கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் மகளிர் ஆணையத்திற்கு வரும் புகார்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக மகளிர் ஆணைய தலைவர் குமாரி தெரிவித்துள்ளார்.
கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையல் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி இன்று பாதிக்கப்பட்ட பெண்ணை அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாதிக்கப்பட்ட மாணவியை சந்தித்து அவரின் நிலை மற்றும் தேவைகளை கேட்டறிந்தேன். இந்த வழக்கில் போலிசார் 3 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞரையும் பார்க்க உள்ளேன். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவ சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனை தேவை உள்ளது. அவருக்கு கவுன்சிலிங் தர வேண்டும்.
மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முதலமைச்சர் ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.இதுபோன்ற வழக்குகளில் தண்டனை உடனடியாக வழங்கப்படுகிறது . இந்த சம்பவம் நடைபெற்ற இடத்திலும் நான் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளேன் . மக்களிடையே நிறைய விழிப்புணர்வு இருப்பதால், அதிகமாக பெண்கள் தைரியத்துடன் புகார்களை கூறுகிறார்கள்.
முன்பு புகார் சொல்ல பயப்பட்டார்கள். ஆனால் தற்போது தீர்வு கிடைக்கும் என்பதால் தைரியமாக புகார்கள் கூறுகிறார்கள்.
மகளிர் ஆணையத்திற்கு முன்பு புகார்கள் வராது. தற்போது நிறைய பேர் புகார்கள் அளிக்கின்றனர். மகளிர் ஆணையத்திற்கு வரும் புகார்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
பாலியல் வழக்குகளில் கடும் தண்டனை அளித்தால் குற்றங்கள் குறையும். நிறைய புகார்களுக்கு தீர்வு பெற்று தந்துள்ளோம்.
இதுபோன்ற வழக்குகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வழக்கில் போலீசார் நன்றாக வேலை செய்துள்ளார்கள் என்றார்.
அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,
மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் டிஜிபிக்கு பரிந்துரை அனுப்பி உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
