-மாயோன்
பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது (BJP–JD(U) Alliance’s Victory in the Bihar Assembly Election). பாஜக கூட்டணியின் இந்த பிரம்மாண்டமான வெற்றிக்கு நிதிஷ்குமார் அரசின் மகளிர் நலன் சார்ந்த திட்டங்கள், குழப்பமே இல்லாத பாஜக கூட்டணி, பிரதமர் மோடி அலை, பாஜகவின் பூத் லெவல் தேர்தல் வியூகம் மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பங்கள் என பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
1. நிதிஷ்குமாரின் ஆளுமை
- பீகார் அரசியலில் நிதிஷ்குமார் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்கிறார்.
- நிதிஷ்குமார் ஒரு புத்திசாலித்தனமான, மூத்த அரசியல் தலைவர் என்கிற பிம்பம் பெரும் தாக்கத்தை உருவாக்கி உள்ளது
- பீகார் அரசியலிலும் ஆட்சியிலும் நிதிஷ்குமாருக்கான நீண்டகால அனுபவம் மிகப் பெரிய பலமாக உள்ளது. பல ஆண்டுகளாக முதல்வராகப் பதவி வகித்த அவரது அனுபவம், நிர்வாகத் திறமை, மற்றும் மாநில வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்புகள் மக்கள் மனதில் ஆகப் பெரும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது என்பது மிகையல்ல
2. மோடி அலை
- தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு மோடி அலை ஒரு காரணமாகவும் பார்க்கப்படுகிறது.
- பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் தனிப்பட்ட செல்வாக்கு பீகார் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த தவறவில்லை.
- லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) ஆட்சிக்கு வந்தால் பீகாரில் “ஜங்கிள் ராஜ்” எனப்படுகிற காட்டு தர்பார் ஆட்சி திரும்பும் என்று மோடி திரும்ப திரும்ப பிரசாரம் செய்ததும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது எனலாம். கடந்த கால ஆர்ஜேடி ஆட்சியை ஒப்பிடுகையில் பாஜக- ஜேடியூ கூட்டணி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.
- தேர்தலுக்கு பின்னர்தான் முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அமித்ஷா கூறியிருந்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ்குமார்தான் என பகிரங்கமாக மோடி செய்த பிரசாரமும் ஒரு காரணம்.
3. பெண் வாக்காளர்கள்
- பீகார் தேர்தலில் பாஜக கூட்டணியின் வெற்றிக்கு பெண் வாக்காளர்களின் வாக்கும் மிக முக்கிய காரணம் என்கின்றனர்.
- பாலிகா சைக்கிள் யோஜனா என்ற பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் திட்டம், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கியது, ஜீவிகா’ சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கியது, வீடு தோறும் பெண்களுக்கு ரூ10,000 கடன் வழங்கிய முதலமைச்சர் மகிளா ரோஜ்கர் யோஜனா உள்ளிட்ட பெண்களை மையப்படுத்திய திட்டங்கள், பெண் வாக்காளர்களை பாஜக கூட்டணி பக்கம் அப்படியே சாய வைத்துள்ளது. குறிப்பாக தேர்தல் தேதி அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட ரூ10,000 கடன் உதவி திட்டம், தேர்தல் நேரத்தில் இந்த ரூ10,000 பணம் பட்டுவாடா செய்யப்பட்டது ஆகியவை பெண்களின் ஓட்டுகளை பாஜக கூட்டணி அள்ளிச் செல்ல காரணமாக இருந்தது.
- 2016-ல் அமல்படுத்தப்பட்ட மதுவிலக்கு, பெண்களின் குரலுக்கு செவிசாய்க்கும் ஒரு தலைவராக நிதிஷ்குமாரை கொண்டாட வைத்தது.
4. அமித்ஷா வியூகம்
- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தேர்தல் வியூகமும் பாஜக கூட்டணியின் வெற்றிக்கு காரணம். பொதுவாக, மாநிலம் தழுவிய தேர்தல் வியூகம் என்பதற்கும் அப்பால் ஒவ்வொரு தொகுதிக்குமான தனித்தனி தேர்தல் வியூகம் வகுத்து செயல்படுத்திய அமித்ஷாவின் வியூகம் ‘அடேங்கப்பா’ வெற்றிக்கு காரணம் என்கின்றனர் பாஜகவினர்.
- ஒவ்வொரு தொகுதியிலும் பூத் லெவல் வியூகத்தை அமித்ஷா செயல்படுத்தினார். எந்த ஒரு பூத்திலும் வாக்குகள் சிதறிப் போய்விடக் கூடாது என்பதால் ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, வலிமையான கூட்டணியின் அவசியத்தை விளக்கி பேசிய வியூகமும் பெருமளவு கை கொடுத்திருக்கிறது.
5. சொந்த பலத்தில் பாஜக
- பாஜக தேசியக் கட்சியாக, மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தாலும் பீகாரில் தனித்து ஆட்சி அமைக்கக் கூடிய வலிமை கொண்ட கட்சி அல்ல. பீகாரில் கூட்டணி கட்சிகளை குறிப்பாக ஜேடியூவை மட்டுமே சார்ந்து இருக்கக் கூடிய நிலையில்தான் உள்ளது பாஜக. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பீகாரில் பாஜகவை தனிப்பெரும்பான்மை பெறக் கூடிய வலிமை உள்ள கட்சியாக மாற்றுகிற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
- இதற்காக பீகார் மாநில பாஜகவின் கட்டமைப்பு சீரமைக்கப்பட்டு வலிமைப்படுத்தப்பட்டது. பாஜகவில் ஒவ்வொரு பிராந்தியத்துக்குமான புதிய தலைவர்கள் அடையாளப்படுத்தப்பட்டு முன்னிறுத்தப்பட்டனர். இத்தகைய வியூகம், பல்வேறு ஜாதி வாக்காளர்களிடம் பாஜகவை கொண்டு சேர்க்கவும் உதவியது.
- பாஜக இயல்பாகவே உயர் ஜாதியினரை வாக்கு வங்கியாக கொண்டது; நிதிஷ்குமாரின் ஜேடியூவுடன் கை கோர்த்துக் கொண்டே தமது கட்சியை வலுப்படுத்திக் கொள்ளும் முயற்சியின் மூலமாக மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (EBCs), யாதவர் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (non-Yadav OBCs), மற்றும் தலித்துகளிடையேயும் பாஜக ஆழ ‘ஊடுருவிவிட்டது’ என்பதுதான் தேர்தல் முடிவு சொல்லும் பட்டவர்த்தமான உண்மை.
6. அரசு திட்டங்கள்- வாக்குறுதிகள்
- மத்திய, மாநில அரசுகளின் அனைவருக்கும் வீடு, சுகாதாரத் திட்டங்கள், விவசாயிகளுக்கான மோடி பணம், மின்சாரக் கட்டணக் குறைப்பு போன்றவை மக்களிடம் நம்பிக்கை மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இது தேசிய ஜனநாயகக் கூட்டணி மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும் செய்தது. இலவச மின்சாரம் மற்றும் பெண்களுக்கு ரூ2. 2ல் லட்சம் முதல் ரூ10 லட்சம் வரை கடன் வழங்குவோம் என்ற வாக்குறுதிகள் பீகாரின் குக்கிராமங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்றன.
7. பாஜக பூத் கமிட்டி
- பாஜகவின் பூத் கமிட்டியின் செயல்பாடுகளையும் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கான அடித்தளமாக சொல்லலாம். பாஜக பலவீனமாக இருக்கும் பூத்துகளை கண்டறிவது, அங்கே பலம் இல்லாமல் இருப்பதற்கான காரணங்களை ஆராய்வது, அதை சரி செய்வது என பூத் லெவல் வியூகம் பெரிய அளவில் கை கொடுத்திருக்கிறது. அத்துடன் வாக்குப் பதிவின் போது, வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு தவறாமல் அழைத்து வந்து ஓட்டுப் போட வைத்ததிலும் பாஜகவின் பூத் முகவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.
- அதே போல SIR நடவடிக்கையின் போது, வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்வது, விடுபட்ட பெயர்களைச் சேர்ப்பது, மற்றும் போலி வாக்காளர்களை நீக்குவது ஆகியவற்றில் பாஜக கூட்டணியினர் பம்பரமாக சுழன்றனர். ஆனால் காங்கிரஸ்- ஆர்ஜேடியினர் விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டு கோட்டை விட்டனர்.
- பூத் லெவலில் மக்களுடன் இணைந்து நின்றவர்களாக பாஜகவின் பூத் ஏஜெண்டுகள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்; இது மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
8. நேரடி பிரசாரம்
- தேர்தல் காலங்களில் பொதுக் கூட்டங்களில் பேசுவது பிரசாரங்களின் முக்கிய அம்சம். அதற்கு அப்பாலும்
- பாஜகவினர் பல்வேறு குழுக்களை உருவாக்கி ஒவ்வொரு வீடு வீடாக சென்று பிரசாரத்தை முழு வீச்சில் செய்தனர்.
- இப்படி மக்களிடம் நேரடியாக சென்று பிரசாரம் செய்கிற போது, அவர்களின் பிரச்சனைகளை ஆகக் கூடுமான வரை அங்கேயே சரி செய்து கொடுப்பது, நம்பிக்கையாக வாக்குறுதி அளிப்பது ஆகியவற்றை ஆயுதமாக கையில் எடுத்திருந்து பாஜக. இத்தகைய அணுகுமுறை, கிராமப் புறங்களில் பாஜகவுக்கான செல்வாக்கை இயல்பாகவே அதிகரிக்கச் செய்துவிட்டதுருவாக்கியது.
9. குழப்பமே இல்லாத கூட்டணி
- பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடக்கம் முதலே எந்த குழப்பமும் ஏற்படவில்லை. கடந்த 2020 தேர்தலில் கூட சிராக் பாஸ்வான் வெளியேறினார்; பாஜக- ஜேடியூ இடையே சிராக் பாஸ்வான் விவகாரத்தில் முரண்பாடுகள் இருந்தன.
- ஆனால் இந்த முறை குறிப்பாக தொகுதி பங்கீடு விவகாரத்தில்பாஜக, ஐக்கிய ஜனதா தளம், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளுமே ‘நெகிழ்வு’ தன்மையை கடைபிடித்தன. பெரிய அளவுக்கு பிரச்சனை வெடிக்காமல் பார்த்து கொண்டன. இது ஒருவிதமான மெச்சூரிட்டியை வெளிப்படுத்தியது.
- முதலமைச்சர் வேட்பாளர் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்த உடனேயே நிதிஷ்குமார்தான் முதல்வர் வேட்பாளர் என ஒரே போடாகப் போட்டு பிரச்சனையே இல்லாமல் பார்த்து கொண்டது பாஜக அணி.
- ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பாஜக கூட்டணியின் தலைவர்கள் ஆகக் கூடுமானவரை தங்களது தனித்த செல்வாக்கை பயன்படுத்தி வாக்குகளை ‘கூட்டணிக்கு’ கொண்டு வந்து சேர்த்ததும் இந்த இமாலய வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
10. இந்தியா கூட்டணி குழப்பம்- சிறு கட்சிகள்
- காங்கிரஸ், ஆர்ஜேடி, இடதுசாரிகளை உள்ளடக்கிய
மகாகத்பந்தன் அல்லது இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முதல் வேட்பாளர்கள் அறிவிப்பு வரை இடைவிடாத குழப்பங்கள் பகிரங்கமாகவே வெடித்தது வாக்காளர்களுக்கு ஒருவித அவநம்பிக்கையை உருவாக்கிவிட்டது. காங்கிரஸ்-ஆர்ஜேடி கூட்டணியின் தோல்விக்கு இந்த குழப்பமும் மிக முக்கிய காரணம். - 2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி 40.1% வாக்குகளைப் பெற்றது; ஆனால் 2025 சட்டமன்றத் தேர்தலில் 37.3% என இந்த வாக்கு சதவீதம் குறைந்து போய்விட்டதும் கவனிக்கத்தக்கது.
- அத்துடன் இந்த முறை பிரஷாந்த் கிஷோரின் “ஜன் சுராஜ் கட்சி” (JSP) 3.5% வாக்குகளைப் பெற்றது. ஓவைசியின் மஜ்லி கட்சியும் நிதிஷ்குமார் ஆட்சிக்கு எதிரான வாக்குகளைப் பிரித்தன. இது ஒருவகையில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சாதகமாக அமைந்துவிட்டது. பாஜக கூட்டணி சொற்ப வாக்குகளில் பல தொகுதிகளில் வெல்ல இத்தகைய சிறிய கட்சிகள் வாக்குகளைப் பிரித்ததும் ஒரு காரணம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
