45th Chess Olympiad: ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை செஸ் ஒலிம்பியாட் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, 2022-ஆம் ஆண்டுக்கான 44வது செஸ் ஒலிம்பியாட் சென்னையில் நடைபெற்ற நிலையில், தற்போது 45வது செஸ் ஒலிம்பியாட் ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட்டில் நடைபெறவுள்ளது.
இந்த 45வது செஸ் ஒலிம்பியாட் இன்று (செப்டம்பர் 10) துவங்கி செப்டம்பர் 23 வரை நடைபெறவுள்ளது.
மொத்தம் 11 சுற்றுகளாக போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், புடாபெஸ்ட்டின் 45வது செஸ் ஒலிம்பியாட்டில் ஓபன் பிரிவில் 193 அணிகளும், மகளிர் பிரிவில் 181 அணிகளும் போட்டியிடுகின்றன.
இதில், இந்தியா சார்பில், ஓபன் பிரிவில் அர்ஜுன் எரிகைசி, டி குகேஷ், பிரக்ஞானந்தா, விதித் குஜ்ராத்தி, பென்டலா ஹரிகிருஷ்ணா ஆகியோர் அடங்கிய அணி பங்கேற்கிறது.
அதேபோல, மகளிர் பிரிவில், ஹரிகா துரோனவல்லி, வைஷாலி, திவ்யா தேஷ்முக், வன்டிகா அகர்வால், தானியா சச்தேவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி பங்கேற்கிறது.
இந்த செஸ் ஒலிம்பியாட்டில், ஒவ்வொரு அணியும் 11 சுற்றுகளில் 11 அணிகளை எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொரு சுற்றிலும் போர்டு 1, 2, 3, 4 என 4 போட்டிகள் நடக்கும். அந்த 4 போட்டிகளில் இரு அணிகள் பெரும் புள்ளிகளை வைத்து, அந்த சுற்றின் வெற்றியாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும்.
11 சுற்றுகள் முடிவில், புள்ளிப் பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்துள்ள அணிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்படும். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு போர்டிலும் சிறப்பாக செயல்பட்டு அதிக புள்ளிகள் பெரும் போட்டியாளர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்படும்.
மேலும், இறுதியில், ஓபன் மற்றும் மகளிர் என இரண்டு பிரிவுகளும் சேர்த்து சிறப்பாக செயல்பட்ட அணிகளுக்கும் பதக்கங்கள் வழங்கப்படும்.
இந்நிலையில், கடந்த முறை சென்னையில் நடைபெற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை குவித்ததால், இம்முறை அவர்கள் மீதான எதிர்பார்ப்பு மிகுதியாகவே உள்ளது.
44வது செஸ் ஒலிம்பியாட்டில், போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் 2 பிரிவுகளிலும் 2 அணிகளை கொண்டு இந்தியா களமிறங்கியது.
அந்த தொடரின் துவக்கத்தில் இருந்தே இந்திய வீரர், வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்திவந்தனர்.
இப்படியான சூழலில், ஓபன் பிரிவில் குகேஷ், பிரக்ஞானந்தா உள்ளிட்டோர் அடங்கிய இந்தியா-2 அணி 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றது. அர்ஜுன் எரிகைசி, ஹரிகிருஷ்ணா உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி 4வது இடம் பிடித்து நூலிழையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.
ஓபன் பிரிவில் தனிநபர்களுக்கான தரவரிசையில், போர்டு 1-இல் முதலிடம் பிடித்து குகேஷ் தங்கம் வென்றார். அதேபோல, போர்டு 2-இல் நிஹல் சரின் தங்கம் வென்றார். போர்டு 3-இல் அர்ஜுன் எரிகைசி வெள்ளியும், பிரக்ஞானந்தா வெண்கலமும் வென்றனர்.
மகளிர் பிரிவில், வைஷாலி, ஹரிகா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றது. திவ்யா தேஷ்முக், வன்டிகா அகர்வால் உள்ளிட்டோர் அடங்கிய அணி 8வது இடம் பிடித்தது.
தனிநபர் பிரிவில், வைஷாலி, திவ்யா தேஷ்முக், தானியா சச்தேவ் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
அதுமட்டுமின்றி, மொத்தமாக சிறப்பாக செயல்பட்ட அணிகள் பிரிவில், இந்தியாவின் ஒரு அணி முதல் இடத்தையும், இன்னொரு அணி 3வது இடத்தையும் பிடித்து, தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றது.
இந்நிலையில், 45வது செஸ் ஒலிம்பியாட்டிலும் இந்திய வீரர், வீராங்கனைகள் இதேபோல பதக்கங்களை குவிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஒவ்வொரு நாளும், இந்திய நேரப்படி போட்டிகள் மாலை 6:30 மணிக்கு துவங்கவுள்ள நிலையில், அந்த போட்டிகள் ‘செஸ்பேஸ் இந்தியா’ யூடியூப் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பட உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
புதிய வசதிகளுடன் அறிமுகமான ஐபோன் 16, 16 பிளஸ்: விலை என்ன?
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தீவிரம்!