திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தமது உத்தரவில் பயன்படுத்தி இருக்கும் படையெடுப்பு, ஆக்கிரமிப்பு போன்ற வார்த்தைகள் தங்களை வேதனைப்படுத்தி உள்ளதாக சிக்கந்தர் தர்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி ராம ரவிக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபம் ஏற்ற அனுமதி அளித்தார்.
ஆனால், காவல்துறையினர் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளைக் காரணம் காட்டி அனுமதி மறுத்தனர். இதனால் மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) பாதுகாப்போடு மனுதாரர் தீபம் ஏற்றலாம் என்றும் தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இருப்பினும் இந்த உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தவில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது.
நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் உத்தரவுகளை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன..
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணா அமர்வு முன்பு நடந்த இந்த வழக்கு விசாரணையில், தமிழக அரசு, கோயில் நிர்வாகம் மற்றும் தர்கா தரப்பினர் தங்கள் வாதங்களை விரிவாக முன்வைத்தனர்.
தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை முன்வைத்த வாதங்கள்:
- மலை உச்சியில் உள்ள தூண் தீபத் தூண் அல்ல.
- தர்கா அருகே இருப்பது சர்வே தூண்.
- சமண மலையிலும் அதே போல ஒரு தூண் உள்ளது.
- 73 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில்தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது; இதில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை.
- கோயிலின் பழமையான மரபுகளையும், நிர்வாகத்தின் அதிகாரத்தையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்
- தீபம் ஏற்றும் இடம் மற்றும் முறை குறித்து கோயில் நிர்வாகமே முடிவு செய்ய வேண்டும்.
- இந்தப் பிரச்சினை மத நல்லிணக்கத்தையும் பொது அமைதியையும் பாதிக்கும் என்பதால், நிலைமையைப் பாதுகாக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
- 1994-ஆம் ஆண்டுக்குப் பின்னரே இந்தப் பிரச்சினை எழுந்தது.
- 2014-ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற அமர்வு உச்சிப் பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.
- மனுதாரர் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்.
- தர்கா நிர்வாகம் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது; ஆகையால் அவர்களின் தரப்பைக் கேட்காமல் அவமதிப்பு நடவடிக்கையை விசாரணைக்கு எடுத்தது தவறு.
கோயில் நிர்வாகத்தின் வாதங்கள்:
- தீபம் ஏற்றும் விவகாரத்தில் தங்களுக்கே முழுமையான அதிகாரம் உண்டு
- கோயில் நிர்வாகத்தில் உயர் நீதிமன்றம் நேரடியாகத் தலையிட முடியாது.
- 100 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் நடைமுறை ஆகம விதிப்படியே நடந்து வருகிறது.
- கோயிலின் பழக்கவழக்கங்களை மாற்ற தனிநபர் கோர எந்த உரிமையும் இல்லை.
- கோயில் நிர்வாகத்தை இந்த விவகாரத்தில் கட்டாயப்படுத்த முடியாது.
- இந்துத்துவா அமைப்பினர்தான் ஆண்டு தோறும் கார்த்திகை தீபம் ஏற்றும் மனுவைத் தாக்கல் செய்கின்றனர்.
தர்கா நிர்வாகத்தின் வாதங்கள்:
- தனி நீதிபதி அவசர அவசரமாக வழக்கை விசாரித்தார்.
- தர்கா தரப்பு வாதங்களை காணொளி வாயிலாகக் கேட்க மறுத்துவிட்டார்.
- ”தர்கா தரப்பைக் கேட்டால் என் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரித்து விடும், எனவே இன்று கேட்கப் போவதில்லை” என்று தனி நீதிபதி நேரடியாகவே கூறினார்.
- தர்கா தரப்பு வாதங்களைக் கேட்காமல், பாதியிலேயே வீடியோ கால் இணைப்பைத் துண்டித்தார். இது தங்களை அவமதித்த செயல்.
- தனிநீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தமது உத்தரவில் படையெடுப்பு, ஆக்கிரமிப்பு என பயன்படுத்திய வார்த்தைகள் எங்களைப் பாதிக்கிறது. இந்த வழக்கில் நாளையும் விசாரணை நடைபெற உள்ளது.
