கோவை மாவட்டத்தில் உள்ள ஒன்னிப்பாளையம், எல்லை கருப்பராயன் கோயிலில் நவம்பர் 4ம் தேதி பவுர்ணமி பூஜை நடைபெற உள்ளது. இதில் 10,008 பெண்கள் கலந்து கொள்ளும் திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இந்த பூஜையில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இந்த திருவிளக்கு பூஜையில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இது உண்மைக்கு புறம்பானது என காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் வருகின்ற நான்காம் தேதி ஒன்னிப்பாளையம், எல்லை கருப்பராயன் கோவிலில் விளக்கு பூஜை நடைபெற உள்ளது அதனை ஒட்டி முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் அதன் காரணமாக சில வழிகாட்டு விதிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை தவறாக சித்தரித்து சிலர் திருவிளக்கு பூஜையில் பெண்களுக்கு தடை என்ற முற்றிலும் தவறான மற்றும் அமைதியை குலைக்கும் வகையில் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது உண்மைக்கு புறம்பானது.
இவ்வாறு தவறான செய்திகளை பரப்பும் நபர்கள் மீது கடுமையான சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
