ராஜன் குறை
சனிக்கிழமை எல்லா தொலைகாட்சி சேனல்களிலும் நடிகர் விஜயின் திருச்சி விஜயம்தான் நேரலை ஒளிபரப்பு. அங்கே கூடிய கட்டுக்கடங்காத கூட்ட த்தைக் கண்டு எல்லோர் மனதிலும் ஒரு திகைப்பு. இதன் பொருள் என்ன என்ற சிந்தனை. சில பண்டிதர்கள் வழக்கம்போல அவரைப் புறக்கணிக்கமுடியாது என்று கூறத்துவங்க, கூட்ட த்தினரின் முதிர்ச்சியற்ற நடவடிக்கைகள் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளன. எப்படி புரிந்துகொள்வது இந்த கூட்டத்தை என்று விவாதங்கள் நடக்கின்றன. “வீடு வரை உறவு” என்ற புகழ்பெற்ற பாடலில் “கூடி வரும் கூட்டம் கொள்ளிவரை வருமா?” என்று ஒரு வரி வரும். அது போல “பார்க்க வரும் கூட்டம், வாக்களிக்க வருமா?” என்பது முக்கியக் கேள்வியாக ஒலிக்கிறது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் துவங்கி கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இரண்டு மாநில மாநாடுகள் போட்டுள்ளார். ஒரு சில பொது நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். பரந்தூர் போராட்டம், காவல்துறையால் கொலையுண்ட அஜித்குமார் இல்லம் என ஓரிரு இடங்களுக்குச் சென்றுள்ளார். கட்சி துவங்கிய பிறகு நடந்த இடைத் தேர்தல்களிலும், மிக முக்கியமான நாடாளுமன்றத் தேர்தலிலும் பங்கெடுக்கவில்லை என்பதால் அவரை அரசியல்வாதி என்று முழுமையாகக் கருத முடியவில்லை. நேரடியாக அடுத்த ஆண்டு சட்ட மன்றத் தேர்தலை சந்திக்க முடிவெடுத்துள்ளார்; அவர்தான் முதல்வர் வேட்பாளர். அதனை ஏற்றுக்கொண்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்க முன்வந்தால் அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் அடுத்த மூன்று மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் பிரசாரப் பயணம் செய்யப் போவதாக இப்போது அறிவித்துள்ளார். வாரம்தோறும் சனிக்கிழமை அன்று பிரசாரம் செய்வதாகவும், ஒவ்வொரு சனிக்கிழமையும் மூன்று மாவட்டங்களில் பிரசாரம் செய்வார் என்றும் மிக வித்தியாசமான ஒரு அரசியல் நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பிரசாரப் பயணத்தின் துவக்கமாக கடந்த சனிக்கிழமை திருச்சி நகரில் மரக்கடை பகுதியில் பிரசாரத்தைத் துவக்கியுள்ளார். பிரச்சாரம் என்பது கேரவன் என்ற வாகனத்தில் சென்று அதன் உள்ளிருந்தே கூரைக்கு மேலேறி நின்று கேரவனைச் சுற்றிக் கீழே கூடியுள்ளவர்களுடன் பேசுவதுதான். மக்களை நெருங்குவது, அவர்களிடையே செல்வது சாத்தியமேயில்லை. அவரை ரசிகர்களிடமிருந்து சேதாரமில்லாமல் காப்பாற்றுவதே கட்சியின் தலையாய பிரச்சினை. முதல் பிரசாரக் கூட்டத்தில் மாநாடுகளில் பேசியது போலவே பத்து, பதினைந்து நிமிடங்கள் பேசியுள்ளார். திருச்சியில் மதியம் மூன்று மணிக்குப் பேசிய பிறகு பின் மாலையில் அரியலூரிலும் அதே போல பேசியுள்ளார்.
திருச்சியில் விமான நிலையத்திலேயே தடுப்புகளை உடைத்துக்கொண்டு அவர் ரசிகர்கள் வெள்ளமாகப் பாய்ந்தனர். அவரது வாகனம் விரைந்து செல்ல முடியாமல் அதனைச் சூழ்ந்து கொண்டனர். விமான நிலையத்திலிருந்து அவர் பேச அனுமதி அளிக்கப்பட்டிருந்த மார்க்கெட் பகுதிக்கு வந்து சேர ஆறு மணி நேரம் ஆனது. அவ்வப்போது வாகனத்தின் கண்ணாடி ஜன்னலை நகர்த்தி கூட்ட த்தினரைப் பார்த்து கையசைப்பது, தலையசைப்பது, கட்டை விரலை உயர்த்திக்காட்டுவது என்பன போன்ற சைகைகளை செய்துள்ளார். அவரைக் காண வழி நெடுகிலும் ரசிகர்கள் வீடுகள், மரங்கள் என எதன் மீதெல்லாமோ ஏறி நின்றுள்ளனர். ரசிகர்களை கட்டுப்படுத்துவது என்பது பெரும் சவாலாகவே தொடர்கிறது.
அவர்கள் அவர் பேசும்போதும் பெரும் ஆரவாரம் செய்கின்றனர். பலரும் அவரைப் பார்ப்பதையே முக்கியமாகக் கருதுகின்றனர் என்பது தெளிவு. அவர் பேசுவதைக் கேட்பதில் அதிக நாட்டமில்லை என்றுதான் தெரிகிறது. அப்படி கருத்தாகக் கேட்கும்படி அவர் எதுவும் பேசுவதில்லை என்பதும் உண்மைதான். தி.மு.க அரசை ராகம்போட்டு சில வரிகள் விமர்சிக்கிறார். பாஜக அரசையும் சில வரிகள் விமர்சிக்கிறார். அந்த ரத்தினச் சுருக்கமான விமர்சனங்கள் எல்லாமே பிற அரசியல் கட்சிகள், தலைவர்கள் கூறுகின்ற விமர்சனங்கள்தான் என்பதால் அவற்றிற்கு பெரிய முக்கியத்துவம் இல்லை. நான் தி.மு.க-வை எதிர்க்கிறேன். நான் பாஜக-வையும் எதிர்க்கிறேன். எனக்கு வாக்களித்து முதல்வராக்குங்கள் என்பதுதான் செய்தி என்பதால் அதில் ஊன்றிக் கேட்க வேண்டிய கருத்து எதுவும் இல்லை எனலாம்.
ரசிகர்களுக்கு, பொதுமக்களுக்கு பார்ப்பதுதான் முக்கியம்; அதனால் காத்திருந்து பார்க்கிறார்கள். மரத்தின் மீதேறி பார்க்கிறார்கள். முண்டியடித்துப் பார்க்கிறார்கள். கூட்டம் கூட்டமாக வந்து பார்க்கிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதனை “அலப்பறை” அதாவது கொண்டாட்டம் என்று கூறுகிறார்கள். கல்லூரி வயதைக் கடந்த இளைஞர்களும் இந்த கொண்டாட்டத்தில் பங்கெடுக்கிறார்கள். திருமணம் ஆனவர்கள் மனைவி குழந்தையுடன் வருகிறார்கள். பிரசார பயணத்திற்கு பெண்களை அழைத்து வர மெனக்கெட்டுள்ளார்கள். பெண் ரசிகைகளும் அவர்களாகவே வருவார்களாக இருக்கலாம். அனைவரும் பார்ப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

சினிமா மோகம் என்று கூறலாமா?
விஜய் ஒரு நடிகர், நட்சத்திர கதாநாயக நடிகர் என்பதால்தான் பார்க்க வருகிறார்கள் என்பதில் ஐயமிருக்க முடியாது. ஏனெனில் அவருடைய கடந்த முப்பதாண்டுகால அடையாளம் அதுதான். அவர் அரசியலில் ஈடுபட்டதில்லை என்பதுடன், அது குறித்து எதுவும் பேசியது கூட இல்லை. அவர் பிரபலமடைந்த பிறகு கடந்த முப்பதாண்டுகளில் தமிழ்நாட்டில் பல முக்கிய அரசியல் நிகழ்வுகள் நடந்துள்ளன. போராட்டங்கள் நடந்துள்ளன. அதில் எதிலும் அவர் பங்கெடுத்ததோ, கருத்துக் கூறியதோ இல்லை. சுனாமி வந்தபோது கூட வட இந்திய நடிகர் விவேக் ஓபராய் தமிழ்நாட்டிற்கு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டார்; உதவி செய்தார். ஆனால் விஜய் நேரடியாக அவ்விதமாக எதுவும் செய்ததாகத் தகவல் கிடையாது. இலங்கைத் தமிழர் படுகொலை தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அப்போதும் விஜய் வாய் திறக்கவில்லை. ஸ்டைர்லைட் போராட்டம், மீதேன் போராட்டம், காவிரி நதி நீருக்கான போராட்டம், ஆணவப் படுகொலைகள், நீட் எதிர்ப்பு, குடியுரிமைச் சட்டத் திருத்த எதிர்ப்பு என எதிலும் விஜய் பங்கெடுத்ததில்லை. குரல் கொடுத்ததில்லை. அதனால் அவரை ஒரு அரசியல் தலைவராகக் கருதி மக்கள் பார்க்கக் கூடினார்கள் என்று யாராலும் கூற முடியாது.
ஆனால் அவர் அரசியல் பிரசாரத்திற்கு வருகிறார் என்று தெரிந்துதான் கூடினார்கள் என்பதையும் அங்கீகரிக்க வேண்டும். அதற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. அது என்னவென்றால் திரையில் பல சாகசங்களை செய்து, எதிரிகளை துவம்சம் செய்யும் காதாநாயக நடிகர், நிஜ வாழ்க்கையிலும் தேர்தல் களத்திற்கு வருகிறார் என்னும்போது அதில் சுவாரசியம் கூடுகிறது. அதில் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். விஜய் இன்னொருவர் தலைமையை ஏற்று ஒரு கட்சியில் சேர்ந்தால் இந்த அளவு கூட்டம் வராது. அவர் நேரடியாக முதல்வராக முயற்சிக்கிறார் என்னும்போதுதான் அவருடைய கதாநாயக பிம்பம், அதன் இறையாண்மைத் தன்மையை அரசியலுக்கு மாற்ற முடியும். அதனால் அவருடைய பிம்பத்தின் கவர்ச்சி கூடுகிறது. அதனால் அவரைப் பார்க்கும் ஆர்வம் அதிகரிக்கிறது. திரைப்படக் கதையின் நாயகன் வரலாற்று நாயகனாக முயல்வதில் மிகுந்த சுவாரசியம் இருக்கிறது. நிழல் நிஜமாகும் ரசவாதம் நடந்தால் அது பெரிய கேளிக்கைதானே? பொதுவாகவே மீட்பர்களையும், அவதாரங்களையும் நம்பும் வெகுஜன மன நிலை இதில் ஈடுபாடு கொள்ளத்தான் செய்யும்.
இருபதாண்டுகளுக்கு முன்னால் இதே ஆர்வத்தை விஜய்காந்த்திற்கு கூடிய கூட்டத்திலும் பார்க்க முடிந்தது; அவர் முதல்வர் வேட்பாளராக கடவுளுடனும், மக்களுடனும் மட்டும்தான் கூட்டணி என்று கூறியதால் அந்த கூட்டம் ஆர்வம் காட்டியது.விஜய்காந்த் கட்சிப் பெயரை அறிவித்த மதுரை மாநாட்டில் மானுடவியல் ஆய்வாளனாக வி.ஐ.பி பாஸ் பெற்று முழுமையாகப் பங்கேற்றிருந்தேன் என்பதால் அந்த கூட்டத்தின் வெறித்தனமான எழுச்சியை நேரடி சாட்சியாகப் பார்த்தேன். நூற்றுக்கணக்கானவர்களுடன் பேசினேன். பின்னர் சட்ட மன்றத்திற்கான 2006-ஆம் ஆண்டு தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் அவர் மட்டும் வெற்றி பெற்றாலும், எட்டு சதவீத வாக்குகளை வாங்கிக் காட்டியதால் கட்சிக்கு படுதோல்வியிலும் சிறிது மரியாதை கிடைத்தது. அவர் 2011-இல் ஜெயலலிதா தலைமையில் கூட்டணியில் இணைந்த பிறகு அந்த ஆதரவும் குறையத் தொடங்கியது. மீண்டும் அவர் 2016 தேர்தலில் முதல்வர் வேட்பாளராக மக்கள் நல கூட்டணி சார்பில் நின்றபோது, அவர் போட்டியிட்ட தொகுதியிலேயே தோல்வியைத் தழுவினார்.

கூட்டம் என்பது என்ன?
பொதுவாக இந்திய மாநிலங்களும், குறிப்பாக தமிழ்நாடும் அடர்த்தியாக மக்கள் வாழும் நிலப்பகுதிகள். உலக அளவில் ஒரு சதுர கிலோமீட்டரில் வாழும் மக்கள் சராசரி எண்ணிக்கை 63 பேர். தமிழ்நாட்டில் ஒரு சதுர கிலோமீட்டரில் வாழ்பவர்கள் சராசரி எண்ணிக்கை 555 பேர். உலகின் மிக அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதி; வாக்காளர்களே ஆறரை கோடி பேர் இருக்கிறார்கள். அதனால் சுலபமாக இங்கே பெருந்திரள் கூட்டம் கூடிவிடும். ஒரு மனிதர் வசதியாக நிற்பதற்கு நாலு சதுர அடி தேவையென்று வைத்துக்கொள்வோம். ஒரு 300 சதுர அடி கொண்ட ஹாலில் 50 பேர் கூடினாலே அது நிரம்பி வழியும் தோற்றம் வந்துவிடும். இப்படியாக, எல்லா பொது இடங்களிலும் நிரம்பி வழியும் கூட்டத்தைக் காணலாம். ஒரு ஏக்கர் பரப்பில் பத்தாயிரம் பேர் கூடினால் அது நெருக்கியடிக்கும் கூட்டமாகத் தெரியும். பார்க்க பிரமிப்பாகத்தான் இருக்கும்.
முன்னெல்லாம் அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு மக்கள் தாமாகத் திரள்வார்கள்; இப்போதெல்லாம் அழைத்துவர வேண்டியுள்ளது என்று சொல்கிறார்கள். தொலைக்காட்சிப் பெட்டிகள் மட்டுமல்லாமல், எல்லோர் கையிலும் செல்பேசிகள் வந்தபிறகு அவர்கள் தலைவர்கள் பேசுவதையெல்லாம் அவரவர் வீட்டிலேயே பார்க்கிறார்கள் என்னும்போது பொதுக் கூட்டங்களுக்கு முன்னம் இருந்த ஈர்ப்பு குறைவதில் வியப்பில்லை. ஆனால் இப்போதும் தெருமுனைக் கூட்டங்கள் போட்டால் சில நூறு பேராவது வந்து கேட்கத்தான் செய்கிறார்கள். அது ஒரு நிகழ்த்துக் கலை வடிவம் என்பதால் அதற்கு மதிப்பு இருக்கத்தான் செய்கிறது. நல்ல பேச்சாளர்கள் இருந்தால் கூட்டத்தை நிச்சயம் ஈர்க்க முடியும் எனலாம்.
இந்த சூழலில் புதிதாக ஒரு நட்சத்திர நடிகர் வீதிக்கு வந்து பேசுகிறார் என்றால் நிச்சயம் ஈர்ப்பு ஏற்படும். ஏனெனில் திரையில் பார்த்தவர் நேரில் வருகிறார் என்ற சுவாரசியம்தான் அது. அப்படி ஒரு கதாநாயக நடிகர் வரலாற்று நாயகர் ஆகலாம் என மக்கள் நினைக்கிறார்கள் என்றால் அவர்கள் ஏன் அவர் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற கேள்வி எழும். அதனைச் சற்றே கவனமாகச் சிந்திக்க வேண்டும்.

வாக்களிக்கும் தருணம்
தேர்தலில் ஒருவர் வாக்களிக்கும் தருணம் என்பது பலவிதமான காரணிகளால் தீர்மானமாகிறது எனலாம். ஒவ்வொரு கட்சியிலும் தொகுதிக்கு ஒரு வேட்பாளர் இருப்பார். அவர் எப்படி பிரசாரம் செய்கிறார், அவரைக் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள், அவரது செல்வாக்கு என்ன என்பது ஒரு அம்சம். அந்த தொகுதியில், அதன் வார்டுகளில், வீதிகளில் பணியாற்றும் கட்சிக்காரர்கள் யார், அவர்களுக்கு வாக்காளர்களுடன் உள்ள உறவு என்ன, செல்வாக்கு என்ன என்பது ஒரு அம்சம். பிறகு அந்த கட்சி தலைவருக்கு மக்களிடையே உள்ள செல்வாக்கு என்ன, அவரது பிம்பம் என்ன என்பது ஒரு அம்சம். அதற்கு மேல் அந்த தேர்தலில் முக்கியத்துவம் பெரும் பிரச்சினைகள் என்ன, ஆட்சியின் மீதான மக்கள் கருத்து என்ன, கட்சிகள் தரும் வாக்குறுதிகள் என்ன என பல்வேறு அம்சங்களும் முக்கியத்துவம் பெரும். இதையெல்லாம் மக்கள் மனதில் முன்னிறுத்த கட்சிகள் தல மட்டத்தில் செய்யும் பிரசாரத்திற்கும் முக்கிய பங்கு இருக்கும். வாய்மொழியாக, வீட்டுக்குவீடு ஓசையின்றி அலைகள் உருவாகிப் பரவும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எழுபத்தைந்து ஆண்டுகளாக தி.மு.க, அதிலிருந்து ஐம்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் பிரிந்த அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் ஆணிவேர், சல்லிவேராக ஊடுறுவி இருக்கின்றன என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மை. பல இடங்களில் மூன்று நான் கு தலைமுறையாக செயல்படும் கட்சிக்காரர்கள் இருப்பார்கள். இவர்களைத் தவிர காங்கிரஸ் கட்சிக் குடும்பங்களும் ஆங்காங்கே பலதலைமுறையாக இருப்பார்கள். ஏனெனில் அவர்கள்தான் முதலில் தோன்றிய அரசியல் கட்சி; காந்தி, நேரு என்று காலனீய எதிர்ப்பு தேசியத்தை முன்னெடுத்த கட்சி. தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் போன்றவற்றில் இடதுசாரி இயக்கத்தவர்கள் நீண்ட பாரம்பரியத்துடன் இருப்பார்கள். கடந்த முப்பதாண்டுகளாக தலித் இயக்கங்கள் கட்சிகள், பிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் கட்சிகள் என சமூகப் பரப்பில் பரவலாக இடம் பிடித்துள்ளன. நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஜாதிச் சங்கங்களும் கட்சிகளை ஆதரிப்பதும், இயங்குவதுமாக உள்ளன.
இத்தகைய அடர்த்தியாக அரசியல்மயமான சமூகப் பரப்பில் புதிதாக ஒரு கட்சியின் உறுப்பினர்கள் கால்பதிப்பதும், பிற அமைப்பினரை பின்னுக்குத் தள்ளி மக்களிடையே செல்வாக்கு பெறுவதும் மிகப்பெரிய சவாலாகும். அந்த சவாலை எதிர்கொள்ள முடியாமல் களத்திலிருந்து விலகிய கதாநாயக நடிகர்கள் பட்டியல் நீண்டது; அவர்கள் மட்டுமல்ல, இந்தியாவில் பல பகுதிகளில் புகுந்த பாஜக-வால் என்ன செய்தும் நுழைய முடியாத பரப்பாகவும் தமிழ்ச் சமூகம் விளங்குகிறது. இப்படிப்பட்ட ஒரு சமூகப் பரப்பில் ஆழமாக வேர் பிடிக்காத ஒரு கட்சி என்னதான் கவர்ச்சிகரமான தலைமை இருந்தாலும் தேர்தல் களத்தில் வேலை செய்வது கடினம்.
கட்சியை ஒருங்கிணைப்பது எப்படி?
கவர்ச்சிகர தலைமையை மட்டும் ஒற்றை முதலீடாகக் கொண்ட கட்சிகளுக்கு, மற்றொரு பெரிய சிக்கல் ஏற்படும். அது என்னவென்றால் எல்லோருமே தலைவரின் ரசிகர்கள், பக்தர்கள் என்பதால் உள்ளூரில் யார் பேச்சை யார் கேட்பது என்பதில் கடும் உரசல் ஏற்படும். ஒவ்வொரு கிளையிலும் மோதல் வரும். போட்டி பொறாமைகள் கொளுந்துவிட்டு எரியும். அவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டுமென்றால் தல மட்ட த்தில் தலைமைப் பண்புள்ளவர்கள் பலர் தோன்றவேண்டும். அதைவிட முக்கியம் அவர்களிடம் அனைவரையும் பிணைக்கும் ஒரு சொல்லாடல், ஒரு அரசியல் இலட்சியம் இருக்க வேண்டும். இதைத்தான் பல சமயங்களில் கொள்கை என்று சொல்கிறார்கள். கொள்கை என்பது வெறும் பிம்பங்கள் அல்ல. அவற்றைக் குறித்து நிறைய பேசவும், அவற்றால் மனங்களை ஒருங்கிணைக்கவும் இயல வேண்டும். கட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நட த்தி உள்ளூர் தலைமைகளை உருவாக்கும் அளவு கட்சிக்கு கொள்கை வலு இருக்க வேண்டும்.
காந்தி, நேரு, அண்ணா, கலைஞர் ஆகியவர்களெல்லாம் எத்தனை ஆயிரம் பக்கங்களை எழுதியுள்ளார்கள், எவ்வளவு ஆயிரம் மணி நேரங்கள் பேசியுள்ளார்கள் என்பதை எண்ணிப் பார்த்தால்தான் தலைமை என்றால் என்னவென்று புரியும். அரசியல் என்பதை பெரும் மானுட தரிசனமாக தங்களுக்குள் கண்டவர்கள் அவர்கள் என்பதால்தான் இரவு பகல் பாராமல் அவர்களால் பேச முடிந்தது, செயல்பட முடிந்தது. பத்திரிகையாளர் சந்திப்பு என்றால் அவர்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம்தான். அவர்களிடம் பொங்கும் சிந்தனைகளை வெளிப்படுத்த எத்துனைக் கேள்விகள் கேட்டாலும் போதாது. அதுதான் உண்மையான தலைமையின் இலக்கணம்.
பகுத்தறிவுப் பகலவன் பெரியார் அதிகம் எழுதவில்லை. ஆனால் அவர் போல பட்டி தொட்டியெல்லாம் சென்று மக்கள் மனதில் சுயமரியாதைக் கனலை ஊட்டியவர் ஒருவர் இருக்க முடியாது. பெரியாருக்கு நான்கு மணி நேரம் தொடர்ந்து பேசுவதெல்லாம் சாதாரணம் என்று பதிவுசெய்துள்ளார்கள். எனெனில் அவரிடம் குடிகொண்டிருந்த இலட்சிய சமூகத்தின் உருவகம் அத்தகையது. அவர்களைப் போன்ற தலைவர்கள் உருவாக்கிய சொல்லாடல்கள்தான் கட்சிகளை ஒருங்கிணைக்கும் சிமெண்ட். அது இல்லாவிட்டால் செங்கல்களெல்லாம் ஒரே மழையில் உடைந்து சரிந்துவிடும்.
அத்தகைய கொள்கை உரமேறிய கட்சி தி.மு.க என்பதால்தான் அதனை எஃகுக் கோட்டை என்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாட்டு வரலாற்றின் இதயத்துடிப்பு தி.மு.க. எத்தனையோ சினிமாக் கவர்ச்சி அலைகளை சந்தித்த நெடிந்தோங்கிய கரும்பாறை அது. அந்த அலைகளின் ஊற்றுக்கண்ணே அதன் கொள்கைகள்தான் என்பதையும் மறக்கலாகாது.
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com