கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் ரூ. 500 கோடி முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 12) கையெழுத்திட்டுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 27ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு தொடர்ந்து பல்வேறு நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் துவங்கவும், விரிவாக்கம் செய்யவும் அழைப்பு விடுத்து வருகிறார்.
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சிகாகோவில் கேட்டர்பில்லர் நிறுவன உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.
அப்போது, திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அந்நிறுவனத்தின் தற்போதுள்ள கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களை ரூ. 500 கோடி முதலீட்டில் விரிவுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”கேட்டர்பில்லர் மற்றும் தமிழ்நாடு இடையே நீண்டகால தொடர்பு புதிய முதலீடுகளால் மேலும் வலுப்பெற்றுள்ளது. கேட்டர்பில்லரின் கட்டுமான உபகரண உற்பத்தி வசதிகளை விரிவுபடுத்துவதற்காக நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டோம்.
திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மேலும் முதலீடு செய்து, எங்கள் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தியதற்காக கேட்டர்பில்லர் நிறுவனத்திற்கு நன்றி!” என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து வெளியேறிய போர்டு நிறுவனத்துடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
2024 செஸ் ஒலிம்பியாட் இன்று துவக்கம்: மீண்டும் சாதிக்குமா இந்தியா?