பராசக்தி (Parasakthi) திரைப்படம் ஏன் முக்கியமானது என மூத்த பத்திரிகையாளர் சுகுணா திவாகர் தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் சுகுணா திவாகர் கூறியிருப்பதாவது:
- ‘பராசக்தி’ முழுக்க ஒரு வரலாற்றுப் படமல்ல. வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட புனைவு.
- 1965 இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாட்டில் தி.மு.க மற்றும் மாணவர்களால் நடத்தப்பட்டது. அப்போது தமிழர்கள் மற்ற மாநிலங்களில் குறுகிய மொழிவெறியர்களாகப் பார்க்கப்பட்டார்கள். ஆனால் இப்போது மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்கம் என பல மாநிலங்களில் இந்தி திணிப்பு எதிர்ப்பின் தேவை உணரப்படுகிறது.
- இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் பிற மாநில மாணவர்களும் பங்குபெறுவதாக காட்டுவதன் மூலம் வரலாற்றுடன் சமகால குரல்களையும் நிகழ்காலத் தேவைகளையும் இந்தப் படம் இணைக்கிறது.
- இந்தி எதிர்ப்பு என்பது வெறுமனே உணர்வு சார்ந்த ஒன்று மட்டுமில்லை, ‘இந்தி படித்தால்தான் வேலை வாய்ப்பு’ என்னும் ஆதிக்கம், இளைஞர்களின் வேலை வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் வர்க்கப் பிரச்சினையும் கூட. அதை இந்தப் படம் அழுத்தமாகச் சித்திரிக்கிறது.
- Pan India Cinema என்கிற ஒன்று உருவாகும் முன்பே இந்திய அளவில் வியாபாரமாகும் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், பாபர் மசூதி இடிப்பு ஆகியவற்றை முன்வைத்து தன் திரைப்படங்களுக்கான சந்தையை விரிவுபடுத்தியவர் மணிரத்னம். அந்தப் படங்கள் முற்றிலும் பார்ப்பனிய, இந்து தேசியத்தை முன்வைத்தவை. அதன் தொடர்ச்சிதான் இப்போதைய ராஜமௌலி திரைப்படங்களும்.
சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ திரைப்படமும் பசில் ஜோசப், ராணா என்று பல மாநில நடிகர்களைக் கொண்ட Pan India Cinemaதான். ஆனால் மணிரத்னம், ராஜமௌலியின் ஒற்றை இந்து தேசியத்துக்கு எதிராக அது இந்தியாவின் பன்மைத்துவத்தை முன்வைக்கிறது. அதிலும் மணிரத்னத்தின் கலைப்பள்ளியில் உருவான சுதா, அவருக்கு முற்றிலும் நேரெதிரான இந்தப் படத்தை உருவாக்கியது வரவேற்கத்தக்கது. - எப்படி ஒற்றை இந்து தேசியம் ஆபத்தானதோ, அதேபோல் தமிழ் பேசும் சாதியினரை மட்டுமே தமிழர்களாக வரையறுக்கும் இனவாதமும் ஆபத்தானது.
- முதல் மொழிப்போரில் தமிழர் படை கட்டி நடைபயணம் செய்த பட்டுக்கோட்டை அழகிரி, இன்று இனவாதிகளால் ‘தெலுங்கர்’ என்று தூற்றப்படும் சாதியில் பிறந்தவர். 1960ல் நேருவால் ‘இந்தியைத் திணிக்க மாட்டோம்’ என்று உறுதிமொழி அளிக்கப்பட்ட ஈ.வி.கே.சம்பத், இனவாதிகளால் ‘கன்னடர்’ என்று தூற்றப்படும் சாதியைச் சேர்ந்தவர்.
- இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள், ஈழ ஆதரவுப் போராட்டங்கள், இட ஒதுக்கீட்டுக்கான போராட்டங்கள், கம்யூனிஸ்ட்களின் போராட்டங்கள் என அனைத்துமே மொழிச் சிறுபான்மையினர், மதச் சிறுபான்மையினரின் பங்களிப்புடனே நிகழ்ந்தவை.
எனவே ‘தமிழ்த் தேசியம்’ என்ற பெயரிலான சாதிப் பெரும்பான்மைவாதத்தின் அடிப்படையிலான இனவாதத்துக்கு எதிரான அரசியலையும் இந்த படம் முன்வைத்திருக்கிறது.
பள்ளி, கல்லூரிகளில் இலவசமாக திரையிடுக
பராசக்தி திரைப்படத்தை பள்ளி, கல்லூரிகளில் இலவசமாக திரையிட வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிமுன் அன்சாரி கூறியுள்ளதாவது: 1952 ஆம் ஆண்டு கலைஞரின் வசனத்தில், நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பில் பராசக்தி படம் வெளியானபோது அது சமூகத்தில் புரட்சியை உருவாக்கியது!
2026 -ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் பராசக்தி படம் தமிழர்களின் மொழிப் போராட்ட வரலாற்றை நினைவுப்படுத்தி பிரளயத்தை ஏற்படுத்தியிருக்கிறது!
பட்டைத்தீட்டப்பட்ட வசனங்களும், உணர்ச்சிகரமான காட்சிகளும், திரையரங்கின் வழியே மீண்டும் ஒரு மொழி போராட்ட களத்திற்கு செல்லும் உணர்வை ஊட்டுகிறது!
படத்தைப் பார்க்கும்போது திரையரங்கில் ஒலிக்கும் கைத்தட்டல்களும்; ஆதரவு கொடுக்கும் ஆரவார முழக்கங்களும்; நவீன கால தமிழர்களின் மொழி உணர்வும், இந்தி ஆதிக்க திணிப்புக்கு எதிரான எண்ணங்களும் நீர்த்துப் போகாமல்; ரத்தத்தோடு கலந்து பயணிக்கிறது என்பதை புரிய முடிகிறது!
சரியான தருணத்தில் இத்திரைப்படம் வெளிவந்திருக்கிறது! இதை வீதி வீதியாக ஒளிபரப்ப வேண்டும்! பள்ளிக் கூடங்களிலும், கல்லூரிகளிலும் இலவசமாக திரையிட அரசே முயல வேண்டும்!
