பெண்ணை மிரட்டி நகை, பணம் பறிப்பு : ஓய்வு பெற்ற காவல் அதிகாரியின் மகன் அதிரடி கைது

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவையில் Bumple App மூலம் பழகி தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் 3 சவரன் தங்க நகை மற்றும் 90 ஆயிரம் ரூபாய் பணம் பறிக்கப்பட்ட சம்பவத்தில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள இளைஞரை தேடி வருகின்றனர்.

கோவையை அடுத்த பொள்ளாச்சியை சேர்ந்த 25 வயது பெண் கடந்த ஆறு மாதங்களாக பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண்கள் விடுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார்.

ADVERTISEMENT

இவருக்கு சில நாட்களுக்கு முன் Bumple App மற்றும் Snapchat மூலம் ராமநாதபுரத்தை சேர்ந்த தருண் (28) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நவம்பர் 2 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தருண், இளம் பெண்ணை நேரில் சந்தித்து பேச அழைத்துள்ளார்.

மாலை 7 மணியளவில் பெண் தங்கியிருந்த விடுதியிலிருந்து தனது காரில் அழைத்து சென்ற தருண் க.க. சாவடி தனியார் கல்லூரி அருகே வாகனத்தை நிறுத்தி, அங்கு மற்றொரு நபரை வரவழைத்துள்ளார். இருவரும் சேர்ந்து அந்த பெண்னை மிரட்டி அவர் அணிந்து இருந்த 3 சவரன் நகைகளையும் , யூபிஐ மூலம் 90 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்துள்ளனர்.
பின்னர் மீண்டும் இளம் பெண்ணை கோவை அழைத்து வந்துள்ளனர். ஆனால், இரவு நேரத்தில் ஹாஸ்டலில் அனுமதிக்க மாட்டார்கள் என அந்த இளம் பெண் கூறியதால் தருண், அவரது மொபைல் மூலம் நட்சத்திர ஹோட்டலில் அறையை பதிவு செய்து கொடுத்து அனுப்பியுள்ளார்.

ADVERTISEMENT

அறைக்கு சென்ற இளம் பெண் இது குறித்து தனது வீட்டில் தெரிவித்த நிலையில், மறுநாள் காலை தனது உறவினர்களுடன் பந்தய சாலை காவல் நிலையத்தில் தருண் என்ற இளைஞர் மீது புகார் அளித்தார். கோவை பந்தய சாலை போலீசார் இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதையடுத்து பந்தய சாலை போலீசார் தருணை கைது செய்துள்ளனர். விசாரணையில் தருண் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியின் மகன் என்பது தெரிய வந்துள்ளது. கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட தருண் , ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

ADVERTISEMENT

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதே நாளில் இந்த சம்பவமும் நடத்த நிலையில், ஒரு வார காலத்திற்கு பின்னர் தருணை கோவை பந்தயசாலை போலீசார் கைது செய்து சட்டநடவடிக்கை எடுத்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share