புதிய தொழிலாளர் சட்டங்களால் ஊழியர்கள் கையில் வாங்கும் சம்பளம் குறையுமா என்ற கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
இந்தியாவில் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ள நிலையில் அது பற்றிய விவாதங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் பல நன்மைகள் இருந்தாலும் சில பின்னடைவுகள் இருப்பதாகவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இந்நிலையில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், புதிய தொழிலாளர் சட்டங்களின் கீழ் ஊழியர்களின் கையில் கிடைக்கும் சம்பளம் குறையாது என்று உறுதியளித்துள்ளது. இது ஊழியர்களின் மிகப் பெரிய கவலையைப் போக்கியுள்ளது. வருங்கால வைப்பு நிதி (PF) பிடித்தங்கள் சட்டப்பூர்வ சம்பள வரம்பின் அடிப்படையில் கணக்கிடப்படும் வரை, கையில் கிடைக்கும் சம்பளத்தில் எந்த பாதிப்பும் இருக்காது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
புதிய தொழிலாளர் சட்டங்கள் கையில் கிடைக்கும் சம்பளத்தை குறைக்காது என்று தொழிலாளர் அமைச்சகம் X தளத்தில் தெளிவுபடுத்தியுள்ளது. அதில், “சட்டப்பூர்வ சம்பள வரம்பின் அடிப்படையில் PF பிடித்தம் செய்யப்படும் வரை புதிய தொழிலாளர் சட்டங்கள் கையில் கிடைக்கும் சம்பளத்தைக் குறைக்காது. PF பிடித்தங்கள் ரூ. 15,000 என்ற சம்பள வரம்பின் அடிப்படையிலேயே தொடரும். இந்த வரம்பிற்கு மேல் செய்யப்படும் பங்களிப்புகள் விருப்பத்தின் பேரிலேயே செய்யப்படுபவை, கட்டாயமில்லை” என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
தற்போது ரூ. 15,000 என்ற சட்டப்பூர்வ சம்பள வரம்பில் 12 சதவீதமாக 1,800 ரூபாயை PF-க்கு பங்களிக்கும் ஊழியர்கள் தங்கள் கையில் கிடைக்கும் சம்பளத்தில் எந்த மாற்றத்தையும் காணமாட்டார்கள். அடிப்படை சம்பளம் 15,000 ரூபாய்க்கு குறைவாக உள்ளவர்களுக்கு, அவர்களின் அடிப்படை சம்பளம் உயர்ந்தால் PF பிடித்தங்கள் சற்று அதிகரிக்கலாம். ஆனால் அது ரூ. 15,000 என்ற வரம்பு வரை மட்டுமே இருக்கும். இந்த வரம்பிற்கு மேல் செய்யப்படும் எந்த PF பங்களிப்பும் புதிய தொழிலாளர் சட்டங்களின் கீழ் முற்றிலும் விருப்பத்தின் பேரிலேயே செய்யப்படுபவை; அது கட்டாயமில்லை என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
புதிய தொழிலாளர் சட்டங்களுக்குப் பிறகு, படிகள் (allowances) சம்பளத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதால் ரூ. 10,000 கணக்கீட்டு நோக்கங்களுக்காக சம்பளத்துடன் சேர்க்கப்படுகிறது. இருப்பினும், சட்டப்பூர்வ வரம்பின்படி PF இன்னும்15,000 ரூபாய்க்கு மட்டுமே கணக்கிடப்படுகிறது. எனவே, முதலாளி மற்றும் ஊழியர் இருவரும் தலா ரூ. 1,800 பங்களிப்பைத் தொடர்கிறார்கள். இதனால் கையில் கிடைக்கும் சம்பளம் ரூ. 56,400 ஆக மாறாமல் அப்படியே இருக்கிறது.
இந்த புதிய விதிமுறைகள் ஊழியர்களுக்கு ஒரு பெரிய நிம்மதியை அளித்துள்ளன. PF பிடித்தம் குறித்த குழப்பங்கள் நீங்கி தங்கள் கையில் கிடைக்கும் சம்பளம் குறையாது என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
