ரஜினிகாந்தின் கூலி படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது ஏன் என்பது தொடர்பாக மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 20) விளக்கம் அளிக்கப்பட்டது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் கடந்த 14ஆம் தேதி வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையிலும், வசூலில் உலகம் முழுவதும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
எனினும் படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) ‘ஏ’ சான்றிதழை வழங்கியது ஏன் என்ற கேள்வியை பிரபல தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் முன் வைத்தனர். இதனால் படத்தை தியேட்டர்களில் பார்க்க 18 வயதிற்குட்பட்டவர்கள் வர முடியாததால் வசூலிலும் பாதிப்பு ஏற்பட்டதாக ரசிகர்கள் கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில், கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதை எதிர்த்து தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “கடந்த 30 ஆண்டுகளுக்களும் மேலாக நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்தின் படத்திற்கு ’A’ சான்றிதழ் வழங்கப்படாத நிலையில், தற்போது கூலி படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 400 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்துக்கு A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால், திரையரங்குக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைவதால் மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த மனுவை அவசர வழக்காக கருதி கூலி திரைப்படத்துக்கு அளிக்கப்பட்ட A சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “குடும்பத்துடன் திரையரங்குக்கு வருபவர்கள் A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால், குழந்தைகளுடன் படம் பார்க்க அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால், குடும்பத்தில் ஒருவர் படத்தை பார்க்காமல் குழந்தைகளுடன் வெளியே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே A சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்” என வாதிட்டார்.
இன்னும் சில காட்சிகளை நீக்க CBFC கோரியது!
மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ASG) ஏ.ஆர்.எல். சுந்தரேசன், ”ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தின் தணிக்கையின் போது, ’நீங்கள் U/A சான்றிதழ் விரும்பினால், இன்னும் சில காட்சிகளை நீக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு படத்தை தயாரித்த சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் நிறுவனம் மறுத்துவிட்டது. மேலும் ”எங்களுக்கு ‘A’ சான்றிதழைக் கொடுங்கள்” எனக் கூறி அதை ஏற்றுக்கொண்டது. இப்போது அதனை தலைகீழாக மாற்ற முடியாது” என்றார்.
திடீரென U/A சான்றிதழ் கோரியுள்ளனர்!
மேலும், “தயாரிப்பு நிறுவனம் கடந்த ஜூலை 28ஆம் தேதி கூலி படத்தின் CBFC சான்றிதழுக்கு விண்ணப்பித்தது. அதன்படி தணிக்கை பணிகள் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி நிறைவடைந்து சுமார் 10 நாட்களுக்குப் பிறகு தான் படம் திரையரங்குகளில் வெளியானது. அதன் பிறகு ஒரு வாரம் கழித்து, தற்போது திடீரென U/A சான்றிதழ் கோரி உயர் நீதிமன்றத்தை படத் தயாரிப்பு நிறுவனம் அணுகியுள்ளது. இவ்வளவு நீண்ட தாமதத்திற்குப் பிறகு இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய தேவையில்லை. எனவே CBFC பதில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும்” என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோரினார்.
வழக்கை அவசரமாக விசாரிக்க என்ன உள்ளது?
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “கூலி படத்துக்கு A சான்றிதழ் வழங்கப்பட்டதை எதிர்த்து வழக்கை அவசரமாக விசாரிக்க என்ன உள்ளது? படம் வெளியாகி நீண்ட நாட்கள் கடந்த நிலையில் தற்போது வழக்கு தொடர்ந்தது ஏன்?” என படத் தயாரிப்பு நிறுவனத்தை நோக்கி கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிவிட்டதால், CBFC தனது பதில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய போதுமான அவகாசம் வழங்குவதாக கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.