நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில வழக்கறிஞர் அணிக்கான பயிற்சி பட்டறை சென்னையை அடுத்த பனையூர் கட்சி தலைமை அலுவலகத்தில் நவம்பர் 2-ந் தேதி நடைபெற்றது.
கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரத்துக்கு விஜய் வரவழைத்து ‘ஆறுதல் பெறுதல்’ நிகழ்ச்சியை நடத்தி இருந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் தவெக-வின் செயல்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக பனையூரில் தவெக மாநில வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வெறும் ஆலோசனைக் கூட்டமாக இல்லாமல் பயிற்சி பட்டறையாகவும் இந்த கூட்டம் நடத்தப்பட்டது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய தவெக நிர்வாகிகள், தவெக 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 10 மண்டலங்களுக்கும் 10 மாநில நிர்வாகிகள் பொறுப்பாளர்களாக இருப்பர்; இவர்களுக்கு கீழ் மண்டல, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பணியாற்றுவர்.
வழக்கறிஞர் அணியைப் பொறுத்தவரை அனைத்து நீதிமன்றங்களிலும் தவெக வழக்கறிஞர் குழு அமைக்கப்படும். அதேபோல ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதி வாரியாக வழக்கறிஞர் அணி பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெகவின் மாவட்ட செயலாளரை விட வழக்கறிஞர் அணி செயலாளர்தான் அதிகாரமிக்கவராக இருக்க வேண்டும்; கட்சியின் அனைத்துவித செயல்பாடுகளுக்கும் முதன்மை காரணியாக வழக்கறிஞர் அணி முன் நிற்க வேண்டும் என்றார்.
தவெகவின் வழக்கறிஞர் அணி கூட்டத்தில் 30 முதல் 40 வயதுக்குட்பட்ட வழக்கறிஞர்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றிருந்தனர். அதேபோல ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 10 வழக்கறிஞர்கள்; மாவட்டத்துக்கு 2 வழக்கறிஞர்கள்; சட்டப்பேரவை தொகுதி வேட்பாளருக்கு 1 வேட்பாளர என நியமனம் செய்யப்பட உள்ளனர் என்றும் தவெக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டத்தில் தவெக பொதுச்செயலாளர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
