தன்னிடம் இருந்து காவல்துறையினர் பறிமுதல் செய்த புத்தகங்களைத் திருப்பிக் கேட்டு பழ.நெடுமாறன் வழக்குத் தொடுத்துள்ளார்.
தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக புத்தகம் வெளியிட்டதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், 2002ல் கைது செய்யப்பட்டார். பொடா சட்டத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் வெளியிட்ட புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது சம்பந்தமான வழக்கை 2006-ல் திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு வாபஸ் பெற்றதை அடுத்து, இந்த வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களை திரும்பத் தரக் கோரி பழ.நெடுமாறன் தாக்கல் செய்த மனுவை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பழ.நெடுமாறன் தாக்கல் செய்த மனுவை நீதிபதி எம்.வி.முரளிதரன் இன்று (மார்ச் 24) விசாரித்தார்.
’’வழக்கு வாபஸ் பெறப்பட்ட நிலையில் அந்த வழக்குக்குக் காரணமானவை என்று சொல்லப்படும் புத்தகங்களை ஏன் காவல்துறையினர் வைத்திருக்க வேண்டும்? வெளிநாடுகளுக்கு இந்த புத்தகங்களை ஏற்றுமதி செய்ய வேண்டும். வழக்கு வாபஸ் பெறப்பட்டுவிட்ட நிலையில் இந்த புத்தகங்களை காவல் துறையினர் பாதுகாப்பில் வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை’’ என பழ.நெடுமாறன் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்திய ராணுவத்துக்கு எதிராகவும், படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பற்றியும் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ள இந்த புத்தகங்களை புழக்கத்துக்கு அனுமதித்தால் பொது அமைதி பாதிக்கப்படும் எனக் கூறி கீழமை நீதிபதி, புத்தகங்களை திருப்பி வழங்க மறுத்து உத்தரவிட்டுள்ளார் என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பழ.நெடுமாறன் மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
