பெங்களூரைச் சேர்ந்த 57 வயது பெண் ஒருவர் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக டிஜிட்டல் கைது மோசடியில் சிக்கி சுமார் ரூ. 32 கோடி இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
AI உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பம் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி வருகிறது. தொழில் நுட்பத்தின் வளர்ச்சி மக்களின் நேரத்தை பெருமளவு மிச்சப்படுத்துகிறது. கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து டிஜிட்டல் பண பரிவர்த்தனை நாட்டில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது அவரச உலகில் ஓடும் மனிதர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.
அதே சமயம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பல்வேறு மோசடி செய்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதில் தற்போது காவல்துறைக்கு பெரும் தலைவலியாக மாறி இருப்பது டிஜிட்டல் கைது பிரச்சனை. குறிப்பாக வயதானவர்கள், பெண்கள், தொழிலதிபர்களைக் குறி வைத்து இந்த டிஜிட்டல் கைது மோசடிகள் அரங்கேற்றப்படுகிறது.
அந்த வகையில் பெங்களூரைச் சேர்ந்த 57 வயது பெண் ஒருவரை ஆறு மாத காலமாக டிஜிட்டல் கைது செய்துள்ளதாக கூறி மோசடியாளர்கள் ஏமாற்றி உள்ளனர். இதை உண்மை என்று அந்த பெண் நம்பியதல் 6 மாதத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக அந்த பெண்ணை மிரட்டி உள்ளனர்.
அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட மோசடியாளர்கள் தங்களை சிபிஐ அதிகாரிகள் என்று அடையாளப்படுத்தி உள்ளனர். தொடர்ச்சியாக வீடியோ கண்காணிப்பில் வைத்துள்ளனர். மேலும் போலீசாரை தொடர்பு கொள்ள கூடாது என்றும் கடுமையாக மிரட்டி உள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் தனது மகளுக்கு திருமணம் நடக்க இருந்ததால் இந்த பிரச்சனையால் குடும்பத்தின் கௌவரத்திற்கு களங்கம் ஏற்படும் என்று அஞ்சி உள்ளார். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட மோசடியாளர்கள். ஒன்றல்ல.. இரண்டல்ல..187 வங்கி பண பரிமாற்றங்களை செய்ய வற்புறுத்தி உள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து ரூ.31.83 கோடி வரை பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் கடும் மன அழுத்தத்தில் இருந்த பெண் இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.
மேலும் பாதிக்கப்ட்ட பெண்ணிற்கு மனஅழுத்தம் தொடர்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
