சென்னை மாநகரத்தின் மிக முக்கியமான மற்றும் நெரிசல் மிகுந்த சந்திப்புகளில் ஒன்று அடையாறு சர்தார் பட்டேல் சாலையில் உள்ள மத்திய கைலாஷ் சந்திப்பு.
இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி.), அண்ணா பல்கலைக்கழகம், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, மத்திய தோல் ஆராய்ச்சி மையம், சென்னை தரமணியில் உள்ள அரசு பாலிடெக்னிக்குகள், திரைப்பட கல்லூரி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உள்ளிட்டவைகளை இணைக்கக் கூடியது மத்திய கைலாஷ். இவை மட்டும் இல்லாமல் மத்திய அரசின் நிறுவனங்களும் தரமணி சிஐடி பாலிடெக்னிக் வளாகத்தை சுற்றி அமைந்துள்ளன.
இதனால் மத்திய கைலாஷ் சந்திப்பு எப்போதுமே நெரிசல் மிகுந்த பகுதியாகவே இருந்து வருகிறது. கிண்டி அண்ணா பல்கலைக் கழகம் முதல் அடையாறு சிக்னல் வரையிலான சாலையை கடப்பது மிகப் பெரிய சவாலாக இருந்து வந்தது.
மத்திய கைலாஷில் இருந்து இந்திரா நகர், திருவான்மியூர் ரயில் நிலையங்களைக் கடந்து பெருங்குடி எஸ்.ஆர்.பி. டூல்ஸ்-ல் பழைய மகாபலிபுரம் சாலையைத் தொட வேண்டும். பழைய மகாபலிபுரம் சாலை முழுவதும் சாப்ட்வேர் நிறுவனங்கள், மருத்துவமனைகள் நிறைந்து காணப்படுகின்றன.
இதனால் மத்திய கைலாஷ் மிக முக்கியமான பகுதியாக இருந்து வருகிறது.
மத்திய கைலாஷில் இருந்து ஓஎம்ஆர் சாலையை எளிதாக சென்றடையும் வகையில் தற்போது 652 மீட்டர் நீளத்துக்கு ஒருவழிப் பாதைக்கான எல் வடிவ மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்காக வழக்கத்தைவிட சற்று உயரமாகவே தடுப்பு சுவர்களும் அமைக்கப்பட்டுள்ளன. வேகத் தடை கட்டுப்பாட்டு பலகைகளும் இந்த மேம்பாலத்தில் வைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் வளைவுகளில் சிரமமின்றி செல்ல ஏதுவாக குறுக்குவெட்டு சாய்வுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால், வேகத்தடைகள் இன்றி சீரான பயணத்தை மேற்கொள்ளலாம். இரவு நேரப் பயணங்களுக்குப் போதுமான வெளிச்சம் தரும் வகையில் நவீன மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த மேம்பாலத்தின் வளைவான பகுதிகளில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதைத் தடுக்கும் விதமாக, 30 கிலோ மீட்டர் வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த எச்சரிக்கை பலகைகளும் பாலத்தின் தடுப்புச் சுவர்களில் தெளிவாகப் பொருத்தப்பட்டுள்ளன. இது வாகன ஓட்டிகள் கவனமாகச் சென்று, விபத்துகளைத் தடுக்க உதவும்.
மாநகரப் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் விரைவாகச் செல்வதால், பயண நேரம் குறைந்து, எரிபொருள் சேமிப்புக்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் இந்த மேம்பாலம் பெரிதும் உதவும்.
இந்த மேம்பாலம், மத்திய கைலாஷ் சந்திப்பில் சர்தார் படேல் சாலையில் இருந்து ஓ.எம்.ஆர். சாலைக்குச் செல்லும் வாகனங்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சென்னை நகரத்தின் போக்குவரத்து நெரிசலுக்கும் தீர்வை தரக் கூடிய அம்சமாக இருக்கும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை.
