மதுரை அருகே நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் சிக்கி 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா எஸ். மேலபட்டியில் பொங்கல் திருவிழா சில தினங்களுக்கு முன் தொடங்கியது. மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா நடுக்கோட்டையைச் சேர்ந்த 7 வயது சிறுவன் சண்முக வேல் தனது தாய் கவிதாவுடன், மேலப்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு கோயில் திருவிழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தான்.
கடந்த வியாழனன்று மாலையில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சிறிது நேரத்தில் காணாமல் போனதை தொடர்ந்து பெற்றோர் சிறுவனை தேடினர்.
ஆனால் அவன் அருகில் இருக்கும் உறவினரின் வீட்டிற்கு சென்றிருக்கலாம் என்று எண்ணியதால் சிறுவனின் தாய் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் சிறுவன் இரவில் வீடு திரும்பாததை தொடர்ந்து சிறுவனை தேடிய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுவனை 14ம் தேதி முழுவதும் தேடியும் பலன் கிடைக்கவில்லை.
விருதுநகரைச் சேர்ந்த ஒரு மருத்துவர், கோயில் திருவிழாவிற்கு வந்திருந்தார். அவர் வீடு திரும்புவதற்காக தனது காரை எடுத்துச் செல்ல முயன்றபோது, காருக்குள் சிறுவன் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறிய சிறுவன் கதவைத் திறக்கத் தெரியாமல் உள்ளே சிக்கிக்கொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தடயவியல் நிபுணர்கள், கண்ணாடியை தட்டி, அப்பகுதியில் இருந்தவர்களின் கவனத்தை ஈர்க்க சிறுவன் சிரமப்பட்டதற்கான அறிகுறிகளைக் கண்டறிந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பேரையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
