‘It’s Glow Time’ என்ற நிகழ்ச்சி மூலம், ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 16 தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
புதிய கேமரா அமைப்புடன் அறிமுகமாகியுள்ள ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் ஸ்மார்ட்போன்கள், புதிய கேமரா கன்ட்ரோல் பட்டனுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் விசுவல் இன்டெலிஜென்ஸ், ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் உள்ளிட்ட அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.
ஐபோன் 16, 16 பிளஸ் விலை என்ன?
ஐபோன் 16 ரூ.79,900 என்ற ஆரம்ப விலையில் அறிமுகமாகியுள்ளது. 128GB வகை ரூ.79,900 என்ற விலைக்கும், 256GB வகை ரூ.89,900 என்ற விலைக்கும், ரூ.512GB வகை ரூ.1,09,900 என்ற விலைக்கும் விற்பனையாகவுள்ளது.
128GB கொண்ட ஐபோன் 16 பிளஸ் வகை ரூ.89,900 என்ற விலைக்கும், 256GB வகை ரூ.99,900 என்ற விலைக்கும், 512GB வகை ரூ.1,19,900 என்ற விலைக்கும் விற்பனைக்கு வரவுள்ளது.
இந்த ஐபோன்கள் அல்ட்ராமெரைன், டீல், பிங்க், பிளாக், வைட் என 5 வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.
இந்த ஐபோன்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 13 அன்று மாலை 5:30 மணிக்கு துவங்கவுள்ளது. மேலும், விற்பனை செப்டம்பர் 20 அன்று துவங்கவுள்ளது.
இந்த ஐபோன்களை ஆக்சிஸ் அல்லது ஐசிஐசிஐ கார்டுகளை பயன்படுத்தி பெறும்போது, ரூ.5,000 உடனடி தள்ளுபடி வழங்கப்படும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐபோன் 16, 16 பிளஸ் சிறப்பம்சங்கள் என்ன?
ஐபோன் 16 6.1-இன்ச் சூப்பர் ரெடினா XDR திரையை கொண்டுள்ளது. மறுபுறத்தில், ஐபோன் 16 பிளஸ் 6.7-இன்ச் திரையை கொண்டுள்ளது. இந்த ஐபோன்கள் 1 நிட்ஸ் முதல் 2,000 நிட்ஸ் வரை ஒளிரும் திறனை கொண்டுள்ளது.
இந்த ஐபோன்களில் புதிய தலைமுறை ஏ18 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த ஐபோன்கள் iOS18 இயக்க முறைமையை (OS) அடிப்படையாக கொண்டு இயங்குகிறது.
ஐபோன் 16, 16 பிளஸ் ஐபோன்களில் 2 பின்புற கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன – 48MP பியூசின் காமெரா, 12MP அல்ட்ராவைட் கேமரா. 48MP பியூசின் காமெரா முதன்மை கேமராவாக மட்டுமின்றி, 2x டெலிபோட்டோ கேமராவாகவும் செயல்படும் திறன் கொண்டது.
ட்ரூ டோன் பிளாஷ், ஸ்மார்ட் HDR 5, மேக்ரோ போட்டோகிராபி, ஆட்டோ இமேஜ் ஸ்டேபிளைசேஷன் உள்ளிட்ட அம்சங்களையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், 60fps வரை 4k தரதத்தில் வீடியோ எடுக்கும் திறனையும் இந்த ஐபோன்கள் கொண்டுள்ளன.
மேலும், இந்த ஐபோன்களில் செல்ஃபிகளுக்காக முன்புறத்தில் 12MP கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
2 நானோ சிம் வசதியுடன், டைப்-சி சார்ஜிங், 5ஜி, வை-பை 7, ப்ளூடூத் 5.7 உள்ளிட்ட அம்சங்களும் இந்த ஐபோன்களில் இடம்பெற்றுள்ளன.
ஐபோன் 16 22 மணி நேர வீடியோ பிளேபேக், ஐபோன் 16 பிளஸ் 27 மணி நேர வீடியோ பிளேபேக் திறனை கொண்டுள்ளது. மேலும், 30 நிமிடங்களில் 50% சார்ஜ் ஏறும் பாஸ்ட் சார்ஜிங் திறனை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள், 25W வரை வயர்லெஸ் சார்ஜிங் திறனையும் கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
மின் மீட்டர்களை எந்தெந்த நிறுவனங்களில் வாங்கலாம்? மின்வாரியம் அறிவிப்பு!
பியூட்டி டிப்ஸ்: முக அழகைக் கெடுக்கும் மங்கு… இனி மருக வேண்டாம்!