருணை மலர். நாயகன் பெயர் கார்த்திக்.
தனது உண்மையான பெயரையும் அடையாளத்தையும் நாயகியிடம் நாயகன் வெளிப்படுத்தினாரா என்பதாகப் படம் முடிவடையும்.
இப்படத்தில் நடித்த ஷிவ், மானசி இருவருமே அவ்வப்போது இந்திப் படங்களில் தலைகாட்டி வருகின்றனர்.
இந்தப் படத்தில் காதல் காட்சிகள் கவித்துவமாக இருந்தன. அதன் பின்னணியில் ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜ் இருந்தார்.
நகைச்சுவைக் காட்சிகளில் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் இதில் சந்தானம் நடித்திருந்தார். ’லொள்ளுசபா’வில் நடித்த ஈஸ்டர், இப்படத்தில் அவருடன் வந்து போயிருப்பார்.
இப்படத்தில் மாயா, விபா நடராஜன், சுஹாசினி ராஜுவுடன் லட்சுமி ராமகிருஷ்ணன், பாய்ஸ் ராஜன் உட்படப் பலர் நடித்திருந்தனர்.
ஆஸ்கர் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் இப்படத்தை வெளியிட்டார் தயாரிப்பாளர் வி.ரவிச்சந்திரன். இவர் நடத்தி வந்த துணை நிறுவனமான ‘ஆர் பிலிம்ஸ்’ சார்பில் இப்படம் தயாரிக்கப்பட்டது.
இதனை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ், பின்னர் ‘கொலைகாரன்’ என்ற படத்தை விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிப்பில் இயக்கினார். எஸ்.ஜே.சூர்யாவை நாயகனாக்கி ’ வதந்தி’ என்ற வெப்சீரிஸை தந்திருந்தார்.
இப்படிச் சில பிரபலங்கள் ‘லீலை’யோடு சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.
ஈர்க்கும் பாடல்கள், சிரிக்க வைக்கிற நகைச்சுவை, நயமான காதல் காட்சிகள் என்றிருந்த இப்படத்தை அழகழகான விஷுவல்கள் தூணாகத் தாங்கியிருந்தது.

அபாரமான பாடல்கள்!
’ஒரு கிளி ஒரு கிளி’ பாடல் எப்படிக் காதல் உணர்வின் தகிப்பைத் தாங்க மாட்டாமல் காதலர்கள் தவிப்பதைக் காட்டியதோ, அதற்கிணையாக முதன்முறையாகக் காதல் பொங்கியெழும்போது ஏற்படுகிற மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் வெளிக்காட்டியது ‘ஜில்லென்ற ஒரு கலவரம்’ பாடல். இந்த ஆல்பத்தில் ‘பொன்மாலை பொழுது’ என்ற ஜாலி பாடல் உண்டு. இவ்விரண்டையும் எழுதியவர் இசையமைப்பாளர் சதீஷ் சக்கரவர்த்தி.
’உன்னை பார்த்தபின்பு கண்கள் தூக்கமேது’ என்ற சோகப்பாடல் சட்டென்று நம்மில் கண்ணீர் துளிர்க்க வைக்கும். இதனையும் ஒரு கிளி பாடலையும் கவிஞர் வாலி எழுதியிருந்தார்.
இது போக ‘பப்பிள்கம்’ எனும் ‘ராப்’ ரக பாடலும் இதிலுண்டு. இதனைப் பா.விஜய் எழுதியிருந்தார். படத்தில் இது இடம்பெற்றதா எனத் தெரியவில்லை.
இப்படத்தின் அனைத்து பாடல்களும் திரும்பத் திரும்ப கேட்கும் ரகத்தில் இருந்தன. இப்போது கேட்டாலும், அந்த எண்ணம் மீண்டும் உறுதிப்படும்.
இசையமைப்பாளர் சதீஷ் சக்ரவர்த்தி ‘லீலை’ படத்திற்குப் பிறகு மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றிருக்க வேண்டும். ஆனால், ஆடியோ வெளியாகிச் சில ஆண்டுகள் கழித்தே படம் வெளியானது. கிட்டத்தட்ட நான்காண்டுகள் தொலைக்காட்சி உரிமை விற்பனையாகாமல் இழுத்தது அந்த பின்னடைவுக்குக் காரணமாக இருந்தது. ஒருவழியாக, 2012இல் தியேட்டர்களில் வெளியானது இப்படம்.
இதற்குப் பின் கனிமொழி, யாசகன், நீலம், நேர் எதிர் படங்களுக்கு இசையமைத்தார் சதீஷ் சக்ரவர்த்தி. ஆனால், அவை பெரியளவில் ரசிகர்களை வசீகரிக்கவில்லை.
இப்போதும் தொலைக்காட்சியில் திரையிடப்படுகையில், ‘ஒரு தடவை பார்க்கலாம்’ என்று கமெண்ட் சொல்லத்தக்க ஒரு ‘பீல்குட் ரொமான்ஸ் காமெடி’ படமாகத் தென்படும் ‘லீலை’. நேற்றோடு இப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.