டெல்லியில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்திருக்கும் நிலையில் தமிழகத்தில் மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில், செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் 1 அருகே இன்று (நவம்பர் 10) மாலை சுமார் 6.50 மணியளவில் ஒரு காரில் சக்திவாய்ந்த குண்டு வெடித்து சிதறியுள்ளது.
இந்த சம்பவத்தில் 22 பேர் காயமடைந்ததாகவும், 8 பேர் உயிரிழந்திருப்பதாகவும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் 5 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
இந்தசூழலில் சம்பவம் நடந்த இடத்திற்கு டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்சா, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் குழு உடனடியாக விரைந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மும்பை, பெங்களூரு, கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் சோதனை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அனைத்து காவல்நிலையங்களையும் அலர்ட் செய்துள்ளார். இந்தசூழலில் ஒவ்வொரு மாவட்ட எஸ்.பி.யும் டிஎஸ்பி., இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சோதனை தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர். அனைத்து அதிகாரிகளும் சோதனை பணியில் ஈடுபடவும், விடிய விடிய சோதனையில் ஈடுபடவும் காவல்துறை தலைமை அறிவுறுத்தியிருக்கிறது.
அந்த வகையில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், சென்னை, மதுரை, தூத்துக்குடி, கோவை விமான நிலையங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
