தமிழக சட்டப்பேரவை நாளை ஜனவரி 20-ந் தேதி கூடுகிறது. நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்ற உள்ளார்.
2021-ம் ஆண்டு தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றார். 2022-ம் ஆண்டு சட்டப்பேரவையில் தமது உரையை ஆளுநர் ரவி முழுமையாக வாசித்தார்.
ஆனால் 2023-ல் ஆளுநர் உரையில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், கலைஞர் பெயர்களை உச்சரிக்க மறுத்தார்; மதச்சார்பின்மை உள்ளிட்ட வார்த்தைகளையும் ஆளுநர் ரவி வாசிக்க மறுத்ததால் சர்ச்சை ஏற்பட்டது. அப்போது, ஆளுநர் வாசிக்காத வார்த்தைகள் சபைக்குறிப்பில் இடம் பெறும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க. சட்டப்பேரவையில் இருந்து முதல் முறையாக ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
2024-ம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தமிழ்த் தாய் வாழ்த்தைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடவில்லை என கூறி மீண்டும் வெளிநடப்பு செய்தார் ஆளுநர் ரவி.
2025-ம் ஆண்டு சட்டப்பேரவைக் கூட்டத்திலும் இதே காரணத்தை தெரிவித்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
இந்த பின்னணியில் சட்டப்பேரவையில் நாளை ஆளுநர் ரவி தமது உரையை முழுமையாக வாசிப்பாரா? வழக்கம் போல வெளிநடப்பு செய்வாரா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
